- இந்திய அரசியலில் மீண்டும் சமூகநீதி முழக்கம் உச்ச விவாதத்துக்கு வந்திருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது; இணையாக அதற்கு எதிரான குரல்களும் ஒலிக்கின்றன. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்; கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அவர்கள் வகிக்கும் இடத்துக்கும், சமூகத்தில் அவர்கள் வகிக்கும் இடத்துக்கான இடைவெளி போக்கப்பட வேண்டும் என்போரே சாதிவாரிக் கணக்கெடுப்பு கோருவோரில் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள்.
- எதிர்ப்பவர்களில் முன்னேறிய சாதிக் குழுக்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். சாதிவாரியிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவுக்குப் புதிதல்ல. 1800-களின் பிற்பகுதியிலேயே பிரிட்டிஷ் ஆட்சியில் அது நடந்திருக்கிறது; சமூகத்தில் சாதிரீதியிலான திரட்சி அதிகரித்தது இப்படியான கணக்கெடுப்பு நிறுத்தப்பட முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தது. அறிவுஜீவிகள் எப்படி இதைப் பார்க்கின்றனர்? நாட்டின் முக்கியமான அறிவுஜீவிகள் சிலரின் கோணங்கள் வழியாக இவ்விவாதத்தைப் பார்ப்போம்.
அஷ்வானி குமார் (அரசியல் அறிவியலாளர்):
- இந்திய ஜனநாயகத்தின் போதாமை தொடர்ந்துகொண்டிருக்கிறது என்ற பின்னணியிலிருந்துதான் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான கோரிக்கை எழுந்திருக்கிறது. நம்பகமான சாதிவாரிக் கணக்கெடுப்புத் தகவல்கள் இல்லாமலேயே, இந்திய மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் எண்ணிக்கை 52% என்றது மண்டல் கமிஷன். ஆனால், அரசமைப்பின் கட்டமைப்பு அல்லது அரசியல் ஆதாயம் காரணமாக 27% இடஒதுக்கீடுதான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் தரப்பட்டிருக்கிறது.
- இதுதான் ஏமாற்றத்தைத் தந்ததற்குக் காரணம். ஆக, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான வளர்ந்து வரும் கூக்குரலை ஒரு பரந்துபட்ட அர்த்தத்தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். அதாவது, 1990-களிலிருந்து நடந்துவரும் ‘மௌனப் புரட்சி’ இன்னும் முற்றுபெறவில்லை என்ற உண்மை உணரப்பட வேண்டும். 1990-களில் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களை நான் மண்டல் -1 என்று சொல்வேன். 2000-களில் கல்லூரிச் சேர்க்கைக்கான இடஒதுக்கீடுகளுக்கான கோரிக்கைகளை மண்டல் 2 என்று சொல்லலாம். இப்போது சாதிவாரிக் கண்க்கெடுப்புக்காக தொடங்கியிருக்கும் கோரிக்கைகள் மண்டல் 3 என்று சொல்லலாம். இடஒதுக்கீட்டில் 50% எனும் உச்சவரம்பை நீக்குவதும் இதன் முக்கியமான அம்சமாக இருக்கிறது — இந்திய ஜனநாயகத்தில் சமரசத் தீர்வுக்கான மிகவும் சிக்கலான, மாற்றத்தை எதிர்நோக்கும் காலகட்டமாக இது இருக்கிறது.
சுப்ரி ரஞ்சன் (முனைவர் பட்ட ஆய்வாளர், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம்):
- விளிம்புநிலையில் உள்ள பிரிவினரில் சில பிரிவுகள் இடஒதுக்கீட்டின் பயன்களை அடைய முடியவில்லை. இதுவே சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான கோரிக்கைக்கு ஆதாரமாகிறது. நீதிபதி ஜி.ரோகினி ஆணையம் வெளியிட்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பான அறிக்கை இதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. குறிப்பாக, கிளைக் குழுக்களைப் பற்றி இந்த அறிக்கை அக்கறை காட்டுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசின் நிறுவனங்களில் நடந்திருக்கும் பணி நியமனம், மத்திய உயர்கல்வி நிலையங்களில் நிரப்பப்பட்டிருக்கும் இடங்கள் இரண்டையும் எடுத்துப் பார்த்தால், அதிர்ச்சி தரும் நிலை இருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் 97% இடங்களை 25% சாதிகள் எடுத்துக்கொண்டிருக்கின்றன; இன்னும் குறிப்பாக 10% சமூகங்கள் 24.95% வேலைகளையும் கல்லூரிச் சேர்க்கைகளையும் பெற்றிருக்கின்றன; குறிப்பாக 983 சமூகங்கள் (37%) ஒன்றிய அரசு வேலைகளிலோ மத்தியப் பல்கலைக்கழங்களிலோ ஒரு இடத்தைக்கூட பெறவில்லை என்பதை இந்த அறிக்கை சொல்கிறது. இதுதான், வெவ்வேறு சமூகக் குழுக்களின் சமூக, பொருளாதார நிலைமை குறித்தான துல்லியமான தகவல்களை எதிர்பார்க்கும் விருப்புறுதி உருவானதற்குக் காரணம்.
யோகேந்திர யாதவ் (தேசியத் தலைவர், ‘ஸ்வராஜ் இந்தியா’):
- எந்த நோயையும் நிர்மூலமாக்குவதற்கு முதலில் நீங்கள் தகவலிலிருந்துதான் தொடங்க வேண்டும். அதேதான், சாதி அமைப்பு எனும் நோய்க்கும். அம்பேத்கரின் ‘சாதியை அழித்தொழிக்கும்’ அறைகூவலை நாம் உண்மையிலேயே தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என்றால் சாதி அமைப்பின் போதாமையையும் அனுகூலங்களையும் அளவிட்டுத்தான் ஆக வேண்டும். மிக முக்கியமாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றால் முறையான சாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லாமல் எப்படிச் சாத்தியம்? இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதை 1990-லிருந்து சட்டம் அனுமதிக்கிறது.
- இது இப்போது கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான இடஒதுக்கீட்டில் பிரதான பங்கு வகிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஏதேனும் சாதியைச் சேர்ப்பதற்கும் நீக்குவதற்குமான ஆதாரங்களை வழங்குமாறு நீதிமன்றங்கள் திரும்பத்திரும்பக் கேட்கின்றன. இதற்கெல்லாம், சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம். சாதிவாரிக் கணக்கெடுப்பை மறுத்துவிட்டு, ஒரு சமூகக் குழுவுக்கு இப்படியான நடவடிக்கைகளை அனுமதிப்பது வேறு எந்த நாட்டிலும் நிகழ்ந்தேறாத அபத்தம். மண்டல் அறிக்கையை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகாக, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த அபத்தத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறோம். இந்தத் தேசிய ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் இது.
பத்ரி நாராயணன் (இயக்குநர், ஜிபி.பந்த் சமூக அறிவியல் நிறுவனம்):
- சாதிவாரிக் கணக்கெடுப்பானது சாதித்தன்மையையும் சாதிவுணர்வையும் இந்தச் சமூகத்தில் வளர்த்தெடுக்கவே செய்யும். “நீங்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்?” என்று அரசு கேட்கும்போது அது எப்படியான சாதிவுணர்வை வளர்த்தெடுக்கும் என்று கற்பனை செய்துபார்ப்பது கடினமான விஷயமல்ல. தனிநபர்களை நவீனக் குடிநபர்களாக மாற்றும் திட்டத்தைப் பலவீனப்படுத்துவதாகவே சாதிவாரிக் கணக்கெடுப்பு இருக்கும். இந்தியாவானது 3,000 சாதிகளாகவும், 25,000 உபசாதிகளாகவும் பிரிந்திருக்கிறது. சாதி அடிப்படையில் வளங்களைப் பிரித்துக்கொடுக்க ஒரு அரசு திட்டமிடுமானால் அது குழப்பமூட்டக்கூடியதாக இருக்கும் என்பதோடு, கொள்கை வகுப்பதில் அராஜகத்தையும் கொண்டுவிடும். சரியான விகிதத்தில் வளங்களைப் பிரித்துக்கொடுக்க வசதியாக இருக்கும் என்று சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இது இருமுனைக் கத்தியைப் போன்றது. முரண்களையும் பதற்றங்களையும் பொறாமைகளையும் வெவ்வேறு சாதிகளுக்கிடையே கொண்டுவரும்.
- இப்போது இருப்பதுபோல உயர்சாதிகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குமானதாக இல்லாமல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள்ளும் பட்டியலினத்தவர்களுக்குள்ளும் மோதலை வளர்த்தெடுப்பதாக இருக்கும். ஆக, அரசியலர்களுக்கு அவர்களுடைய அரசியல் ஆதாயங்களுக்கும் சாதிரீதியான செயல்திட்டங்களுக்கும் உதவுவதாக இது இருக்குமே தவிர சாதியை அழித்தொழிப்பதற்கு உதவாது. மாறாக, சாதியை அழித்தொழிக்கும் லட்சியத்தைப் பலவீனப்படுத்தவே செய்யும்.
காஞ்சா அய்லய்யா (அரசியல் கோட்பாட்டாளர், ‘எருமை தேசியம்’ நூலாசிரியர்):
- கிட்டத்தட்ட எல்லா மாநிலக் கட்சிகளுமே சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றன. காரணம், சில மாநிலக் கட்சிகள் ஏற்கெனவே சாதிவாரியான தகவல்களைத் தங்களுடைய பயன்பாட்டுக்காகச் சேகரித்து வைத்திருக்கின்றன. ஆனால், இருபிறப்பாளர்கள் — குறிப்பாக, பிராமணர்கள் — மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எனும் யோசனையையே நிராகரிக்கக் கூடியவர்கள்.
- இருபிறப்பாள அறிவுஜீவிகள் இதற்கு முன்பும் ஆதரிக்கவில்லை, இப்போதும் இல்லை. மண்டல் இடஒதுக்கீட்டையும் இந்த அறிவுஜீவிக் குழு எதிர்த்தது. பெரும்பாலான சூத்திரர்களும்கூட சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கும்போது இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?
- ஏனென்றால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இருந்தபோதும் ஐஐடி, ஐஐஎம் மற்றும் பல மத்தியப் பல்கலைக்கழகங்கள் அவர்களுடைய அதிகாரத்தின் கீழ்தான் இருக்கின்றன. வெளிநாடுகளில் அமைந்துள்ள தூதரகங்கள் உட்பட புது டெல்லி நிர்வாகத்தைக் கிட்டத்தட்ட அவர்கள்தான் இயக்குகிறார்கள்.
- சாதிவாரியான அதிகாரபூர்வத் தகவல்கள் வந்துவிட்டன என்றால் பல ‘உயர்’ சாதிகளும்கூட தாங்கள் முக்கியமான நிர்வாகக் கட்டமைப்பில் இல்லை என்பதை உணர்ந்துகொள்வார்கள். அதை இருபிறப்பாளர்கள் விரும்பவில்லை. மாநிலக் கட்சிகளுக்கு வேறு ஆதாயக் கணக்குகள் இருப்பதால் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றன. பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற தேசியக் கட்சிகளெல்லாம் இருபிறப்பாள வலைப்பின்னலுடன் உணர்வுபூர்வமான உறவைப் பராமரிப்பதால் அவை சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கவே விரும்புகின்றன.
நன்றி: அருஞ்சொல் (01 – 10 – 2021)