- குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது பெற்றோர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சவால், குழந்தையின் சாதியைக் குறிப்பிட வேண்டுமா, வேண்டாமா என்பதுதான். மாணவர் சேர்க்கையின்போது இல்லாவிட்டாலும், வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்தக் கேள்வியைப் பெற்றோர்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும்என்ற நிலை. பள்ளிக் காலத்திலேயே குழந்தைகளுக்குச் சாதி அடையாளம் தரப்பட வேண்டும் என்பது அவசியமா?
- 1973 ஜூலை 2 அன்று, அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு ஓர் ஆணையை வெளியிட்டது. தொடக்கக் கல்விப் பள்ளிச் சான்றிதழில் சாதி, சமயம் ஆகியவற்றைக் குறிப்பிட விருப்பம் இல்லாதவர்க்கு அதற்கான உரிமையை வழங்கும் ஆணை அது. ஆனால், அது சரியாகக் கடைப் பிடிக்கப்படவில்லை. 31.7.2000 அன்று இந்த அரசாணை (எண். 205) மீண்டும் வெளியிடப்பட்டிருந்தது.
- ‘இந்த முறையானது சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்று அறியப்படுவதால், அரசாணையில் தெரிவித்துள்ளதை இனிவரும் காலங்களிலும் கடைப்பிடிக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார்கள். பள்ளியில் சேரும்போதும் மற்ற சமயங்களிலும் பெற்றோர் விருப்பப்படாவிட்டாலும், தெரிவிக்க இயலாவிட்டாலும் சாதி, சமயக் குறிப்பு தேவையில்லை’ என்றது அந்த அரசாணை.
- அதன் பின்னரும் அந்த அரசாணை சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்றுகோவையில் உள்ள சமத்துவ முன்னணிஎன்ற அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான மு.கார்க்கியின் முன்னெடுப்பினால், 13.06.2013 அன்று இந்த இரண்டு அரசாணைகளையும் சுட்டிக்காட்டி, அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. எல்லா பள்ளியிலும் இந்த அரசாணையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது. 2023ஜூலை 2ஆம் தேதியோடு இந்த அரசாணைவெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
- கல்வி, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை போன்றவற்றில் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது; எனவே, எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிடுவதில் தவறுஇல்லை என்ற வாதம் பலரால் முன்வைக்கப்படுகிறது. இடஒதுக்கீட்டு முறையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழங்கப்படும் முன்னுரிமையை இந்த அரசாணை தட்டிப்பறித்துவிடும் என்பதுஅவர்களின் கருத்து.
- மறுபுறம், சாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள், சாதி அமைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்குச் சாதி அடையாளம் அவசியமில்லை என்றே கருதுகிறார்கள். அதே வேளையில், அவர்களின் குழந்தைகளைப் பொதுப் பிரிவில் சேர்த்தாக வேண்டும் என்பதும் அவசியமில்லை. அவர்களது உரிமையை மறுக்காமல், வேறு வகையில் நிலைநாட்டலாம்.
- சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதற்கும் தமிழ்நாடு அரசுதான் முன்னோடியாக இருந்திருக்கிறது. இது மட்டும் போதாது. பள்ளிச் சான்றிதழில் அவர்களின் குழந்தைகளுக்கு இனம், சாதி என்று கேட்கப்படும் இடங்களில் ‘சாதி/மத மறுப்புத் திருமண இனம்’ என்று மட்டும் குறிப்பிட அரசு அனுமதி வழங்க வேண்டும். இதற்கெனத் தனி இடஒதுக்கீடு வழங்கப்படுவதும் அவசியம். இதன் மூலம், சாதி/மத மறுப்புத் தம்பதியரின் வாரிசுகள் சாதி, மத அடையாளங்களுக்குள் அடைபட வேண்டிய அவசியம் எழாது.
நன்றி: தி இந்து (04 – 07 – 2023)