TNPSC Thervupettagam

சாத்தியமாகுமா அசாத்தியம்? | சமூக ஊடகங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பு

September 30 , 2019 1938 days 893 0
  • சமூக ஊடகங்களை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை எதிர்த்து முகநூல் நிறுவனம் தொடுத்த மனு உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறது.
  • சென்னை, மும்பை, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை எல்லாம் தானே விசாரிப்பது என்கிற உச்சநீதிமன்றத்தின் முடிவு வரவேற்புக்குரியது. 
சமூக ஊடகங்கள்
  • சமூக ஊடகங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பது தேசப் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அவசியமாகிறது என்கிற வாதத்தைப் போலவே அது தனிநபர்களின் தன்மறைப்பு நிலைக்கு (பிரைவஸி) எதிரானது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால், இந்தப் பிரச்னையை உச்சநீதிமன்றம் விசாரணக்கு எடுத்துக் கொண்டிருப்பது மிகவும் தேவையானதும்கூட.
  • சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் சர்வதேச அளவில் மிகப் பெரிய பிரச்னையாக உருவாகியிருக்கின்றன.
  • அமெரிக்காவிலேயே டொனால்ட் டிரம்ப்பின் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் சமூக ஊடகங்களின் மூலம் அவருக்கு ஆதரவாகவும், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருந்த ஹிலாரி கிளின்டனுக்கு எதிராகவும் ரஷியா செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது. 
  • சர்வதேச அளவில் தடையில்லாத சமூக ஊடக கருத்துச் சுதந்திரம் குறித்து விவாதம் எழுந்திருக்கிறது. பொய்ச் செய்திகள், வதந்திகள், குழந்தைகள் சார்ந்த பாலியல் பரப்புரைகள், வன்முறைச் செய்திகள் ஆகியவை சமூக ஊடகங்களின் மூலம் தங்குதடையில்லாமல் பரப்பப்படும் சூழலில், அரசு முற்றிலுமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும் என்கிற வாதம் தர்க்க ரீதியாகவும், தார்மிக ரீதியாகவும் சரியல்ல.
  • இந்தப் பிரச்னை தன்மறைப்பு நிலைக்கு எதிரானது என்பதால் அரசு பாராமுகமாக இருந்துவிடவும் முடியாது என்பதைப் பல்வேறு நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
  • சமூக  ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அனைவருடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் அரசு கண்காணிப்பது என்பதும் ஏற்புடையதாக இல்லை.
  • அதனால், இது மிகவும் சிக்கலான பிரச்னையாக மாறியிருக்கிறது. 
ஆதார் தகவல்கள்
  • ஆதார் தகவல்களை சமூக  ஊடக உறுப்பினர் அடையாளத்துடன் இணைப்பதிலும் சில கேள்விகள் எழுகின்றன. சமூக  ஊடகங்கள் சர்வதேச அளவில் செயல்படுபவை. ஒரு குறிப்பிட்ட நாட்டின் ஆதார் எண் இணைக்கப்படுவதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை.
  • வெளிநாட்டில் சமூக ஊடகக் கணக்கைத் தொடங்கி அதிலிருந்து தவறான செய்திகளையும் வதந்திகளையும் ஒருவர் பரப்ப முற்படும்போது அதை எப்படித் தடுப்பது? தாங்கள் விரும்பாமலேயே தங்களது முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை கணக்குகளில் வந்துவிழும் செய்திகளுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பதால் இங்கிருப்பவர்களைப் பொறுப்பாக்கி விட முடியுமா?
  • சமூக  ஊடகக் கணக்குகளுடன் செல்லிடப்பேசி எண்கள் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆதாரை இணைப்பது தேவை என்று தோன்றவில்லை. செல்லிடப்பேசி இணைப்புப் பெறுபவர்களின் எல்லா விவரங்களும் ஏற்கெனவே பெறப்படுகின்றன.
  • வங்கிக் கணக்குகளுக்குக்கூட ஆதார் தேவையில்லை என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், இப்போது ஆதாரை இணைக்கக் கோருவது தேவையில்லாத நீதிமன்ற வழக்குகளுக்குத்தான் வழிகோலும். 
  • தவறான செய்திகளும், வதந்திகளும் புதிதொன்றுமல்ல. இவை இணையம் வருவதற்கு முன்பிருந்து இருந்து வருகின்றன. எல்லா நாடுகளுக்கும் சமூகங்களுக்கும் அவை பொதுவானவை.
  • அவற்றின் மூலத்தை அறிந்து கட்டுப்படுத்துவது என்பது இயலாத ஒன்று என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்காக வதந்திகளைப் பரப்புவோரையும், அவதூறுகளைப் பரப்புவோரையும் வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதும் அர்த்தமல்ல. 
  • வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகம் உள்ளிட்ட பாரம்பரிய ஊடகங்களைப் பொருத்தவரை பல கடுமையான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.
  • செய்திகள் அவரவர் அளவில் தணிக்கை செய்யப்பட்டு தவறான செய்திகளும், வெறுப்பைப் பரப்பும் செய்திகளும், மற்றவர்களைப் புண்படுத்தும் தகவல்களும், பொதுநல நோக்கில் அந்த ஊடகங்களால் கண்காணிக்கப்படுகின்றன.
  • அதை மீறி அந்த ஊடகங்கள் செயல்படும்போது அவற்றின் மீது வழக்குத் தொடரவோ, தண்டிக்கவோ சட்டங்கள் இருக்கின்றன. 
  • இணையம்  என்பது அப்படி அல்ல. இது  ஒரு புதுமையான, வித்தியாசமான உலகை முழுவதுமாக தன்வயப்படுத்தியிருக்கும்  அசுரன். ஆரம்பம் முதலே தேவையான கட்டுப்பாடுகள் இல்லாமல் பூதாகரமாக வளர்ந்துவிட்டிருக்கும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு.
சமூக ஊடகங்கள்
  • சமூக  ஊடகங்களைப் பாரம்பரிய ஊடகங்களைப் போலவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை மிகவும் காலதாமதமாக எழுந்திருக்கிறது. இதற்கு அந்த ஊடகங்கள்தான் வழிகாண முடியுமே தவிர, அரசோ, நீதித்துறையோ விடைகாண முடியாது. 
  • தனிநபர் குறித்த தகவல்கள், இணைய வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் எல்லாமே வணிகப்படுத்தப்படுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் இப்படியே செயல்படுவதை அனுமதிக்க முடியாது.
  • தனியார் வணிக நிறுவனங்களின் தேவைகளுக்காக இயங்கிவரும் சமூக  ஊடகங்கள் ஜனநாயகத்துக்கும், தேசத்தின் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் நிலையில், இது குறித்த ஆழ்ந்த சிந்தனை அவசியமாகிறது.
  • தன்மறைப்பு நிலைக்குப் பாதிப்பில்லாமல் சமூக ஊடகங்களில் காணப்படும் தவறுகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதற்கு உச்சநீதிமன்றத்தால் விடை பெற முடிந்தால் மகிழ்ச்சி. ஆனால், தொழில்நுட்பத்தால்தான் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. 

நன்றி: தினமணி (30-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories