- நாடு என்பது பூகோளப் படம் அல்ல, அங்கு வாழும் மக்களின் உணர்ச்சித் தொகுப்பு. நாடு வாழ, நம்முடைய உழைப்பும் தேவை என்ற உணர்வு எல்லோருக்கும் எழ வேண்டும் என்று கூறியவர் சி.என்.ஏ. என்கிற சின்னக்காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை.
- எழுத்தாலும், பேச்சாலும் மட்டும் தமிழர்களின் இதயத்தில் முன்னாள் முதல்வர் அண்ணா இடம்பிடிக்கவில்லை; தனது பாசத்தால் தமிழ் இதயங்களைக் கவர்ந்த பண்பு நலன் கொண்ட தமிழர்.
அண்ணா....
- அண்ணா என்கிற சாமானியனின் பின்னால் ஒரு சரித்திரமே கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது என்று சொன்னால், தமிழர்களின் அடையாளம் தொலைந்து விடாமல் இருப்பதற்கு அண்ணா கண்ட கனவும் ஒரு காரணம்.
- தமிழர்களுக்கு மொழி உணர்வு ஊட்டி, தமிழினத்திற்கு முகவரி தந்து, முத்தமிழால் புதிய சாலையை அமைத்துக் கொடுத்தவர். ஒரு எளிய நெசவாளக் குடும்பத்தில் பிறந்த அண்ணா, தனக்கான ஆடையை மட்டும் நெய்யவில்லை; தமிழினத்தின் தன்மானத்திற்கும் ஆடை தைத்துக் கொடுத்தவர்.
- அண்ணாவை அறிஞர் என்று சொல்லக் காரணம், அவரது அறிவின் மேதைமைதான். அவற்றோடு அவர்தம் ஆட்சிக் காலகட்டத்தில் தமிழர்களின் இனமானத்தைக் கட்டிக் காத்து, அதன் உரிமையைத் தட்டி எழுப்பி, மானுடப் பற்றை மறக்காமல் விதைத்த மனிதநேயப் பண்பாளர் அண்ணா என்றே கூறலாம்.
- அண்ணாவின் மறைவுக்கு பொதுமக்கள் காட்டிய துக்கத்தில் எட்டில் ஒரு பங்குகூட வேறு எவருக்கும் காட்டியதாக நிகழ்ச்சி கிடையாது.
- அந்த அளவுக்கு தமிழ் மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்து விட்டார் என்று கண்ணீர்மல்க தன் சீடரின் இறுதி நாள்களை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டினார் தந்தை பெரியார்.
- குறுகிய காலமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும், தமிழ்நாட்டின் அரசியல் போக்கை நீண்ட காலம் மாற்றிப் போட்டவர்.
- அரசியல் மேடைகளை தமிழ் வளர்க்கும் அரங்கமாகவே மாற்றிக் காட்டியவர். தமிழ் உள்ளத்தோடும், உணர்வோடும் ஆட்சிக்கு வந்த காரணத்தினால், என்றும் இல்லாத அளவுக்கு தமிழை மிகைமைப்படுத்திய ஆட்சியாளர்.
- கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு, வன்முறை இரு பக்கமும் கூர்மையுள்ள கத்தி, எதையும் தாங்கும் இதயம் வேண்டும், சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்குரைஞர்களின் வாதம் ஒரு விளக்கு, மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை, தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை, அறிவாலும், ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை, அறிவும், ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம், இளைஞர்களுக்கு பகுத்தறிவும், சுயமரியாதையும் தேவை, மறப்போம் - மன்னிப்போம் உள்ளிட்டவை அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகளாகும்.
- அறிஞர் அண்ணா வாழ்ந்தது 60 ஆண்டுகள்தான் என்றாலும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட தலைவர்.
தமிழ்ச் சொற்பொழிவாளர்
- அண்ணா மிகச் சிறந்த தமிழ்ச் சொற்பொழிவாளர் என்று நாடறியும். அவரது மேடைப் பேச்சின் மேன்மையை அறிந்து வியக்காதவர்கள் இல்லை.
- தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், அன்னைத் தமிழ் நாவாட, கரகரத்த குரலில் பேசி அனைவரையும் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டவர்.
- தொடர்ந்து 5 மணிநேரம் பேசக்கூடிய ஆற்றல் படைத்தவர்; வெறும் 5 நிமிஷத்தில் பேசி அணுவைத் துளைத்து கடலைப் புகட்டும் வகையில், தேர்தல் நேரத்தில் மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களைத் தழுவுவதோ நித்திரை, இடுவீர் எங்களின் சின்னத்தில் முத்திரை என்ற அவரது பேச்சைக் கேட்டு வியக்காதவர்களே இல்லை.
- ஒரு சமயம், செட்டிநாட்டுப் பகுதிக்குச் சென்றிருந்த அண்ணா, ஆளுயர மாளிகையைக் கண்டு வியந்து போய், சென்னையிலோ வீடில்லாத மனிதர்கள், செட்டிநாட்டிலோ மனிதர்கள் இல்லாத வீடுகள் என்றார்; கூட்டத்தில் கரகோஷம் அடங்குவதற்கு நீண்ட நேரமானது.
- அதே போல அரசியல் குறித்து மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், அத்தை மகள் சுற்றிச் சுற்றி வரலாம், தொட்டுவிடக் கூடாது என்று சொன்ன உவமைக்கு கைதட்டும் ஓசை இன்று வரை கேட்டுக் கொண்டே இருக்கிறது.
- பிராந்தியங்களின் சிந்தனைகளின் மூலம் வந்தவர் அண்ணா. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்றொரு முழக்கத்தோடு, மேலும் ஒரு புதிய தத்துவார்த்தத்தை, அதாவது வடக்கில் இருந்து வந்தது தெற்கு அல்ல.
- தெற்கின் தொடர்ச்சியே வடக்கு என்ற ஒரு சிந்தனைப் பரிமாற்றத்தை விதைத்தவர். ஆகவேதான், தமிழர்கள் யாருக்கும் தாளாமல், யாரையும் தாழ்த்தாமல் வாழ வேண்டும் என்பதே அவரது குறிக்கோள் எனப் பிரகடனப்படுத்தினார்.
- பல்வேறுபட்ட மொழிகளின் பண்பாக்கங்களால், இந்தியா கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவற்றுள் தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளாய் சேமித்து உருவாக்கிய அறிவை, அறிவுலகின் செயல்பாட்டாளராக அண்ணா தன்னை தகவமைத்துக் கொண்டார்.
- பெரியார் மூலம் மேற்கத்திய புத்தொளி காலத்தால் செதுக்கப்பட்ட பகுத்தறிவுப் பாதையையும், தமிழ்ப் பாரம்பரியத்தின் மூலம் நீண்ட வரலாற்றைச் சேமித்து அவை நவீன காலத்து அரசியலுக்கு தக்க விதமாய் இழந்தும், மீட்டும் உருவான சிந்தனையைத் தன்னகத்தே கொண்டார் அண்ணா.
மாபெரும் தலைவர்
- ஒரு மரபானது நவீன மாற்றத்தை மேற்கொள்கையில், அதே மரபு ஒரு புது மரபாக உருவாகிறது என்கிற கருத்தியலே அண்ணாவின் பாதை என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சுதந்திரம் பற்றி பெரியாருடன் முரண்பட்டவர்; திராவிட நாடு கோரிக்கையை 1962-இல் நாடாளுமன்றத்தில் வாதிட்ட பின்பு, கைவிட்டவர் என்று பார்ப்போமேயானால், ஆமாம் அதுதான் இழப்பதையும், பெறுவதையும், மீட்பதையும் தனது உத்வேகக் கருத்துகளாக மாற்றிக் கொண்டார் என்கிற புதிய அடையாளம் கிடைக்கிறது.
- நாம் இவ்வாறு அண்ணாவைப் பற்றி விளக்க, அவரைப் பற்றி தொடர ஒரு வகை சிந்தனை கட்டுமானத்தை நாம் உருவாக்க வேண்டும். அ
- வரது அரசியல் கட்சியின் தொடக்கமும், அவரை வாழ்த்தி எழும் கோஷங்களின் தொடர்ச்சியும் இவற்றில் அடங்காமல் போகும் என்றே கருத வேண்டும். தமிழ்தான் இங்கே திராவிட அரசியலுக்கு உயிர் நாடி. அவற்றில் இருந்து அவரது பெருவாழ்வு தொடங்குகிறது.
- ஒரு தலைவர் எல்லைகளைக் கடந்து அவரை எல்லோரும் நேசிக்கத் தொடங்கிவிட்டால், மாபெரும் தலைவராகப் பரிணமிக்கிறார்.
- எந்த வகையில் ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறதோ, அந்த வகையில் பரந்துபட்ட தலைவராகப் பார்க்கப்படுகிறார். ஆமாம், அதனால்தான் எல்லோராலும் நேசிக்கப்பட்ட தலைவராகத் திகழுகிறார்.
- ஏனென்றால், அவரது கனவு உலகளாவிய கனவு. ஆகவேதான், போப் ஆண்டவரைச் சந்தித்த தருணத்தில், அண்ணாவின் உரையைக் கேட்டு அகமகிழ்ந்த போப் ஆண்டவர், உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டபோது, கோவாவின் விடுதலை வேள்வியை நடத்திய போர்ச்சுக்கல் சிறையில் வாடிக் கொண்டிருந்த மைக்கேல் ரானடேயின் விடுதலைக்காக யாசித்தார்.
- ஒரு மானுடப் பற்றாளரின் இந்த விடுதலை குறித்தான யாசகத்தைக் கண்டு கருணையும், காருண்யமும் கொண்ட அண்ணாவின் கரங்களை முத்தமிட்டு மெச்சிப் போனார் போப் ஆண்டவர்.
கடிதப் போக்குவரத்து
- போப் ஆண்டவரின் கடிதப் போக்குவரத்துக்குப் பிறகு போர்ச்சுக்கல் சிறையில் இருந்து விடுதலை பெற்ற மைக்கேல் ரானடே இந்தியா வந்தபோது, அவரை வரவேற்கக் காத்திருந்த அன்றயை பிரதமர் இந்திரா காந்தியிடம் ரானடே கேட்ட முதல் கேள்வி, அண்ணா எங்கே? என்பதுதான்.
- அண்ணா மறைந்து விட்டார் என்ற அதிர்ச்சிப் பதிலை இந்திரா காந்தி கூறியவுடன் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுதார் ரானடே.
துயரத்தில் இருந்து விடுதலை பெற முடியாமல் அழுத ரானடேயை பிரதமர் இந்திரா காந்தி தேற்றினார்.
- பின்னர், தனி விமானம் மூலம் அவரை கோவாவுக்குச் செல்லுமாறு சொன்னபோது இல்லையென மறுத்து, தான் முதலில் சென்று கண்ணீரைக் காணிக்கையாக்க வேண்டிய இடம் அண்ணாவின் கல்லறைதான் என்றார் ரானடே.
- இதன் மூலம் அண்ணா என்கிற சாமானியன் இந்தச் சமுதாயத்துக்கு சொல்ல வருகிற செய்தி என்னவென்றால், தன்னுடைய எழுத்தும், பேச்சும் மட்டும் அல்ல, உலகம் தழுவிய அவரின் அன்பு கொண்ட பார்வையும் இவற்றோடு பிணைந்திருக்கிறது.
- இதனால்தான் எல்லோரும் அண்ணா என்று அவரை அழைத்தார்களோ! ஆமாம், அத்தகைய ஆளுமை மிக்க தலைவர் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்கச் சென்றபோது, உடன் செல்லத் தயாராக இருந்த மனைவி ராணியை அவர் அழைத்துச் செல்லவில்லை.
- காரில் அவருடன் ஏறும் அன்புத் தம்பிமார்கள், அண்ணி ரொம்ப ஆவலாக இருக்கிறார் அண்ணா; அவரையும் அழைத்துச் செல்லலாமே என்றபோது, தம்பி, வீட்டுக்கும், ஆட்சிக்கும் இடையே ஓர் இடைவெளி வேண்டும் என்றார் அண்ணா.
நன்றி: இந்து தமிழ் திசை (14-09-2019)