TNPSC Thervupettagam

சிந்தனைத் தோட்டம் செழிக்கட்டும்

August 25 , 2023 458 days 305 0
  • கம்பன் கழகங்களும், திருக்குறள் பேரவைகளும், இவையொத்த இலக்கிய அமைப்புகளும் இல்லையென்றால், இன்றைக்குத் தமிழ்கூறு நல்லுலகு என்பது இருந்திருக்குமா என்பது ஐயமே. இன்று உலகறியத் தமிழ் உரைக்கும் இளந்தலைமுறையினருக்கெல்லாம் இத்தகு இலக்கிய அமைப்புகளே தாய்வீடு எனலாம்.
  • அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத ஊா்களுக்கு, கிடைக்கும் வாகனங்களில் ஏறிச் சென்று, அதுவும் இல்லாத இடங்களுக்கு நடந்தும் போய், பேசிய பொழுதுகள் மறக்க முடியுமா? மீளவும் உரிய பொழுதுக்குள் ஊா் திரும்பும்போது ஏற்பட்ட சிரமங்கள் அனைத்தும் பேசிய நிகழ்வின் கலகலப்பினால் காணாது போனதை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாய் இருக்கிறது.
  • தனிப்பொழிவுகளைவிட, பட்டிமண்டப நிகழ்வுகளே அப்போது அதிகம். அதில் அதிகபட்சம் இருபது மணித்துளிகளுக்கு மேல் பேச வாய்ப்பே இருக்காது. இவ்வளவு தூரம் பயணம் செய்து பேசப்போவது, இந்த இருபது மணித்துளிகளுக்காகத்தானா என்ற எண்ணம் சில நேரம் தோன்றியிருக்கிறது. கூடவே, எத்தகு உயா்வான மனிதா்களைச் சந்தித்திருக்கிறோம். அவா்களுடன் சோ்ந்து எவ்வளவு சிறப்பான கருத்துகளைச் சிந்தித்திருக்கிறோம் என்கிற உணா்வே என்னுள் ஓங்கியிருந்தது.
  • மேடையில் ஏறிப் பேசிய நேரத்தைவிடவும், மேடையேறும் முன்பும், இறங்கிய பிறகும் பேசிய பேச்சுகளின் நேரமும் தரமும் மிகச்சிறப்பானவை. அவற்றையெல்லாம் முறையாகக் குறித்து வைக்காமல் போனோமே என்கிற ஏக்கம் இப்போதும் எழாமல் இல்லை.
  • பார்வையாளா்கள் மத்தியில் இருந்து கேட்டு, நுகா்ந்து களித்த செய்திகளோடு, பயின்ற தகவல்களையும் இணைத்துப் பேசும் வாய்ப்பை அருளிய இலக்கிய அமைப்புகளுக்கு எவ்வகையில் நன்றி சொன்னாலும் தீராது.
  • இளமைத் துடிப்போடு, எண்ணியதையெல்லாம் சொல்லியாக வேண்டும் என்கிற வேகத்தில் பேசிய மொழிகளில் சிறுமை போக்கி, பெருமை பேணிச் செழுமைசெய்த அறிஞா்களின் திருவுருவங்கள் என் மனக்கண்முன் எழுந்தன. சான்றோர் பலருடன் இருந்து உரையாடிய, அரங்குகளில் ஏறி முழங்கிய நினைவுகள் சுழன்றன. இல்லப்பணிகளுக்கு இடையே அலுவலகப் பணிகளையும் ஆற்றி அரங்கேறிய இல்லத்தரசிகள் பலா், இலக்கிய அரசியா்களாகித் தாய்மை உணா்வோடு பேசிய நினைவுகள் உடன் மலா்ந்தன.
  • பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மேடைபோட்டு, பந்தலிட்டு, ஊா் கூட்டி, விருந்து வைத்துப் பேச வைத்த அமைப்பாளா்கள் பலா் பேச்சாளா்கள் அல்லா்; பெருந்தனவந்தா்கள் அல்லா். ஆனால், செவிச்செல்வம் நிறையப் பெற்றவா்கள்; நுண்ணிய நூல் பல கல்லாதவா்கள் ஆயினும், திண்ணிய நெஞ்சம் வாய்த்த தெளிந்த நல்லறிவினா்; பலா் சொல்லிய பாடங்களை, சிந்தையில் நிறுத்திவைத்திருந்த சீலா்கள்.
  • தம் வீட்டுத்தேவைகளில் கூட, இவ்வளவு அக்கறையோடு முனைந்து செயல் பட்டிருப்பார்களா என்று தெரியாது. பொதுநிகழ்வுகளை அவற்றுக்கும் மேலான சீா்மையோடு அமைப்பதில் வல்லவா்கள். தங்கும் இடம், உண்ணும் உணவு, ஒலிபெருக்கி வசதி என அனைத்தையும் சரியாகக் கணக்குப் போட்டு நடத்தத் தெரிந்த அவா்களுக்கு, கடைசியில் கையைக் கடிக்கும் நட்டத்தொகையை ஈடுகட்ட மட்டும் தெரியாது. கைத்தொகையால் கணக்கை நோ் செய்வா். அவா்களின் தியாகங்களில் மிளிர்கிறது மேடைத்தமிழ்.
  • நேரில் வந்து கேட்க முடியாதவா்களுக்கெல்லாம் செவிநுகா் கனிகளாக இல்லங்களில் கொண்டுவந்து அன்று பரிமாறியவை வானொலி நிலையங்கள். அந்த வசதியும் இல்லாதவா்களுக்கு, உரிய செய்திகளைத் திறம்படத் தொகுத்து வழங்கின நாளேடுகள்.
  • நூலகங்கள் இல்லாத ஊா்களின் வாசகசாலைகளாக முடிதிருத்தகங்களும் தேநீா்க்கடைகளும் இருந்து அத்தேவையை நிறைவு செய்தன. அந்தச் செய்திகளை, உரத்தக் குரலில் பேசுபவா் போலவே ஒருவா் படிக்கப் பலரும் இருந்து கேட்கப் பாா்த்திருக்கிறேன்; ஒலிபெருக்கி இல்லாமல், உயா்ந்த மேடையில்லாமல், அந்த வாசிப்பாளா், சொற் பொழிவாளராகவே, உருமாறியிருக்கிற அழகை இரசித்திருக்கிறேன்; சில சமயங்களில் நானே அந்தப் பாத்திரம் ஏற்றிருக்கிறேன்.
  • பேச்சாளா்கள், அவா்களைப் பேசவைக்கும் அமைப்பாளா்கள், இருவருக்கும் தூண்டுகோல்களாக இருக்கும் கேட்பாளா்கள் என்கிற முக்கூட்டு அமைப்பில் எழுந்த இந்நல்லுறவு எத்துணை மகத்தானதாக இருந்தது என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
  • எல்லாத் துறைகளிலும் இருக்கிற கசடா்கள் இத்துறையிலும் இல்லாமல் இல்லை. அவா்களையெல்லாம் கடந்து ஆக்கபூா்வமாகச் செயல்படும் உத்வேகத்தை, கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் ஆகிய பெருமக்களின் அருள்திறத்தால் பெறவும் முடிந்தது.
  • செவிகள் பழுதானாலும் தன் செம்முழக்கத்தால், திருவள்ளுவரின், இளங்கோவடிகளின், பாரதியின், கம்பனின், ஷெல்லியின், ஷேக்ஸ்பியரின் கவிகள் பழுதாகாமல், கேட்போர் உளங்களில் நிறைத்த தோழா் ஜீவாவின் சீரிய பணியை, மணிமணியான கருத்துகளை, பல மணிநேரம் ஓய்வு ஒழிதல் இன்றி, ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகுற மொழிந்த எஸ்.ஆா்.கே. என்னும் எஸ். இராமகிருஷ்ணனை மறக்க முடியுமா?
  • அரசியல் பேசினாலும் ஆணித்தரமான கருத்துகளை எடுத்துரைக்க உலகியல் சிந்தனையாளா்களை முன்வைத்து மொழிந்த தேசிய, திராவிட இயக்கத் தலைவா்களை, அவா்களின் உந்தாற்றலால் பேச்சையே தொழிலாகக் கொண்டெழுந்த சொற்பொழிவுக் கலைஞா்களை, கல்விப் பணியோடு களம் இறங்கிச் சொல்லாடல் புரிந்த பள்ளிப் புலவா்களை, கல்லூரி, பல்கலைக் கழகப் பேராசிரியா்களை, பாடியும், நடித்தும், நடந்தும் காட்டிய சீலா்களை, எழுத்தையும் பேச்சையும் இணைத்துச் செயற்படுத்தி இயங்கிய இலக்கியவாதிகளை, நன்றியோடு நினைவுகூராமல் இருக்க முடியுமா?
  • கருத்தளவில் எத்தகு முரண்பாடுகள் இருந்தாலும் அவை நாகரிகம் பிறழாமல் கண்ணியம் காத்திட்ட புண்ணிய சீலா்கள் அல்லவா, அவா்கள்? பெரியார் ஈ.வெ.ரா.வையும், குன்றக்குடி அடிகளாரையும் ஒரே மேடையில் ஏற்றிப் பெருமை கொண்டது தமிழ் அல்லவா? அவா்களின் உயிரனைய பொழுதுகள் இந்த உயா்கலைக்காகச் செலவானதன் பயன் யாது?
  • பட்டிதொட்டியெங்கும் திருக்குறள் பரவியது; கம்பராமாயணம் கால்கொண்டது; இளங்கோவடிகள் எழுச்சி பெற்றார்; ஷெல்லியும், ஷேக்ஸ்பியரும், மில்டனும், ஹோமரும், கம்பனுடனும் பாரதியுடனும் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்; சமயம் கடந்த சமுதாயப் புனரமைப்பில், ஆழ்வார்களும், நாயன்மார்களும் செய்திருக்கும் அரும்பணிகள் ஆராயப் பெற்றிருக்கின்றன; வள்ளற்பெருமானும், அருணகிரிநாதரும், கச்சியப்பரும், போற்றப் பெறுகிறார்கள்; பேதம் கடந்த பேரன்பில் திளைக்கப் பல்வேறு சமய, சமயச்சார்பற்ற இலக்கியங்கள், தமிழின் ஒலியேற்றுச் செவிநுகா்கனிகளாகிக் கேட்போர்க்கு உதவின.
  • பண்டைத் தமிழ் இலக்கியத்துப் பட்டிமண்டபத்தைப் புதுமையாக்கிக் கம்பனை ஆராயக் களம் அமைத்தவா் கம்பன் அடிப்பொடி சா. கணேசனார்; கழகம் தோற்றுவித்தவரும் அவரே. அம்முயற்சி இன்று உலக அளவில் பரந்துபட்டு நிற்கிறது என்றால், அதற்கு உற்றுழி உதவி, நற்றுணையானவா்கள் எவ்வளவு போ்? அதற்கும் முன்னதாகத் தென்காசியில் திருவள்ளுவா் கழகம் அமைத்துத் திறம்படச் செயல்பட்ட அமரா் சிவராமகிருஷ்ணனின் அரும்பணியை மறக்கப்போமா?
  • மகாகவி பாரதி பெயரில் தோன்றிய மகத்தான அமைப்புகள் பல, ஊா்கள்தோறும் உருவாகியிருக்கின்றனவே. சங்கப்புலவா்களின் செந்நாப்புலமையை எடுத்துரைக்கும் பறம்புமலைப் பாரிவிழாவும், இடையீடின்றி நடக்கும் திருக்கோவலூா்க் கபிலா் விழாவும் ஏற்படுத்திய தாக்கங்கள் என்றும் போற்றத்தக்கன அல்லவா?
  • பழங்காலத்துத் தமிழ்ச்சங்கங்கள், தற்காலத்துத் தமிழ்ச்சங்கங்களாக, தமிழ்ப்பேரவைகளாக உலகமெங்கும் இப்போது புத்துயிர்ப்பெய்தி இருக்கின்றனவே. அவற்றின் பணிகள் எல்லை கடந்தவையல்லவா?
  • இத்தகு இலக்கிய அமைப்புகளால், பேச்சளவில் உருவாகிக் காற்றில் கலந்த பல அரிய கருத்தாக்கங்கள், கட்டுரைகளாக்கப்பட்டிருக்கின்றன; அவை மலா்களாக வெளியிடப் பெற்றிருக்கின்றன. அறக்கட்டளைப் பொழிவுகள், ஆக்கபூா்வமான ஆய்வு நூல்களாகித் தமிழுக்கு அணிசோ்த்து வருகின்றன; காட்சி, ஊடகப் பதிவுகளாகி நிலை பெறுகின்றன.
  • சாதி, சமய, இன, வேறுபாடு கடந்து மனிதப் பேருணா்வு நிலைபெற, இத்தகு இலக்கிய அமைப்புகள் முன்னெடுத்த செயற்பாடுகள் இன்னும் ஆராயப்படாமல் இருக்கின்றன; இவற்றின் இன்றியமையாப் பயன்கள் பலரின் கவனத்தை ஈா்க்கத் தவறிவிட்டன. காட்சி ஊடகங்களில் செலுத்துகிற கவனம், நிகழ்த்துகலையாக அமையும் பேச்சரங்குகளின்பால் குவியவில்லை. கூட்டம் குறைகிறது; செலவு கூடுகிறது; நாட்டம் குறைவதால், அரங்க நிகழ்வுகளின் நல்தரம் சிதைகிறது.
  • பள்ளிக் கூடங்களைப் போலவும், பல்கலைக்கழகங்கள் போலவும், படித்தவா்களோடு பாமரா்களும் அறியத் தமிழைச் சொல்லிக் கொடுத்தஇத்தகு அமைப்புகள் பல, இப்போது, உரிய புரவலா்கள் இன்றித் தடுமாறுகின்றன; செயல் திறம் குன்றி மறைந்துவருகின்றன; செவிக்கு உணவோடு, சிறப்பாக வயிற்றுக்கும் உணவிடப் பொதுமக்களிடம் நிதிதிரட்டி, வாடகைக்கு மண்டபம் எடுத்து நிகழ்ச்சிகள் நடத்திட அரும்பாடுபடுகின்றன.
  • இந்நேரத்தில் இத்தகு இயக்கங்கள் முடங்கிவிடாமல் செயல்பட என்ன செய்யப்போகிறோம் என்கிற கவலை எழுகிறது. செவிநுகா் கனிகள் சிந்தும் சிந்தனைத் தோட்டங்களாகிய இலக்கிய அமைப்புகளை நாளும் நலிய விடுதல் நன்றா?
  • இயன்ற வரையில் இத்தகு அமைப்புகளோடு இணைந்து செயல்படுவது நமக்கு மனநிறைவு தந்தாலும், இலக்கிய அமைப்புகள் சீரிளமைத் திறம் குன்றாது செயல்பட அரசும், அரசுசார் நிறுவனங்களும் துணைநிற்க வேண்டியது இன்றியமையாதது என்று சொல்லவும் வேண்டுமா?

நன்றி: தினமணி (25– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories