TNPSC Thervupettagam

சிந்துவெளியின் செப்புக் காலமும் தமிழ்நாட்டின் இரும்புக் காலமும்

January 28 , 2025 3 days 27 0

சிந்துவெளியின் செப்புக் காலமும் தமிழ்நாட்டின் இரும்புக் காலமும்

  • சிந்துவெளி நகர நாகரிகத்தின் தொன்மை 5,300 ஆண்டுகள் பழமையானது என்று நூறாண்டுகளுக்கு முன்பே நிரூபிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிவகளை அகழாய்வில் வெளிப்பட்ட ஒரு தாழி, அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கரிமம் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததில் அதன் தொன்மை 5,300 ஆண்டுகள் பழமையானது என்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது தற்செயலானதல்ல.

தொல்லியல் புதையல்:

  • ‘தமிழர்கள் எளிதில் உணர்ச்​சிவசப்படுபவர்கள். அவர்களுக்குத் தங்கள் பண்பாடு, தொன்மை குறித்த அதீத மனப்பான்மை நிலவு​கிறது. அதனால் தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்​துக்கும் முன்பே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று கற்பனை​யாகப் புனைந்​து​கொள்​கிறார்கள்’ என்ற கேலிப் பேச்சுதான் சற்று அதீதமும் ஒவ்வாமையும் கொண்டது என்பதையும் இந்தக் கண்டறிதல் அம்பலப்​படுத்​தி​யுள்ளது.
  • தூத்துக்குடி மாவட்​டத்தின் முக்கியத் தொல்லியல் தலங்களாக ஆதிச்​சநல்​லூர், கொற்கை அறியப்பட்ட அளவுக்கு சிவகளை அறியப்​பட​வில்லை. 2018-19 வாக்கில், சிவகளையைச் சேர்ந்த ஆசிரியர் மாணிக்கம் சிவகளை பறம்பு என்று அழைக்​கப்​படும் 500 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் ஏராளமான தொல்லியல் எச்சங்கள் மேற்பரப்​பிலேயே காணப்​படு​வ​தாகத் தமிழ்நாடு தொல்லியல் துறையிடம் முறையிட்டு வந்தார்.
  • உடனடியாக இந்த முறையீட்டுக்குச் செவிசாய்க்​கப்​பட்டு, அங்கு சென்று பார்த்த​போதுதான் அது ஒரு தொல்லியல் புதையல் என்பது தெரிய​வந்தது. 2019 முதல் அங்கு அகழாய்​வுகள் நடைபெற்று வருகின்றன. அங்கு தொல் வாழ்விடப் பகுதி​களும் ஈமச்சடங்குப் பகுதி​களும் அடுத்​தடுத்துக் காணப்​படு​கின்றன.
  • முதல்கட்ட அகழாய்வில் வெளிப்பட்ட பானை ஓடு ஒன்றில் பொறிக்​கப்பட்ட தமிழி எழுத்துகளை வாசித்ததில் ‘ஆதன்’ என எழுதப்​பட்​டிருந்தது. கீழடியில் வெளிப்பட்ட பானை ஓடு ஒன்றில் ஆதன் என்கிற எழுத்துகள் பொறிக்​கப்​பட்​டிருந்​ததும் தற்செய​லானதல்ல. மற்றொரு தாழியில் சேகரிக்​கப்பட்ட நெல்மணியின் காலம் பொ.ஆ.மு. (கி.மு.) 1155. முன்னதாக ஆதிச்​சநல்லூர் தாழியில் கிடைத்த நெல்லின் காலம் பொஆ.மு. 1200 என்பது நினைவு​கூரத்​தக்​கது.

செழுமையான இரும்புக் காலம்:

  • சிவகளையில் மேலும் பல்வேறு தாழிகளில் சேகரிக்கப்பட்ட கரிமங்கள் உலகின் புகழ்பெற்ற மூன்று நிறுவனங்களில் காலக்கணிப்பு செய்யப்பட்டு, இவற்றின் காலம் பொ.ஆ.மு. 1284 முதல் பொ.ஆ.மு. 3345 வரை என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்றிலிருந்து 3,200 ஆண்டுகள் முன்பிருந்து மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதன் ஆதித் தொன்மை இப்போதைக்கு 5,300 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. இதைத் தாண்டியும் நகரலாம் என்கிறார்கள் தொல்லியலாளர்கள்.
  • மேலும் இங்கு இரும்பாலான வாள்கள், ஈட்டிகள், அம்பு முனைகள், கொக்கிகள், ஈட்டிகள், நங்கூரம் போன்ற பல பொருள்களும் கிடைத்துள்ளன. இவை இரும்பை உருக்கி வார்க்கப்பட்டவை என்பதுதான் முக்கியமானது. மேலும், மக்கள் பண்பாட்டின் செழுமையை உணர்த்தும் கறுப்பு - சிவப்புப் பாண்டங்கள், வெண்மையாக்கப்பட்ட கறுப்பு – சிவப்புப் பாண்டங்கள், தங்க நெற்றிச்சுட்டிகள், உயர் - தகர வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட மோதிரங்கள், மான் கொண்டை மூடிகள், அலங்கரிக்கப்பட்ட பறவை உருக்கள் பொறிக்கப்பட்ட மூடிகள், சல்லடைகள் போன்றவையும் கிடைத்துள்ளன. இவ்வாறாக, தமிழகத்தில் செழுமையான இரும்புக் காலம் பொ.ஆ.மு. 4,000 ஆண்டின் முதல் பகுதியிலிருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
  • சிவகளை தவிர ஆதிச்சநல்லூர், வல்லம், மாங்காடு, மயிலாடும்பாறை, கீழ்நமண்டி ஆகிய பகுதிகளிலும் காலக்கணிப்பு செய்ததில் இங்கும் இரும்பின் பயன்பாடு பொ.ஆ.மு.1030 முதல் பொ.ஆ.மு.2522 வரை இருந்தது கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளைப் பொறுத்தவரை இதுவரை காலக்கணிப்பு செய்யப்பட்டதில் பொ.ஆ.மு.980 முதல் கணிக்கப்பட்டுள்ளன.
  • இவற்றில் கச்சிபவுலி (தெலங்கானா) பொ.ஆ.மு.2200, பிரம்மகிரி பொ.ஆ.மு.1940, மஸ்கி பொ.ஆ.மு.1895, குஃப்கிரால் (ஜம்மு & காஷ்மீர்) பொ.ஆ.மு.1850, ராய்புரா (மத்தியப் பிரதேசம்) பொ.ஆ.மு.1720 ஆகிய கணிப்புகள்தான் மிகவும் தொன்மையானவை. இதிலும் முதல் மூன்று தொன்மையான தலங்கள் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன.
  • உலக அளவிலேயே இரும்பை உருக்கிப் பயன்படுத்திய தொல்லியல் தலங்களில் மிகவும் தொன்மையானது அனடோலியா, காகசஸ் பகுதிகள். இதன் காலம் பொ.ஆ.மு.1300 என்பதாகத்தான் கணிக்கப்பட்டுள்ளது. உலகில் இரும்புக் காலம் இங்குதான், இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில்தான் தொடங்கியது என்பதை சிவகளை நிறுவியுள்ளது. அதாவது, இரும்பின் பயன்பாடு, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்குகிறது என்பதை நிறுவியுள்ளோம்.

முக்கியத்துவம் என்ன?

  • இரும்புப் பயன்பாட்டில் இரும்பினை உருக்கும் தொழில்நுட்பம் முக்கியமானது. சுமார் 1,300 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக வெப்பத்தை உருவாக்கும் உலைகளை அமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதைக் கற்ற பின்னர்தான் இரும்பினாலான வேளாண் கருவிகள், ஆயுதங்கள், மக்கள் பயன்பாட்டுப் பொருள்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. வேளாண்மை செழித்தோங்கியது. சாம்ராஜ்யங்கள் உருவாயின. இதனால்தான் இரும்புக் காலம் மானுட வரலாற்றில் புரட்சியாகக் கருதப்படுகிறது.
  • பண்டைய காலத்தில் மனித நாகரிக வளர்ச்சியை இரும்பு துரிதப்படுதியது போன்றே, தொழில்புரட்சியைக் கொண்டுவருவதிலும் இரும்பு முக்கியக் காரணியாக இருந்தது. தமிழகத்தில் பல இடங்களில் பண்டைய இரும்பு உலைகள் கண்டறியப்பட்டிருந்தாலும் கொடுமணல், மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட இரும்பு உலைகள் மிகப் பெரியவை.
  • இதில் மயிலாடும்பாறை இரும்பாலைகள் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கணிக்கப்படுகிறது. இரும்புக் காலத்துக்கு முந்தைய தமிழகத்தைப் பொறுத்தவரையிலும்கூட பழைய கற்காலம் முதல் (சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் முன்பிருந்து) நுண்கற்காலம் வரையிலும் தொல்பொருள்கள் அதிகம் கிடைத்திருக்கின்றன.
  • அதாவது, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பொ.ஆ.மு. ஏழாயிரம் வரையிலான கற்காலத் தடங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து இரும்புக் காலப் பயன்பாடு தற்போது நான்காயிரத்தின் முதற் பகுதி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் செப்புக் காலம் காணப்படவில்லை. சிந்துவெளியில் இரும்பு காணப்படவில்லை. செப்புக் காலம் சிறப்பாக இருந்துள்ளது.
  • இந்த முரண்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் ஒரு பகுதியில் செப்புக் காலம் இருந்தபோது, மற்றொரு பகுதியில் இரும்புக் காலம் இருந்திருக்க முடியும் என்று தற்போது முடிவுக்கு வந்துள்ளார்கள். ஆகவே, தொல்லியல் வரலாற்றைச் செங்குத்துக் காலப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வது இனியும் சரியாக இருக்காது. சிந்துவெளியின் செப்புக் காலமும் தமிழ்நாட்டின் இரும்புக் காலமும் சம காலத்தவை என்கிற கிடைமட்டமாகப் புரிதலில் எதிர்கால சமூக, பண்பாட்டு ஆய்வுகள் நிகழ வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories