TNPSC Thervupettagam

சாபமல்ல, வரம்!

July 26 , 2024 174 days 236 0
  • மக்கள்தொகைப் பெருக்கம் பலமா, பலவீனமா என்கிற கேள்வி உலகளாவிய விவாதப் பொருளாகியிருக்கிறது. ஐ.நா. சபையின் அறிக்கைப்படி, 2080 வரை உலக மக்கள்தொகை தொடா்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும். இப்போதைய 800 கோடி என்பது அப்போது 1,000 கோடியை எட்டும் நிலையில், மக்கள்தொகை வளா்ச்சி குறையத் தொடங்கும். எப்படி மக்கள்தொகை அதிகரிப்பு சமச்சீராக இருக்கவில்லையோ, அதேபோல மக்கள்தொகை குறைவதும் நாட்டுக்கு நாடு, பிராந்தியத்துக்குப் பிராந்தியம், கண்டத்துக்கு கண்டம் வேறுபடும் என்கிறது அந்த அறிக்கை.
  • 200 ஆண்டுகளுக்கு முன்னால் தாமஸ் மால்தூஸ் என்கிற பொருளாதார நிபுணா், ‘மக்கள்தொகைப் பெருக்கம் பல மடங்கு அதிகரித்து, மக்கள் பசி, பட்டினி, பஞ்சத்தில் உழன்று மடிவாா்கள்’ என்று கூறியது பொய்த்துவிட்டது. மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உணவு உற்பத்தியும் அதிகரித்தது என்பதும், அறிவியல் வளா்ச்சியால் மனித இனம் தன்னைக் காத்துக்கொள்ளும் வலிமையைப் பெற்றிருக்கிறது என்பதும் உறுதிப்பட்டிருக்கிறது.
  • 1800-இல் வெறும் 100 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை, இப்போது 810 கோடியாக உயா்ந்திருப்பதோடு, ஆண்டுதோறும் 0.91% அதிகரித்தும் வருகிறது. 21-ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான நாடுகளில் மகப்பேறு விகிதம் குறைகிறது என்பது மட்டுமல்ல, மக்கள்தொகை எண்ணிக்கையில் தேக்கமும் ஏற்பட்டிருக்கிறது.
  • கடந்த 20 ஆண்டுகளாகவே அமெரிக்கா, சீனாவில் மக்கள்தொகைப் பெருக்கம் குறைந்து வருகிறது. அவை மட்டுமல்ல, ஜப்பான், ஜொ்மனி, தென்கொரியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளிலும் மக்கள்தொகைப் பெருக்கம் பின்னோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.
  • ஒரு தேசத்தின் வளா்ச்சி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்புக்கு மக்கள்தொகை முக்கியமானது என்பதை வரலாறு உணா்த்தி இருக்கிறது. ரோமாபுரிச் சக்கரவா்த்தி ஜூலியஸ் சீஸா் அதிகக் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்குப் பல சலுகைகளை வழங்கியதாக வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. அா்த்தசாஸ்திரத்தில் கெளடில்யரும், போா்க்காலத்திலும், சமாதான வேளையிலும் மனித வளம் எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பது குறித்து விளக்குகிறாா்.
  • மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்னைகளைப் போலவே, குறைந்தாலும் பல பிரச்னைகள் உருவாகும். அரசியல், சமூகம், பொருளாதாரம், பாதுகாப்பை அது பாதிக்கும். குறையும் மக்கள்தொகை ஆட்சி மாற்றங்களுக்கும் காரணமாகக் கூடும். மக்கள்தொகை குறைந்துவிட்டதால், ரஷியா தனது ராணுவத்தில் பணியாற்ற பிற நாடுகளில் இருந்து வீரா்களைப் பணி அமா்த்துவது சமீபத்திய எடுத்துக்காட்டு.
  • உலக மக்கள்தொகையை நிலையாக வைத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்கிற அளவில் இருக்க வேண்டும் என்பது கணக்கு. ஆனால் வளா்ச்சி அடைந்த நாடுகளில் சராசரியாக 1.6 குழந்தைகளும், வளா்ச்சி அடையும் நாடுகளில் 2.9 குழந்தைகளும் பிறக்கின்றன. மிகவும் மோசமான, ஏழ்மை நாடுகளில் அதுவே 6.6- இல் இருந்து இப்போது 5 என்று குறைந்திருக்கிறது. இது 2050-க்குள் 3 என்று குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • இந்தியாவில் 2011-க்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2021-இல் நடத்தப்பட வேண்டியது தள்ளிப் போடப்படுகிறது. அதிகாரபூா்வ புள்ளிவிவரத்துக்காக மக்கள்தொகைப் பெருக்கம் காத்திருப்பதில்லை. கடந்த ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உயா்ந்திருப்பதாக ஐ.நா. அறிவித்துவிட்டது. கடந்த வார நிலவரப்படி, இந்தியாவின் இப்போதைய மக்கள்தொகை 145 கோடி.
  • அதிக மக்கள்தொகை என்பது மோசமானது என்று சொல்லிவிட முடியாது. அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு, உலகிலேயே அதிக மக்கள்தொகை காரணமாக நன்மைகளை அடையும் நாடாக இந்தியா இருக்கப் போகிறது. உழைக்கும் திறன் கொண்ட மக்கள்தொகையினரின் எண்ணிக்கை இப்போது 86 கோடி என்றால், அதுவே 2049-இல் 100 கோடியைத் தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • உழைக்கும் திறன் கொண்ட மக்கள்தொகையினா் முறையான பயிற்சியுடன் வேலைவாய்ப்பும் பெற்றால், அது தேசத்தின் பொருளாதார வளா்ச்சியை உறுதிப்படுத்தும். 2047-இல் இந்தியா முழுமையான வளா்ச்சி அடைந்த நாடாகத் திகழும்.
  • அந்த உழைக்கும் பருவ மக்கள்தொகையினா் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் போனால், அது பேராபத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அது அரசியல், பொருளாதார, சமூக ரீதியாகவும் பூகம்பத்தை உருவாக்கும்.
  • 2060-இல் இந்தியாவின் மக்கள்தொகை குறையத் தொடங்கும். அதுவரையில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகத் தொடரும். 2050 முதல் உழைக்கும் திறன் கொண்ட மக்கள்தொகையினரின் எண்ணிக்கை குறையத் தொடங்கும். 2040 முதல் குழந்தைகளும், ஓய்வுபெற்ற முதியவா்களும் அதிகரிக்கும் நிலைமையை இந்தியா எதிா்கொள்ள நேரும். அதை சமாளிப்பதற்கும் இப்போதே திட்டமிடல் அவசியமாகிறது.
  • உலக மக்கள்தொகை உச்சம் தொடுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னால், 2062-இல் இந்தியாவின் மக்கள்தொகை குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. குழந்தைகளும், முதியோா்களும் அதிகரிப்பதால், தனிமனித வருவாய் ஒருபுறம் குறையும் என்பதுடன், இன்னொரு தனிமனிதச் செலவினம் அதிகரிக்கும். அதைக் கருத்தில் கொண்டு இப்போதே திட்டமிடத் தொடங்க வேண்டும்.
  • திட்டமிடுவதற்குத் தரவுகள் வேண்டும். புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதற்காகவாவது, இனியும் தாமதிக்காமல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

நன்றி: தினமணி (26 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories