TNPSC Thervupettagam

சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

October 17 , 2024 90 days 111 0

சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

  • தேசிய பட்டியல் சாதி ஆணையத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 47,000 புகார்கள் பதிவாகியிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. பட்டியல் சாதி மக்கள் மீது காலம்காலமாக இழைக்கப்பட்டு வரும் சாதியக் கொடுமைகளுக்கு இந்தத் தகவல் சமகாலச் சான்றாகியிருக்கிறது.
  • பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பிடிஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்து இந்தத் தரவுகளை தேசிய பட்டியல் சாதி ஆணையம் பகிர்ந்துள்ளது.
  • தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதியக் கொடுமைகள், நில விவகாரங்கள், அரசுப் பணிகள் சார்ந்த சிக்கல்கள் உள்ளிட்டவை முக்கிய விவகாரங்களாக இந்தத் தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கடந்த 2020-2021 ஆண்டில் 11,917 புகார்களும், 2021-2022 ஆண்டில் 13,964 புகார்களும் 2022-2023 ஆண்டில் 12,402 புகார்களும் 2024ஆம் ஆண்டில் இதுவரை 9,550 புகார்களும் பெறப்பட்டுள்ளன.
  • பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினச் சமூகத்தினருக்கான தேசிய உதவி எண் மூலம் 6,02,177 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் 3,10,623 புகார்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்தே பெறப்பட்டுள்ளதாகவும் இந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5,843 புகார்கள் பதிவாகியிருப்பதாகவும், அவற்றில் 1,784 தீர்க்கப்பட்டுள்ளன எனவும் தேசிய பட்டியல் சாதி ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தெரிவித்துள்ளார்.
  • 2022 ஆம் ஆண்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 51,656 வழக்குகளில், உத்தரப் பிரதேசத்தில் பதிவானவை 12,287; அதாவது மொத்த வழக்குகளில் 23.78 சதவீதம். ராஜஸ்தானில் 8,651 (16.75%), மத்தியப் பிரதேசத்தில் 7,732 (14.97%) வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. எண்ணிக்கையில் அதிகமான சாதிய வன்முறைகள் கொண்ட பிற மாநிலங்களின் பட்டியலில் பிஹார் 6,799 (13.16%), ஒடிஷா 3,576 (6.93%), மகாராஷ்டிரம் 2,706 (5.24%) ஆகியவை உள்ளன. மொத்த வழக்குகளில் கிட்டத்தட்ட 81% இந்த ஆறு மாநிலங்களில் பதிவானவை ஆகும்.
  • இந்தப் புகார்களில் பாதிக்கு மேற்பட்டவை விசாரணையில் இருப்பவை என ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் சொல்லப்படுகிறது. தங்களுக்கு வரும் எல்லாப் புகார்களும் பரிசீலிக்கப்படுவதாக கிஷோர் மக்வானா தெரிவித்திருக்கிறார். ஆனால், தேசிய பட்டியல் சாதி ஆணையத்தின் செயல்பாடு குறித்து, பட்டியல் சாதிப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் பலரும் அதிருப்தியில் இருப்பது மறுக்க முடியாதது.
  • வன்கொடுமை வழக்குக்காக நோட்டீஸ் விநியோகிக்கும் அமைப்பு என்கிற அளவிலேயே இந்த ஆணையம் சுருங்கிவிட்டது என்கிற குற்றம்சாட்டு பரவலாக உள்ளது. இந்த ஆணையம் பரிந்துரைகளை மட்டுமே செய்யக்கூடியதாக இருப்பதாக விமர்சிக்கும் சமூகச் செயற்பாட்டாளர்கள், கொள்கை முடிவுகள், சட்டம், பட்டியல் சாதியினர் நலன் ஆகிய நடவடிக்கைகளில் ஆணையம் பங்கெடுப்பது அவசியம் என வலியுறுத்துகின்றனர்.
  • தலித் மக்களுக்கு எதிரான சாதியக் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுவது கடந்த நான்கு ஆண்டுகளில் 39.2 சதவீதத்திலிருந்து 32.4 சதவீதமாகக் குறைந்திருப்பது மேலும் கவலையளிக்கிறது.
  • தேசிய பட்டியல் சாதி ஆணையம் பெரும்பாலும் ஆளும் கட்சிகளின் அழுத்தத்தால் தூண்டப்படக்கூடியதாகப் பரவலாக விமர்சிக்கப்படுகிறது. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட ஆணையத்தில் நடைபெறும் நியமனம் நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமைப் புகார்கள் பதிவாவது அதிகரிக்கும். முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நிச்சயம் சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள்!

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories