TNPSC Thervupettagam

சாலைப் போக்குவரத்து: கட்டுப்பாடுகள் மட்டுமல்ல வசதிகளும் மேம்பட வேண்டும்

June 22 , 2023 516 days 300 0
  • சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் வேகக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதைக் கண்காணிப்பதற்கு முக்கிய சாலைகளின் 30 இடங்களில் ‘ஸ்பீடு ரேடார் கன்’ (Speed Radar Gun) என்னும் நவீனக் கருவி பொருத்தப்பட உள்ளதாக, சென்னைப் பெருநகரக் காவல் துறை அறிவித்திருக்கிறது. அதிவேகமாக வாகனம் ஓட்டுவதாலேயே அதிக விபத்துகள் நேர்கின்றன என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
  • சென்னையில் காலை 7 முதல் இரவு 10 வரை, மணிக்கு 40 கி.மீ., இரவு 10 முதல் காலை 7 வரை மணிக்கு 50 கி.மீ. என்பதே வாகனங்களுக்கான அதிகபட்ச வேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேகக் கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை மேம்படுத்துவதற்கு இந்தத் தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்பட உள்ளது.
  • விதிகளை மீறி அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது விபத்துகளுக்குக் காரணமாவதோடு பயணிக்கும் பெண்கள், முதியோர், குழந்தைகளை அச்சுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. எனவே, வேகக் கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவது அவசியமானதுதான். ஆனால், பிற விதிமீறல்களைக் கட்டுப்படுத்தாமல், வாகன ஓட்டிகளுக்கான வசதிகளையும் மேம்படுத்தாமல் வேகக் கட்டுப்பாடுகளை மட்டும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது விபத்துகளைத் தடுப்பதில் நீடித்த பயனை அளிக்குமா என்னும் கேள்வி எழுகிறது.
  • சென்னையின் பல உள்புறச் சாலைகள் குண்டும் குழியுமாகவும் குறுகலாகவும் உள்ளன. அத்துடன், சென்னையின் மையப்பகுதியில் நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் திட்டம், மழைநீர் வடிகால் பணி உள்ளிட்ட பணிகளின் காரணமாகப் பல பிரதான சாலைகள் போக்குவரத்து நெரிசலில் திணறுகின்றன. பள்ளி, அலுவலகங்கள் தொடங்கும் முடியும் நேரமான ‘பீக் ஹவ’ரில் பிரதான சாலைகளில் மட்டுமல்லாமல், உள்புறச் சாலைகளிலும் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் குவிவதால் அனைத்து வாகனஓட்டிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது. இதனால் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.
  • சாலைகளில் அதிக எண்ணிக்கையில் பயணிப்பதும் விபத்துகளால் அதிகப் பாதிப்பை எதிர் கொள்வோரும் இருசக்கர வாகனஓட்டிகள்தான். ஆனால், போதிய அளவில் பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும் வசதி படைத்தவர்கள் சொகுசான பயணத்தையே முதன்மைப்படுத்துவதாலும் சாலைகளில் கார்கள் கணக்கு வழக்கின்றி அதிகரித்துள்ளன. இதனால் இருசக்கர வாகனஓட்டிகள், பாதசாரிகள் அதிகமாக நெரிசலால் பாதிக்கப் படுகின்றனர்.
  • 40/50 கி.மீ. அதிகபட்ச வேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், செல்வந்தர்கள் 100/120 கி.மீ. வேகத்தில் பயணிப்பதற்கு உகந்த அதிவேக இருசக்கர வாகனங்களும், கார்களுக்குமான சந்தை எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றித் தொடர்வதில் உள்ள முரணையும் எளிதாகக் கடந்து விட முடியாது.
  • இவற்றை எல்லாம் காரணம் காட்டி விதிகளை மீறி அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை நியாயப் படுத்த முடியாது. அதே நேரம், விதிகளை வலுவாக நடைமுறைப்படுத்துவதைப் போலவே சாலைப் பராமரிப்பு, பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பிற வசதிகளை மேம்படுத்துவதற்கும் அரசும் காவல் துறையும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளைத் தம் மீது சுமத்தப்படும் சுமையாக வாகனஓட்டிகள் கருதுவதற்கு இடம் அளித்துவிடக் கூடாது.

நன்றி: தி இந்து (22  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories