TNPSC Thervupettagam

சாரம் இழக்கலாமா வானவில்லின் வண் ணங்கள்?

June 26 , 2024 206 days 173 0
  • வலி, வேதனை, வறுமை, மகிழ்ச்சி, கொண்டாட்டம் என இதுவரை ஒன்றாகப் பயணித்தவர்களையும், திருநர் சமூகத்துக்காகப் பல போராட்டங்களில் முன்நின்றவர்களையும் (எல்.ஜி.பி.க்யூ.பிளஸ்) ஒதுக்கிவிட்டு, கல்வி, வேலைக்கான இடஒதுக்கீட்டில் தங்களுக்கென ஒரு கொள்கையை வரையறுக்க, இடையிலிங்கத்தவரும் திருநர் சமூகமும் (குறிப்பாகத் திருநங்கைகள்) மாநில அரசை நிர்ப்பந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர். இது நியாயமானதா எனத் திருநர் சமூகம் எண்ணிப் பார்க்க வேண்டும். பொதுச் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதன் வலியை முழுமையாக உணர்ந்த திருநர் சமூகம், பால்புதுமையர் சமூகத்தினரைப் புறக்கணிக்கலாமா என்னும் கேள்வி இயல்பாக எழுவதைத் தடுக்க முடியவில்லை.

எங்களின் கருத்தையும் கேட்க வேண்டும்..!

  • இதுதொடர்பாக, சமூகச் செயல்பாட்டாளர் கல்கி சுப்ரமணியம் முன்வைக்கும் வாதம் முக்கியமானது. “திருநங்கைகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகப் பிச்சைக்காரர்களாகவும், பாலியல் தொழிலாளர்களாகவும், தெருவில் ஆடிப் பிழைப்பவர்களாகவும்தான் சமூகத்தின் கடைநிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாகத்தான் மெல்லமெல்ல முன்னேற்றம் கண்டுகொண்டிருக்கிறோம். உடல் மொழி, உடை, பேச்சு என்று திருநர்கள் வெளிப்படுத்தும் அத்தனையையும் இந்தச் சமூகம் எள்ளி நகையாடியிருக்கிறது. அதனால்தான், எங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு, ஒரு தனிக் கொள்கையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது வரைவில் கொண்டுவரப்பட்டுள்ள கொள்கையானது, திருநர் மக்களுக்காக உழைக்கும் சமூகச் செயல்பாட்டாளர்களின் கருத்துகளைக் கேட்டு உருவாக்கப்படவில்லை. இரு வேறு கொள்கைகள் சாத்தியமெனில், அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் என்ன பிரச்சினை?” எனக் கேட்கிறார் அவர்.
  • மேலும், “இந்தக் கொள்கை வரைவை திருநங்கை, திருநம்பி மக்களுக்காக உழைக்கும் எங்களிடம் தராமல், நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜிடம் தந்ததுதான் இந்தச் சிக்கலின் ஆரம்பம். அவருக்கு இந்தச் சமூக மக்களுக்கு என்ன தேவை என்பதே தெரியாது. எங்கள் பிரச்சினைகள் ஆழமானவை. வேறானவை. தெளிவான கொள்கை தேவை. அது எம்மக்களின் கருத்துகளை அறிந்து, அவர்களின் தேவைகளை முழுவதுமாக அறிந்த பின் வரையறுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் கல்கி சுப்ரமணியம்.

ஒற்றுமையோடு புரிதலை ஏற்படுத்துவோம்:

  •  பாலினச் சிறுபான்மையினர் அனைவருமே, அவர்கள் யார் மீது பாலீர்ப்பு கொண்டிருக்கிறார்கள், உறவு வைத்துக்கொள்கிறார்கள் என்பதைத் தாண்டி, பொதுச் சமூகத்தால் மாறுபட்டவர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். ஆண், பெண் இடையேயான ஈர்ப்பே, உறவே சரியானது. மாறாக ஓர் ஆணுக்கு இன்னொரு ஆண் மீது உண்டாகும் ஈர்ப்பு, ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் மீது ஏற்படும் ஈர்ப்பு, ஓர் ஆணுக்கு ஒரு திருநங்கை மீது ஏற்படும் ஈர்ப்பு, ஒரு பெண்ணுக்கு ஒரு திருநம்பி மீது உண்டாகும் ஈர்ப்பு அனைத்துமே ஏற்றுக்கொள்ளப்படாததாகவும், ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்னும் கேள்வியோடும்தான் பொதுச் சமூகம் எதிர்கொள்கிறது.
  • அப்படியிருக்கும்போது, எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ. (லெஸ்பியன், கே, பைசெக்ஷுவல், திருநர், பால்புதுமையர், இடையிலிங்கத்தவர்) என அனைவருமே மாற்றுச் சிந்தனை உடையவர்கள் என்னும் பொதுப்பார்வை இருக்கிறது. இந்தப் பொதுப்பார்வையோடு இருக்கும் அனைவருக்குமே பாலினச் சிறுபான்மைச் சமூகம் தங்களைப் பற்றிப் புரியவைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனித்தனியே பொதுச் சமூகத்திடம் இவர்களைப் பற்றிய புரிதலைக் கொண்டுசேர்க்க முடியாது.
  • ஒரு கல்லூரியிலோ, பொதுச் சமூகத்தின் முன்போ, விழிப்புணர்வு அளிக்கும் கூட்டத்திலோ பேசும்போது, தன்பால் ஈர்ப்புள்ள ஆண், பெண் பற்றிய புரிதலைப் பற்றி அறிந்துகொள்ள கேள்வி எழுப்பப்பட்டால் அந்த இடத்தில், “நாங்கள் திருநர், இடையிலிங்கத்தவர் குறித்து மட்டும்தான் பேசுவோம். அதுதான் எங்களின் கொள்கை” என்று கூற முடியாது.
  • அதைவிட, புறக்கணிப்புக்கான காரணமாகத் திருநர் சமூகம் நினைப்பது, ‘பால்புதுமையர் அனைவரும் நன்றாகப் படித்தவர்கள்’ என்பதுதான். பால்புதுமையர் கல்வி கற்றிருப்பது, அவர்களுக்கு மட்டுமல்ல திருநர் சமூகத்துக்கும் பலம்தான் என்பதை உணர வேண்டும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு:

  • சென்னையில் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த பெருமிதப் பேரணியில் (Pride parade) தங்களை வெளிப்படுத்திக்கொண்டு பங்களித்தவர்களின் எண்ணிக்கை 5,000. கடந்த 2023இல் பங்களித்தவர்களின் எண்ணிக்கை 15,000. திருநர் சமூகம், பால்புதுமையர் சமூகத்தைத் தள்ளிவைப்பதன் எதிர்வினையாக, இந்த ஆண்டு பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு முழுவதுமே திருநர் சமூகத்தின் எண்ணிக்கை 30 ஆயிரம்கூட இல்லை என்பதே உண்மை.
  • இத்தனைக்கும், அரசின் இடஒதுக்கீடு, நலத்திட்டங்களைப் பெறுவதற்குத் திருநங்கை, திருநம்பி, இடையிலிங்கம் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உகந்தவர்கள் ஆவார்கள் என்பதைத் தமிழ்நாடு திட்டக் குழு வரையறுத்திருக்கிறது. இவர்களைத் தாண்டி, எந்த நலத் திட்டமும் எவருக்கும் கிடைக்காது. லெஸ்பியன், கே, பைசெக்ஷுவல் எவருமே நலத்திட்டங்களைப் பெறுவதற்கு உகந்தவர்கள் இல்லை என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

முன்னுதாரணமாவோம்:

  • 2008ஆம் ஆண்டிலேயே திருநங்கை நலவாரியம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால், திருநர், மாற்றுப் பாலினத்தவரைப் பாதுகாக்கும் சட்டம் அண்மையில்தான் இயற்றப்பட்டது. இந்தியாவிலேயே (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ. பிளஸ்) மாற்றுப் பாலினத்தவருக்கான கொள்கை என்று தனியாக எதுவும் கிடையாது. அதனால், தற்போது தமிழ்நாடு அரசின் மூன்றாம் பாலினத்தவருக்கான - அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய - ஒரு கொள்கையை ஒரு முன்னுதாரணமாக மற்ற மாநிலங்களுக்குக் கொண்டுசேர்க்கப் போகிறோம் என்பதைப் புரிந்துகொண்டு, திருநர் சமூகம் வழிவிட வேண்டும்.
  • எல்லாரையும் சேர்த்துக்கொண்டு உரிமைக்குக் குரல் கொடுக்கும் நல்ல முடிவுக்குத் திருநர் சமூகம் முன்வர வேண்டும். திருநங்கை, திருநம்பி, இடையிலிங்கம் ஆகியோரைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு கொள்கை; தன்பால் ஈர்ப்புள்ள ஆண், தன்பால் ஈர்ப்புள்ள பெண், இவர்களைத் தவிர வெவ்வேறு விதமான பாலீர்ப்பு உள்ள மாற்றுச் சிந்தனை உள்ளவர்களைப் பற்றிய விழிப்புணர்வை வழங்குவதற்கு இன்னொரு கொள்கை என்று அரசே தனித்தனியாக வரைமுறைப்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது.

அவர்கள்தான் இவர்கள்!

  •  பதின்பருவமான 15, 16 (Gender Non Confirming) புரியாத வயதில் தன்பால் ஈர்ப்புள்ள ஒரு பெண் குழந்தை, பருவ வயதை எட்டும்போது, தன்னை ஒரு லெஸ்பியனாக இல்லாமல், தன்னை ஒரு திருநம்பியாக நினைக்கும் நிலையை அடையலாம். ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு ஆணாக வாழலாம் என்று நினைக்கலாம். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், லெஸ்பியன் வேறு; திருநம்பி வேறு என்று நாம் பிரிக்க முடியாது.
  • பதின்பருவத்தில் தன்பால் ஈர்ப்புள்ள ஓர் ஆண் குழந்தை, பருவ வயதை அடையும்போது, தான் ஓர் ஆணாக இருக்கக் கூடாது என்னும் முடிவோடு திருநங்கையாக மாறிவிடுவார். அதனால், தன்பால் ஈர்ப்புள்ள ஆணாக முதலில் உணரும் ‘கே’ (Gay), பின்னாளில் திருநங்கையாக மாறுவதைப் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களின் இருப்பை முதலில் தெரிவித்தால்தான் திருநர் சமூகத்தின் இருப்பை உலகம் புரிந்துகொள்ளும். மாற்றுப் பாலினத்தவர் திரளாக ஒன்றுசேர்வதன் மூலமாகவே உலகத்துக்கு உங்களின் எண்ணங்களைப் புரியவைக்க முடியும். அதன் மூலமாகவே உரிமைகளை எளிதாக வென்றெடுக்கவும் முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories