TNPSC Thervupettagam

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் அவசியமாகிறது?

July 9 , 2024 186 days 211 0
  • சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாகத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலத்தில் அதிமுக அரசு இதற்காக ஓர் அரசாணையை நிறைவேற்றியது. தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியுமா அல்லது மத்திய அரசின் துணை வேண்டுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

பின்னணி:

  • பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1881இல் தொடங்கி, 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், சாதிவாரியான புள்ளிவிவரத் தரவுகளையும் பிரிட்டிஷ் அரசு எடுத்துவந்தது. இறுதியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு 1931இல் நடத்தப்பட்டது. இதன் பின்னர், 1947இல் விடுதலை கிடைத்த பின், இந்தியாவின் எந்த மத்திய அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவில்லை. மத்திய அரசு 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மட்டுமே நடத்துகிறது.
  • அதில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் போன்ற தரவுகள் இடம்பெறுகின்றனவே தவிர, பிற்படுத்தப்பட்ட சாதியினர், முன்னேறிய வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2009 முதல் 2016 வரையிலான மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2011ஆம் ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியது. அதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அடங்கிய முதல் தரவுக் குறிப்புகள் திரட்டப்பட்டன.
  • ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பின் முழு விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடுவதற்கு அமைச்சரவையின் ஒருமித்த கருத்துகள் இல்லாத காரணத்தால் அவை முடங்கிப்போயின. அன்றைக்கு அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலை வெளியிடக் கூடாது என்று கருத்து தெரிவித்தவர்களில் முக்கியமானவர்கள். அதற்குள்ளாக அவர்களது ஆட்சிக்காலம் முடிவடைந்துவிட்டது.
  • பின்னர், 10 ஆண்டுகள் ஆட்சி செய்து, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்ட பாஜகவின் அரசு இதுவரை சாதிவாரிக் கணக்கெடுப்பை வெளியிடவில்லை. மத ரீதியான கணக்கெடுப்பை வெளியிட்ட பாஜக, சாதிவாரியான கணக்கெடுப்பை வெளியிடுவதற்கு மறுக்கிறது.
  • சரி, இனிமேலாவது சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்துப் புதிதாக அறிவிப்பார்களா என்றால் அதற்கும் அவர்கள் முன்வரவில்லை. இதற்குக் காரணம், இந்தியா முழுமையும் உள்ள மாநிலங்கள் போதுமான அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுக்கவில்லை. சாதிவாரியான கணக்கெடுப்பு கட்டாயம் - அது சமூக நீதிக்கான வித்தாக, விதையாக, உரமாக நிற்கும் என்று கருத்தொற்றுமை ஏற்பட்டால், அதற்குரிய அழுத்தங்களை அதிகப்படுத்த வேண்டும். அதற்கான கோரிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும்.
  • “சுதந்திரத்துக்குப் பின் ஆட்சி அதிகாரம் உயர் சாதியினரிடம் வந்ததன் விளைவே, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெறாததற்குக் காரணம்” என்று குற்றம்சாட்டினார் தந்தை பெரியார். நிர்வாகரீதியில் கொள்கை முடிவுகளை எடுக்கும் இடங்களில் கோலோச்சுகிற உயர் சாதியினர் இதற்கு ஒத்துப்போகாததே காரணமாகும். மத்திய அரசுப் பணிகளில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 27% இடஒதுக்கீட்டை 1990இல் வழங்கிய வி.பி.சிங் தனது ஆட்சி அதிகாரத்தை இழந்தது கவனிக்கத்தக்கது..

மத்திய அரசின் நிலைப்பாடு:

  • பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்களுக்கு ஆட்சியில் முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படுகிறபோதுதான் சமூகநீதி பரவலாக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும். பரவலாக்கப்படாத அதிகாரத்தின் மூலம் எந்த நீதியும் கிடைக்காது. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் நியமனம்வரை இதே நிலைதான் நீடிக்கிறது.
  • எனில், கடைக்கோடியில் இருப்பவனுக்கு உரிய அடையாளம் கிடைக்காமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே தங்கள் துயர்மிகுந்த வாழ்வைக் கடக்க வேண்டியிருக்கிறது. அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் கைவிடுகிறபோது அவர்கள் எங்கு போய் யாரிடம் நீதி கேட்பார்கள்?
  • அடித்தட்டு மக்களின் வாழ்க்கை உயரத்தைத் தொடுவதற்குச் சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியமான ஒன்றாகிறது. அது உணவுப்பொருள்களின் விநியோகத்தில் தொடங்கி, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய ஒன்றாகும். மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் மத்திய அரசு, சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தத் தவறியதில் இருந்து அதன் உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.

முன்னுதாரணமான பிஹார்:

  • பிஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு 2022ஆம் ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முற்பட்டது வரவேற்கத்தக்க ஒன்றாகும். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படாதபோது அடித்தளத்தில் இருக்கும் சமூகத்தினர், குறிப்பாக, கிராமப்புறப் பெண்கள் அதிகாரம் என்னவென்று தெரியாமலேயே தங்கள் வாழ்வைத் தொலைத்துவிடும் அவலம் இந்திய மண்ணில் நிகழ்கிறது.
  • சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், தமிழக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு முனையலாம். அதற்குரிய துணிச்சலோடு இப்பணிகளை அவர்கள் செய்யத் தொடங்கினால், அது சமூகநீதிக்கான அடையாளமாகப் பார்க்கப்படும்.
  • பிஹார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இதேபோன்ற கணக்கெடுப்பை இந்தியா முழுவதும் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழாமல் இல்லை. பிஹாரில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36.01 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.12 சதவீதமும், பட்டியல் சாதியினர் 19.65 சதவீதமும், இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 15.52 சதவீதமும், பட்டியல் பழங்குடியின மக்கள் 1.68 சதவீதமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
  • அதாவது - பிஹாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36 சதவீதத்துடன் அதிக மக்கள்தொகையைக் கொண்டிருக்கின்றனர். அம்மாநிலத்தில் மொத்தம் 113 சாதியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது பிஹார் சட்டப்பேரவையில் 7 சதவீத எம்.எல்.ஏக்கள் மட்டுமே இப்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
  • பிஹாரைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும், ஆரம்ப நாள்களில் இருந்தே உயர் சாதியினரே அம்மாநிலத்தின் அதிகார மையத்தில் ஆதிக்கம் செலுத்திவந்தனர். இதற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்துவருகிறார்கள்.
  • தற்போது சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியான நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் அம்மாநில அரசியலில் தங்களுக்கு உரிய பங்கை, வரும் சட்டமன்றத் தேர்தலில் கோரலாம். ஆக, தேர்தலில் இப்பிரச்சினை பெரிதாக எதிரொலிக்கும். கல்வி, வேலைவாய்ப்புகளிலும் இக்கோரிக்கையின் அழுத்தம் வெளிப்படும்.
  • புத்தன் பிறந்த பிஹாரிருந்து ஒரு சமூக நீதிக்கான வெளிச்சம் பிறந்திருக்கிறது என்கிற நம்பிக்கைக் கீற்று அடித்தளச் சாதிகளின் கட்டமைப்புகளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. இந்தியாவில் இடஒதுக்கீடு நீண்ட காலமாக அமலில் இருந்தாலும், இன்னும் முழுமைப்படுத்தப்பட வேண்டும். பட்டியல் சாதியினருக்கும், பழங்குடி இனத்தவருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றாலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் போதிய உரிமை கிடைக்கப்பெறவில்லை என்பதே நிதர்சனம்!

தாமதத்துக்கான காரணம்:

  • பொருளாதாரரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு சார்ந்து முறையான அடிப்படையுடன் எந்தத் தரவுகளும் இல்லை. இருந்தபோதிலும் பொருளாதார இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. தற்போதைய அமைப்பில் அதிகாரத்தைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட சில பிரிவினரே எல்லாவற்றுக்குமான உரிமையைக் கோருகிறார்கள், பெறவும் செய்கிறார்கள்.
  • ஆகவே, மக்கள் அனைவரும் தமக்குரிய அதிகாரங்களைப் பெறுவதற்குச் சாதிவாரியான கணக்கெடுப்பு அவசியமாகிறது. ஒவ்வொரு சாதி அடுக்கின் சமூகப்பொருளாதாரப் பின்னணியைத் தெரிந்துகொள்வதற்கும், சாதிகள் தங்கள் எண்ணிக்கை சார்ந்து கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் இது அவசியமாகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளித்தபோது, அந்த இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பியிருந்தது நினைவுகூரத்தக்கது.
  • சாதியினரின் எண்ணிக்கை தெரிந்தால், அதே அளவுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெறும் என்பதாலும், கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கும் அழுத்தங்கள் தொடரலாம் என்பதாலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படாமலே காலம் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது.
  • அடித்தட்டு நிலையில் இருக்கும் விளிம்புநிலை மக்கள் கீழே விழாமல் இருப்பதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. இது ஓட்டு அரசியலுக்கானதாக அல்லாமல், நாட்டு அரசியலுக்கானது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டிய தருணம் இது.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories