- புற்றுநோய் சிகிச்சைக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர் மருத்துவர் சாந்தா. அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஒரு மருத்துவருக்கு இவ்வளவு மரியாதை கிடைப்பது அரிதான ஒன்றே. மக்கள் சேவையால் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சாந்தா.
- தனது அர்ப்பணிப்பு, மருத்துவ சேவையில் அவர் காட்டிய ஈடுபாடு, புற்றுநோய் சிகிச்சையில் ஏற்படுத்திய முன்னேற்றங்கள் போன்றவை அவரை மக்களின் மனங்களில் இடம்பெறச் செய்துள்ளது.
- சாந்தா அர்ப்பணிப்பு மிகு வாழ்க்கையை வாழ்ந்தது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. அவரது வாழ்க்கைச் சூழல், வளர்க்கப்பட்ட முறை அவரை இப்படி உருவாக்கின என்றும் கூறலாம்.
- அவரது உறவினர்களில் பலர் மிகச் சிறந்த கல்வியாளர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் சர்.சி.வி.இராமன், சந்திரசேகர் போன்றோரின் தாக்கம் அவரிடம் இருந்துள்ளது . இது கல்வியின் மீதான நாட்டத்தை அதிகரித்துள்ளது. அவரது தாயார் செவிலியர் படிப்பைப் படிக்க வேண்டும் என கருதியுள்ளார்.
- அவரது கனவு வெற்றி பெறவில்லை. எனவே, மகளை மருத்துவராக ஊக்கப்படுத்தியுள்ளார். சுதந்திரமாகவும் சமூக மரியாதையுடனும் திகழும் வகையில் வாழ வேண்டும் என்ற உணர்வும் சாந்தாவிடம் இருந்துள்ளது. இவை அவரை மருத்துவப் படிப்பைத் தெரிவுசெய்ய உதவியுள்ளன.
மருத்துவக் கல்லூரிச் சூழல்
- சென்னை மருத்துவக் கல்லூரி சமூக அக்கறை உள்ள பல மருத்துவர்களை உருவாக்கிய வரலாற்றை கொண்டது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவரான முத்துலட்சுமி ரெட்டி படித்ததும் இக்கல்லூரியில்தான். கமலம்பாள், கேப்டன் லெட்சுமி போன்ற பெண் மருத்துவர்கள் மிக முக்கியமானவர்கள்.
- இவர்களெல்லாம் முற்போக்குச் சிந்தனையுடன் வார்த்தெடுக்கப்பட சென்னை மருத்துவக் கல்லூரியின் சூழல் உதவியுள்ளது. மருத்துவர் கமலம்பாள் மருத்துவர் சாந்தா ஆகியோரிடையே நெருக்கமான நட்பும் இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டியின் மகன் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தியுடனான நட்பு அவரிடம் புற்றுநோய் சிகிச்சையின் மீது நாட்டத்தையும் சேவை மனப்பான்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
- விடுதலைக்கு முன்பும் அதற்கு பின்பும் நிலவிய இந்திய அரசியல் சூழல், அரசியல் இயக்கங்களின் கருத்துகள் இந்த இளம் மருத்துவர்களின் சிந்தனையை ஈர்த்துள்ளன. அவை அவர்களை சேவை மனப்பான்மை மிக்கவர்களாக வார்த்தெடுத்துள்ளன.
- நாட்டின் மருத்துவக் கட்டமைப்பில் இருந்த போதாமை, புற்றுநோய் சிகிச்சைக்கான வசதிகள் இல்லாதது, புற்றுநோய் குறித்த தவறான எண்ணங்கள், மூடக் கருத்துக்கள் போன்றவை முத்துலெட்சுமி ரெட்டிக்குப் புற்றுநோய் சிகிச்சைக்கான தனி மையத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தின.
- தனது தங்கை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் வேதனைப்பட்ட துயரமும் இதற்குக் காரணம். முத்துலெட்சுமி ரெட்டியின் இந்தக் கனவை நனவாக்க மிகப் பெரும் பங்காற்றியவர்கள் அவரது மகனான கிருஷ்ணமூர்த்தியும் சாந்தாவும்தான். மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி புற்றுநோய் சிகிச்சைத் துறையில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பெற்ற பயிற்சிகளும் இதற்கு உதவின.
புற்றுநோய் சிகிச்சை மையம்
- இந்தப் புற்றுநோய் சிகிச்சை மையம் 12 படுக்கைகளுடன் குடிசைகளில் தொடங்கப்பட்டது. காந்தியின் ஆசிரம வாழ்க்கை முறை ஏற்படுத்திய தாக்கம் இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
- இம்மையத்தை இந்தியாவின் அந்நாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு 1952- ல் தொடங்கிவைத்துள்ளார். இந்தியாவில் அறிவியல் துறைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நேருவின் கனவும் இவர்களுக்கு உதவியாக அமைந்துள்ளது.
- 1956-ல் இந்திய அணு ஆராய்ச்சி மையம், புற்றுநோய் சிகிச்சைக்கான கதிரியக்கக் கருவியை இந்த மையத்துக்குக் கொடையாக வழங்கியது மிக முக்கியமான நிகழ்வாகும்.
- வெறும் 12 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட இம்மையம் தற்போது 450-க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் செயல்படுகிறது. தென்னிந்தியாவில் புற்றுநோய்க்கான மிகப் பெரிய மருத்துவ மையமாக இது மாறியுள்ளது.
- இந்த மகத்தான சாதனைக்குப் பின்னால், மருத்துவர் சாந்தாவின் கடும் உழைப்பு உள்ளது. மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி மறைவுக்குப் பின்பு இந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை அவரே ஏற்று நடத்தினார். புற்றுநோய் சிகிச்சையில் மட்டுமின்றி அதன் ஆராய்ச்சியிலும் அக்கறை செலுத்தியவர் மருத்துவர் சாந்தா.
- புற்றுநோய் சிகிச்சைத் துறையில் ஏராளமான மருத்துவர்களை அவர் உருவாக்கியுள்ளார். நாடு முழுவதும் அவர்கள் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். புற்றுநோயைத் தடுப்பதில் தனிக் கவனம் செலுத்தியவர் சாந்தா. அதற்கான விழிப்புணர்வு இயக்கங்களைத் தொடர்ந்து நடத்திவந்தார். புகழ் பெற்ற திரை நட்சத்திரங்களையெல்லாம் அதில் ஈடுபடச் செய்தார்.
- ‘புற்றுநோய் பாவச் செயலால் உருவாவது. அதைக் குணப்படுத்த முடியாது’ போன்ற தவறான எண்ணங்களைத் தகர்ப்பதில் அவர் மகத்தான பங்காற்றினார். அறிவியலுக்கும் அறிவியல் மனப்பாங்குக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். எனவேதான் தனது இறப்புக்குப் பிறகு எந்தச் சடங்குகளையும் செய்யக் கூடாது எனக் கூறியுள்ளார்.
- புற்றுநோயாளிகள் அந்நோய் வந்தவுடன் படும் மன வேதனை அளவிட முடியாதது. புற்றுநோயாளிகளுக்கு முதலில் தேவைப்படுவது ஆறுதல். துணிவு. குணமடைய முடியும் என்ற நம்பிக்கை. அதை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தியவர் சாந்தா.
- ஒரு மருத்துவர் நோயாளியிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணம் அவர். நோயாளிகளிடம் கனிவோடும் அன்போடும் நடந்து கொண்டவர் அவர். பணம் இல்லை என்பதற்காக ஒரு நோயாளிக்கு சிகிச்சை கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதில் கவனமாகவும் அக்கறையோடும் செயல்பட்டவர் மருத்துவர் சாந்தா.
மருத்துவம் வணிகமல்ல
- மருத்துவம் என்பது மக்களுக்கானது; அது வணிகத்துக்கானது அல்ல என்ற உணர்வு தன் மனதில் ஆழ வேரூன்றியதன் காரணமாகவே அவர் புற்றுநோய் சிகிச்சை சேவையில் ஈடுபட்டார்.
- புற்றுநோய்க்காகவே தனி மையம் வேண்டும்; அது வணிக நோக்கில் அமையக் கூடாது என்பதால்தான், அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தை வளர்த்தெடுப்பதில் நாட்டம் கொண்டார். அவர் மகப்பேறு மருத்துவப் படிப்பை முடித்த காலத்தில் அத்துறையில் தொழில் செய்யத் தொடங்கியிருந்தால் பல கோடி மதிப்புள்ள சொத்துகளுக்குச் சொந்தக்காரராக மாறியிருப்பார்.
- ஆனால், அவரது சேவை மனப்பான்மை அவரைக் கடைசி வரை எளிமையாக, சிக்கனமாக, அர்ப்பணிப்போடு வாழச் செய்துள்ளது. தனக்குக் கிடைத்த அரசுப் பணியையும் விட்டுவிட்டு, புற்றுநோய்க்கென்றே தனி மையத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது லட்சியத்தை ,முத்துலெட்சுமி ரெட்டி, கிருஷ்ணமூர்த்தி போன்றோருடன் இணைந்து நனவாக்கிக்கொண்டவர் சாந்தா.
- அந்த மருத்துவ மையத்தை விட்டுத் தான் எந்த நிலையிலும் பிரிந்துவிடக் கூடாது என்ற உணர்வோடு, தனது அஸ்தியைக் கூட அந்த மருத்துவ மையத்தின் மீதே தூவிவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
- அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் மருத்துவர் சாந்தாவின் அடையாளம். அவருடைய உயிர் மூச்சு. அது இருக்கும் வரை அவரது நினைவுகளும் இருந்துகொண்டே இருக்கும்.
- புற்றுநோயைத் தடுப்பதும், அந்நோய் வந்தவர்களுக்கான சிகிச்சையை, அவர்கள் எவ்வளவு ஏழைகளாக இருந்தாலும், உறுதிப்படுத்துவதுமே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (21 - 01 - 2021)