- இந்தியாவில் 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகள் குறித்த ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ‘இந்தியாவில் சாலை விபத்துகள் – 2022’ என்கிற அந்த அறிக்கையின்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்துவருகிறது. மிகுந்த கவலைக்குரிய பிரச்சினை இது. நாடு முழுவதும் மாநிலங்கள்-ஒன்றியப் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்படும் தரவுகள்-தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்த அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தயாரிக்கிறது.
- விரிவடைந்துவரும் இந்தியாவின் சாலைப் போக்குவரத்து வலைப்பின்னல், அதிகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றால் கடந்த பத்தாண்டுகளில் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்திருப்பதாகவும் விபத்துகளின் தீவிரத்தன்மை கூடியிருப்பதாகவும் இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
- இந்த அறிக்கையின்படி, 2022இல் மாநிலங்கள்-ஒன்றியப் பிரதேசங்களில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர்; 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர். அதாவது, ஒரு மணி நேரத்தில் 53 சாலை விபத்துகளும் 19 விபத்து மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன; அல்லது ஒரு நாளில் சராசரியாக 1,264 சாலை விபத்துகளும் 462 விபத்து மரணங்களும் நடந்துள்ளன. 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், விபத்துகளின் எண்ணிக்கை 11.9%, இறப்புகளின் எண்ணிக்கை 9.4%, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15.3% அதிகரித்திருக்கின்றன.
- சாலை விபத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 2018-2022 காலகட்டத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகிறது. 2022இல், தமிழ்நாட்டில் மொத்தம் 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதத்தைப் பொறுத்தவரை முதலிடத்தில் உத்தரப் பிரதேசம் (13.4%) இருக்கிறது. தமிழ்நாடு (10.6%) இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு பிரச்சினை இது. வயது அடிப்படையில் பார்க்கும்போது, 18-45 வயதுக்கு உள்பட்ட பிரிவினரே சாலை விபத்துகளில் அதிகளவில் (66.5%) உயிரிழந்துள்ளனர்.
- 2019இல் கரோனா பெருந்தொற்றுக்கு ஓராண்டுக்கு முன்பு, 58.98 லட்சம் கிலோமீட்டராக இருந்த இந்தியச் சாலைகளின் நீளம், 2022இல் 63.32 லட்சம் கிலோமீட்டராக அதிகரித்திருக்கிறது. நாட்டின் மொத்த சாலை வலைப்பின்னலில் வெறும் 4.9% மட்டுமே உள்ள தேசிய - மாநில நெடுஞ்சாலைகளில்தான் 56.1% (2,58,679) விபத்துகள் நடந்துள்ளன; சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில், 61% இங்குதான் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு 100 விபத்துகளுக்கும் ஏற்படும் உயிரிழப்புகளை அடிப்படையாகக் கொண்டு, விபத்துகளின் தீவிரத்தன்மை மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில், 2012இல் 28.2%ஆக இருந்த தீவிரத்தன்மை ஒவ்வோர் ஆண்டும் சீராக உயர்ந்து 2022இல் 36.5%ஐ எட்டியிருக்கிறது.
- அதிவேகம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்டவை இந்த விபத்துகளுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன. இந்தக் காரணங்கள் அனைத்தும் வாகன ஓட்டிகள் சார்ந்தவையாகவே இருப்பது தற்செயல் அல்ல. விபத்துகள் குறித்த விழிப்புணர்வு வாகன ஓட்டிகளுக்கு அவசியம். சாலைகள் எவ்வளவு மேம்பட்டவையாக இருந்தாலும், சாலை விதிகளைப் பின்பற்றி இயங்கினால் ஒழிய விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தவிர்க்கவே முடியாது. சாலைப் பயன்பாடும் ஒரு சமூகப் பொறுப்புதான் என்பதை உணர்ந்து விபத்துகள் அற்ற ஒரு நிலையை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (08 - 11 – 2023)