- உலகச் சிட்டுக்குருவிகள் நாள் கோலாகலமாக நாளை (மார்ச் 20) கொண்டாடப்பட உள்ளது. ஆனால், சிட்டுக்குருவிகள் நாள் உருவான கதையோ ரொம்ப சிக்கலாக இருக்கிறது. அது முன்வைக்கும் கோரிக்கையும் அறிவியலுக்கு எதிரானது. கவனம் பெற வேண்டிய முக்கியமான விஷயங்கள், தேவையற்ற விஷயங்களால் எப்போதுமே கவனச்சிதறலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. சிட்டுக்குருவிகள் நாள் கொண்டாட்டத்தில் இந்தக் கூற்று உண்மையாகியுள்ளது.
திசை திருப்பல்
- சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வலியுறுத்தும் ‘உலகச் சிட்டுக்குருவிகள் நாள்’ 2009இல் முன்மொழியப்பட்டது. சிட்டுக்குருவிகள் உண்மையில் அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டனவா? உலகம் முழுவதும் 160 கோடி சிட்டுக்குருவிகள் இருக்கின்றன; இந்தியாவில் லட்சக்கணக்கான சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன. இந்தப் பின்னணியில்தான் சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டுமென்ற குரல் தேவையற்ற ஆர்ப்பாட்டத்துடன் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
- அறிவியல்பூர்வமாக எந்த ஓர் உயிரினமும் அழிவின் விளிம்புக்குத் (Endangered) தள்ளப்பட்டுள்ளது என்கிற வரையறைக்கும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. நெருக்கடி மிகுந்த சென்னை பெருநகருக்குள் இன்னும் பல இடங்களில் சிட்டுக்குருவிகள் உயிர் வாழ்வதே, அவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படவில்லை என்பதற்கு அத்தாட்சி.
தவறான பிரச்சாரம்
- சிட்டுக்குருவிகள் மீதான இந்தத் திடீர் அக்கறையை மேம்போக்கான சுற்றுச்சூழல் கரிசனத்தின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியயிருக்கிறது. நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை. மனிதர்களே நூற்றுக்கணக்கான நோய்கள், நெருக்கடிகளுடன் நகரங்களில் காலம்தள்ளிக்கொண்டிருக்கும்போது, சிறு பறவையான சிட்டுக்குருவி மட்டும் எப்படி உயிர்த்திருக்க முடியும்? இயற்கை சீர்குலைக்கப்படாத பகுதிகளில், இயற்கை கொஞ்சமாவது ஒட்டியிருக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் இன்னமும் வாழவே செய்கின்றன.
- சிட்டுக்குருவிகள் நாளோடு சேர்ந்து, தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட்ட இன்னொரு விஷயம்: கைப்பேசி கோபுரங்களால் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்கிற கருத்து. இதுவரை எந்த அறிவியல் ஆராய்ச்சியும் இந்தக் காரணத்தை நிரூபிக்கவில்லை. இந்தக் காரணத்தைப் பிரபலப்படுத்தியவர் முகமது திலாவர்.
- மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த இவர், ஒரு பறவை ஆர்வலர். 2010இல் ‘உலகச் சிட்டுக்குருவிகள் நாள்’ என்ற பெயரில் ஒரு நாளை இவர் பிரபலப்படுத்த ஆரம்பித்தார். அதுதான் இன்றைக்குப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மத்திய அரசோ, ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளோ அங்கீகரிக்கவில்லை.
நன்றி: தி இந்து (26 – 03 – 2023)