TNPSC Thervupettagam

சாலையில் சிந்தும் ரத்தம்! | சாலை விபத்து உயிரிழப்புகள்

February 24 , 2021 1427 days 693 0
  • பேருந்து விபத்தில் 54 பேரின் உயிரிழப்புடன், ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கிய "சாலை பாதுகாப்பு மாதம்' முடிந்திருப்பது வேதனையிலும் வேதனை.
  • மத்திய பிரதேசத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாகப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து ஒன்று ஓடையில் விழுந்ததில் 54 பேர் இறந்திருக்கிறார்கள்.
  •  உயிரிழந்தவர்களில் பலர் இளைஞர்கள், சிறு வயதினர். அரசுப் பணித் தேர்வில் கலந்து கொள்ள சத்னா, ரேவா நகரங்களுக்கு அந்தப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த அந்த இளைஞர்கள் இப்படியொரு விபத்து நேரும் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விபத்துக்குக் காரணம், அளவுக்கு அதிகமாகப் பயணிகள் ஏற்றப்பட்டிருந்ததுதான் என்று தெரிகிறது.
  •  சாலை விபத்துகள் குறித்த ஆய்வு ஒன்று, உலக வங்கியின் பரிந்துரைப்படி நடத்தப்பட்டது. அந்த அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் வெளியிட்டார்.
  • சாலை விபத்துகள் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைவிடக் கொடுமையானவை என்று அந்த அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது உண்மையிலும் உண்மை.
  • சாலை விபத்துகளில் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் அமெரிக்காவும், ஜப்பானும் இருக்கின்றன. விபத்துகளில் நாம் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், சாலை விபத்து உயிரிழப்புகள் என்று எடுத்துக் கொண்டால் அதில் நமக்குத்தான் முதலிடம். உலகிலுள்ள மோட்டார் வாகனங்களில் 1% தான் இந்தியாவில் இருக்கின்றன. ஆனால், சாலை விபத்து உயிரிழப்பு விகிதம் என்று பார்த்தால், இந்தியாவில் 11%.
  • இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. சாலை விதிகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அதிவேகமாக, கவனக் குறைவாக வாகனங்களை ஓட்டுவது சகஜமான செயல்பாடாகப் பார்க்கப்படுகிறதே தவிர, பொதுமக்களும் சரி, காவல் துறையினரும் சரி அதுகுறித்து அதிக அக்கறை செலுத்துவது கிடையாது.
  • மத்திய போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, 2019-இல் மட்டும் 1,51,113 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்திருக்கிறார்கள்; 4,51,361 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களில் 30% பேர் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாததாலும், 16% பேர் பாதுகாப்புப் பட்டை (சீட் பெல்ட்) அணியாததாலும் சாலை விபத்தில் உயிரிழக்க நேர்ந்திருக்கிறது.
  • சமீபகாலமாக, அதாவது கடந்த ஐந்து ஆண்டுகளாக மிக அதிகமான இரு சக்கர வாகன விபத்துகளுக்கு வண்டி ஓட்டிக்கொண்டே செல்லிடப்பேசியில் பேசுவதுதான் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல, 16 வயதுகூட நிரம்பாத பள்ளிச் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்ட பெற்றோர் அனுமதிப்பதும் அதிகமான விபத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
  • வாகன விபத்துகளால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் குறைந்த வருவாய்ப் பிரிவினரும், நடுத்தர வருவாய்ப் பிரிவினரும்தான். கிராமப்புறங்களில் கூட இருசக்கர வாகன உபயோகம் அத்தியாவசியமாகிவிட்டது. அதற்கேற்ற சாலைகள் இல்லாமல் இருப்பது, தெருவில் நாய்கள், ஆடுகள், மாடுகள், எருமைகள் உலவுவது, படுத்திருப்பது போன்றவை விபத்துக்குக் காரணமாகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் எண்ணமோ, முயற்சியோ சற்றும் இல்லாததால், பல அப்பாவிகள் சாலை விபத்துக்குள்ளாகிறார்கள்.
  • உயிரிழப்பு ஒருபுறம் இருக்க, சாலை விபத்தில் காயமடைவதேகூட மிகப் பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. அடித்தட்டுக் குடும்பத்தினரின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துக் கடனாளிகளாக்கி விடுகிறது மருத்துவச் செலவு. மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்றவை அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்துத் தரப்பினரையும் சென்றடையவில்லை.
  • உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது; தலைக்கவசம் இல்லாமலும், செல்லிடப்பேசி பயன்படுத்திக் கொண்டும் வாகனம் ஓட்டுவது; மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது - இவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றங்கள். ஆனால், காவல் துறை எந்த அளவுக்கு சாலை விதிமுறைகளைக் கண்டிப்புடன் கண்காணிக்கிறது என்பது ஊரறிந்த ரகசியம். தவறிழைப்பவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் "பிழை'யைவிட, பெறப்படும் "கையூட்டு' மிக மிக அதிகம்.
  • 2019 மோட்டார் வாகன (திருத்த) சட்டம், போக்குவரத்து விதிகளிலும், கண்காணிப்பிலும் பெரிய அளவிலான மாற்றத்துக்கு வழிகோலியிருக்கிறது. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் அந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றன. சாலை விதிகளை மீறுவோரைத் தண்டிப்பதால், அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்கிற அச்சத்தில் நாள்தோறும் சாலை விபத்துகளில் பலர் உயிரிழப்பதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
  • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆணையத்துக்கான மாதிரி விதிகள் மக்கள் கருத்துக்கு விடப்பட்டிருக்கிறது. சாலை போக்குவரத்து விதிமுறை மீறல்களையும், மோட்டார் வாகனத் தரப்பையும் தட்டிக்கேட்க வழிகோலப்பட்டிருக்கின்றன. ஆனால், அதை நடைமுறைக்குக் கொண்டுவர அரசு இன்னும் தயாராகவில்லை.
  • பெட்ரோல், டீசல் விலையை நாளும் பொழுதும் அதிகரிப்பதிலும், சுங்கச்சாவடிகளில் கட்டணக் கொள்ளையிலும் காட்டப்படும் அவசரமும், ஆர்வமும், சாலை விபத்துகள் குறித்தும், சாலை போக்குவரத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் காட்டப்படுவதில்லை.
  • அடுத்த நான்கு ஆண்டுகளில் சாலை விபத்துகளை 50% குறைப்போம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார், நம்புவோம்!

நன்றி: தினமணி  (24-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories