TNPSC Thervupettagam

சாலிகிராமம் வழங்கும் பாடம்

September 1 , 2023 311 days 226 0
  • லண்டன் நகரின் நடுநாயகமான பகுதிகளில் ஒன்று வெஸ்ட்மினிஸ்டர். அது அரச மாளிகைகளும் கலைக்கூடங்களும் தேவாலயங்களும் அமைந்த நகரின் பெருமை மிக்க பகுதிகளுள் ஒன்று. அந்தப் பெயர்தான் சென்னை சாலிகிராமத்தில் 2016இல் கட்டி முடிக்கப்பட்ட அடுக்கக வளாகத்திற்கும் சூட்டப்பட்டது.
  • மூன்று அடுக்ககங்கள், ஒவ்வொன்றும் 17 மாடிகள், மொத்தம் 613 வீடுகள். இதுகாறும் 486 வீடுகள் விற்கப்பட்டுவிட்டன. இந்த வீடுகளை வாங்கியவர்கள் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் போல தங்கள் வளாகமும் சென்னை நகரத்தின் சிறப்பான பகுதியாக விளங்கும் என்று பெருமைப் பட்டிருப்பார்கள். ஆனால், அந்தப் பெருமை அதிக காலம் நீடிக்கவில்லை. 2017 முதல் கட்டிடத்தில் விரிசல்கள் தோன்றத் துவங்கின. 2021இல் இது அதிகரித்தது. பல வீடுகளில் பூச்சுகள் பெயரத் தொடங்கின.
  • மாடங்களில் பொருத்தியிருந்த இரும்புக் கிராதிகளின் பிடிமானங்கள் இளகின. சில வீடுகளின் கான்கிரீட் தளங்களின் அடிப்பகுதிகள் பெயர்ந்து விழுந்தன. அப்போது வெளித்தெரிந்த கம்பிகள் துருவேறியிருந்தன. உச்சமாக இந்த மாதத் துவக்கத்தில் (2023, ஆகஸ்ட்) சில தாழ்வாரங்களிலும் இடைவழிகளிலும் கான்கிரீட் தளங்களின் கணிசமான அடிப்பகுதிகள் பெயர்ந்து விழுந்தன.

நோய் முதல் நாடி...

இந்தச் சேதாரங்களுக்கு என்ன காரணம்?

  • கான்கிரீட் கலவையில் குளோரைடு கலந்துவிட்டது என்கிறார் கட்டுநர் (Developer- ஜெயின் ஹவுசிங் லிமிடெட்). கலவையில் உப்பு நீர் பயன்படுத்தப்பட்டாலோ, ஜல்லி, மணல் ஆகிய சேர்மானங்களில் கசடுகள் முறையாகக் கழுவிக் களையப்படாமல் இருந்தாலோ குளோரைடு உட்புகுந்துவிடும். இது குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் கம்பி துருப்பிடிக்க ஏதுவாகும். துருவேறிய கம்பி பருக்கும், அதாவது அளவில் பெரிதாகும். அப்போது அது கான்கிரீட்டின் அடிப்பாகத்தை அழுத்தும், விரிசல்கள் தோன்றும்.
  • இந்த அழுத்தம் மிகுந்தால் கான்கிரீட் பெயர்ந்து விழும். இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. எனில், இதை முறையாக ஆராய்ந்து சேதாரத்திற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். நோய்முதல் நாடினால்தான், அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயலாற்ற முடியும். இந்த அடுக்ககத்தில் குளோரைடு தாக்குதல் இனியும் தொடருமா? அதை எப்படி நேரிடுவது? இதையும் ஆய்வுகள் வழியாக ஓரளவிற்கு அனுமானிக்க முடியும்.
  • இதுகாறும் என்ன நடந்திருக்கிறது? 2019இல் கட்டுநர் திருத்தப் பணிகள் மேற்கொண்டிருக்கிறார். தொடர்ந்து கட்டுநர் மேற்கொண்ட திருத்தப் பணிகள் முறையாக இல்லை என்கிறார்கள் வீட்டு உரிமையாளர் சங்கத்தினர். ஒரு கட்டத்தில் சங்கமே திருத்தப் பணிகளை மேற்கொண்டது.  சேதாரங்கள் தொடர்ந்தன. பணிகள் வளர்ந்துகொண்டே போயின. சங்கம் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்டது; விற்கப் படாமல் இருக்கும் 127 வீடுகளை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விற்கலாகாது என்றும் உத்தரவிட்டது. தொடர்ந்து, உரிமையாளர் சங்கம் தமிழ்நாடு அரசிடமும் முறையிட்டது.
  • சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ), சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அடுக்ககங்களைப் பார்வையிட்டனர். சமூக ஊடகங்களில் காணொலிகள் வெளியாகின. இவற்றுக்குப் பலன் இருந்தது. ஆகஸ்ட் 18 அன்று கட்டுநரும் உரிமையாளர் சங்கத்தினரும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டனர். சங்கம் திருத்தப் பணிகளுக்காக இதுவரை செலவிட்டிருக்கும் தொகையை (ரூ. 4.48 கோடி) கட்டுநர் நான்கு தவணைகளில் திரும்பச் செலுத்துவார்.
  • மேலும், சேதாரங்களுக்கான காரணங்களைக் கண்டறியுமாறு, சென்னை ஐ.ஐ.டி.யும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்தும் கியூப்எனும் ஆலோசனை நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த ஆய்வின் அடிப்படையில் ஒரு வீட்டில் திருத்தப் பணிகள் மேற்கொள்ள முடியுமென்றால் அவ்வாறான பணிகளை மேற்கொள்ளவும், திருத்த முடியாத அளவிற்கு வீடுகள் சேதமடைந்திருந்தால் புதிய வீடுகளைக் கட்டித்தரவும் கட்டுநர் சம்மதித்திருக்கிறார். இது இங்கே முடியவில்லை. மாறாக இங்கேதான் தொடங்குகிறது. ஆய்வறிக்கைகள் வெளியாகும்போது மேலதிகக் குற்றச்சாட்டுகள் வரலாம், பொறுப்புகள் துறக்கப்படலாம். ஆகவே, உரிமையாளர் சங்கம் தொடர்ந்து கண்காணிக்கவும் எதிர்வினையாற்றவும் வேண்டிவரும்.
  • நகரங்களில் அடுக்ககம் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது. இந்த வெஸ்ட்மினிஸ்டர் அடுக்ககத்தின் வீடுகள், பரப்பளவைப் பொறுத்து ரூ.90 லட்சம் முதல் ரூ.150 லட்சம் வரை விற்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. பலரும் வங்கிக் கடன் வாங்கி இருப்பார்கள். மாதந்தோறும் பல்லாயிரம் ரூபாய் தவணைப் பணம் கட்ட வேண்டும். இது அவர்களுக்குத் தெரியும். ஆனால் தாங்கள் வாங்கிய வீட்டின் கூரை உதிர்ந்து வீழக்கூடும் என்று அவர்களில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வாறான இன்னல்கள் நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பொறியியல் வடிவமைப்பின் முக்கியத்துவம்

  • அடுக்ககங்களைக் கட்டுவதற்கான அனுமதியை மாநகராட்சிகள், நகர் ஊரமைப்பு இயக்ககம் (டி.டி.சி.பி), சி.எம்.டி.ஏ முதலான அமைப்புகள் வழங்குகின்றன. இதற்குத் திட்ட அனுமதி’ (planning permission) என்று பெயர். இந்த அனுமதி வழங்கும் முன்னர் கட்டிடத்தின் நீளம், அகலம், உயரம்; கட்டிடத்தைச் சுற்றிவிட வேண்டிய இடைவெளிகள், அறைகளின் பயன்பாடு, கட்டுமானப் பரப்பு முதலானவை சரிபார்க்கப்படும்.
  • கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அதற்கான சான்றிதழையும் மேற்குறிப்பிட்ட அரசு நிறுவனங்களே வழங்கும். அப்போதும் திட்ட அனுமதிக்கு இணங்கக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறதா என்று சரிபார்க்கப்படும். எனில், ஒரு முக்கியமான அம்சம் போதிய கவனம் பெறுவதில்லை. அது அடுக்ககத்தின் கட்டமைப்புப் பொறியியல் சார்ந்த வரைபடங்கள் (structural engineering drawings). இந்தப் படங்களைச் சமர்ப்பிப்பது இந்தியாவின் பல நகரங்களில் கட்டாயமில்லை. சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த வரைபடங்கள் பெறப்படுகின்றன. ஆனால், அவை பரிசோதிக்கப்படுவதாகத் தெரியவில்லை. அவற்றுக்குத் தனியே அனுமதியோ அங்கீகாரமோ வழங்கப்படுவதாகவும் தெரியவில்லை.

கட்டமைப்பு வரைபடத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

  • ஒரு கட்டிடத்தை மனித உடல் என்று வைத்துக்கொண்டால், ஒரு கட்டிடக் கலைஞர் (architect) உடலமைப்பைக் குறித்தும் தோற்றப் பொலிவைக் குறித்தும் அக்கறை கொள்வார். ஒரு கட்டமைப்புப் பொறியாளர் (structural engineer) எலும்புக்கூட்டைக் குறித்தும் தசையை எலும்போடு பிணைக்கும் தசைநார்கள் குறித்தும் அக்கறை கொள்வார். ஆகவே, பின்னவர் தயாரிக்கும் பொறியியல் வரைபடங்கள் முக்கியமானவை. தளங்கள், உத்திரங்கள், தூண்கள், அடித்தளங்கள், ஊடுகம்பிகள் முதலான அனைத்துப் பொறியியல் விவரங்களும் இந்தப் படங்களில் இருக்கும். இவை தக்க பொறியாளர்களால் தயாரிக்கப்படுவதும், முறையாகப் பரிசீலிக்கப்பட்டு இவற்றுக்கு அனுமதி வழங்கப்படுவதும் அவசியமானவை.
  • மேலும், நல்ல கட்டுமானம் முறையான வடிவமைப்போடு முடிந்துவிடுவதில்லை. அவை சரிகணக்காகக் கட்டப்படவும் வேண்டும். கட்டுமானப் பொருட்கள் தரமாக இருக்க வேண்டும். அவை தொடர்ந்து சோதிக்கப்படவும் வேண்டும். இவற்றைச் செம்மையாக நடப்பிலாக்க விதிமுறைகள் அவசியமானவை.

புதிய விதிகள்

  • கட்டுமானம் தொடர்பான விதிமுறைகள் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகள்’ (Development Control Rules) என்று அழைக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகளில் இருந்த போதாமைகளை வல்லுநர்கள் எடுத்துக்கூறி வந்தனர். இதைத் தொடர்ந்து 2019இல் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த வளர்ச்சி விதிகளை (Tamilnadu Combined Development and Building Rules, 2019) வெளியிட்டது. இதில் அடுக்ககங்களுக்குப் பொறியியல் வரைபடங்கள் கோரப்பட்டன.
  • மேலதிகமாகக் கட்டிடக் கலைஞர், கட்டுமானப் பொறியாளர், வடிவமைப்புப் பொறியாளர், மண்ணியல் பொறியாளர், தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் முதலானோரை கட்டுநர் நியமிக்க வேண்டும் என்றும் புதிய விதிகள் கோருகின்றன. இவர்களது கடமைகளும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில் வளர்ச்சி விதிகள்திட்ட அனுமதியோடு நின்றுகொள்கின்றன. ஆகவே, இந்தப் புதிய விதிகள் வரவேற்கத்தக்க முன்னெடுப்பு என்பதில் ஐயமில்லை.
  • அதேவேளையில், சாலிகிராமங்களையும் மவுலிவாக்கங்களையும் முற்றிலும் தவிர்க்க இந்த விதிமுறைகள் விரிவாக்கப்பட வேண்டும். சில கட்டுநர்கள் தங்களால் நியமிக்கப்பட்ட கட்டுமானப் பொறியாளர்களுக்குத் தெரிவிக்காமலும், அவர்கள் அனுமதியின்றியும் பல கான்கிரீட் பணிகளை மேற்கொள்வதாக ஒரு கட்டுமானப் பொறியாளர் சமீபத்தில் என்னிடம் குறைப்பட்டுக்கொண்டார்.

என்ன செய்யலாம்?

  • ஒவ்வொரு அடுக்ககத்திற்கும் ஒரு கட்டிடக் கலைஞரும் ஒரு கட்டமைப்புப் பொறியாளரும் பொறுப்பாக்கப்பட வேண்டும். இவர்களுக்குக் கல்வியையும் அனுபவத்தையும் மட்டும் தகுதியாகக் கொள்ளாமல், இப்படியான பொறுப்பான பதவி வகிப்பதற்கு ஏற்ப தேர்வுமுறைகளைக் கடினமாக்கலாம். இவர்களைத் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) வாயிலாகவோ, இந்தியப் பொறியியல் கழகத்தின் (Institution of Engineers, India) வாயிலாகவோ தேர்ந்தெடுக்கலாம். இவர்களைப் பதிவுபெற்ற கட்டிடக் கலைஞர் (registerd architect) என்றும் பதிவுபெற்ற கட்டமைப்புப் பொறியாளர் (registered structural engineer) என்றும் அழைக்கலாம். இவர்களுக்குப் போதிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்; தவறிழைத்தால் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.
  • கட்டுமான காலத்தில் கட்டுமானத்தைத் தொடர்ந்து மேற்பார்க்க வேண்டும். கட்டுமானப் பொருட்களை ஆய்வுக்கூடச் சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். இது தொடர்பான ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பிப்பது பதிவுபெற்ற பொறியாளரின் கடமையாக இருக்க வேண்டும்.
  • மேற்குறிப்பிட்ட பதிவுபெற்ற கட்டிடக் கலைஞரும் கட்டமைப்புப் பொறியாளரும் தங்களுக்கு உதவியாகக் கட்டுமானப் பொறியாளர், வடிவமைப்புப் பொறியாளர், மண்ணியல் பொறியாளர் முதலான நபர்களை நியமித்துக்கொள்ள வேண்டும்.
  • பதிவுபெற்ற பொறியாளர் சமர்ப்பிக்கும் வரைபடங்கள், கணக்கீடுகள், மண் பரிசோதனை அறிக்கைகள் முதலானவற்றைப் பரிசீலிக்கவும், கட்டுமானத்திற்கு அனுமதி வழங்குவதற்கும் தக்க பொறியாளர்களை அரசு நிறுவனங்கள் நியமித்துக்கொள்ள வேண்டும்.  கட்டுமான காலத்தில் போதிய கால இடைவெளியில் அடுக்ககங்களை அரசுப் பொறியாளர்களும் மேற்பார்க்க வேண்டும்.
  • கட்டிடக் கலைஞரையும் கட்டுமானப் பொறியாளரையும் பதிவு செய்வது போலவே ஒப்பந்ததாரர்களையும் அரசு பதிவு செய்ய வேண்டும். இவர்களுக்கான கடமைகளையும் வரையறுக்க வேண்டும். தற்சமயம் ஒரு கட்டுமானத்தில் குறைபாடு ஏற்பட்டால் அதற்கு கட்டுநரையே பொறுப்பாக்குகிறோம். எல்லாக் கட்டுநர்களும் பொறுப்போடு நடந்து கொள்வதில்லை. ஆகவே, பதிவுபெற்ற கட்டிடக் கலைஞர், கட்டுமானப் பொறியாளர், ஒப்பந்ததாரர் ஆகியோரையும் பொறுப்பாக்க வேண்டும். அதற்கேற்ப நம் விதிமுறைகளை விரிவாக்க வேண்டும்.
  • இப்படியான விதிமுறைகளைப் பின்பற்றித்தான் ஹாங்காங்கின் அடுக்ககங்கள் கட்டப்பட்டுவருகின்றன. ஹாங்காங்கில் 9000க்கும் மேற்பட்ட அடுக்ககங்கள் இருக்கின்றன. இவற்றில் சரி பாதி வானளாவிய கட்டிடங்கள் (sky scrapers) எனும் வகைமையில் வரும். இவற்றின் உயரம் 100 மீட்டருக்கும் மேல் (சுமார் 33 மாடிகள்). இவை எல்லாம் பாதுகாப்போடு விளங்குவதற்கு மேற்கூறிய விதிமுறைகள் எந்தச் சமரசமுமின்றி அனுசரிக்கப்படுவதுதான் காரணம். நமது கட்டுமானங்கள் சர்வதேசத் தரத்தில் விளங்க நமது விதிமுறைகளும் சர்வதேசத் தரத்தில் உயர்த்தப்பட வேண்டும். அப்போது சாலிகிராமச் சம்பவங்கள் நிகழாது.

ஒருமுறைதான்!

  • சாலிகிராமம் நமக்கு இன்னொரு பாடத்தையும் உணர்த்துகிறது. கான்கிரீட் நம் காலத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு. அதுவே அடுக்கு மாடிக் கட்டிடங்களைச் சாத்தியமாக்கியது. அதன் இடுபொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும், முறையாகக் கலக்கப்பட வேண்டும், சரியாக வார்க்கப்பட வேண்டும், குறையின்றி நீராற்றப்பட (curing) வேண்டும்.
  • இவையனைத்தும் முதல் முறையிலேயே சரியாகச் செய்யப்பட வேண்டும். ஏனெனில், கான்கிரீட் ஒரு கண்டிப்பான ஆசானைப் போன்றது. அது பிழைகளைச் சகித்துக் கொள்வதில்லை. அதில் திருத்தப் பணிகள் மேற்கொள்வது சிரமமானது.

நன்றி: அருஞ்சொல் (01– 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories