TNPSC Thervupettagam

சிந்துவெளி நாகரிக இந்தியா மையங்களும் விளிம்புகளும்

January 23 , 2025 13 hrs 0 min 23 0

சிந்துவெளி நாகரிக இந்தியா மையங்களும் விளிம்புகளும்

  • இந்தியாவின் பழங்கால வரலாற்றில் ஒரு மைல்கல்லான சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை சர் ஜான் மார்ஷல் அறிவித்து 100 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. இந்த நாகரிகத்தின் முத்திரையில் கிடைத்துள்ள எழுத்துகள் என்ன மொழியில் உள்ளன என்பது இன்னும் படித்தறியப்படவில்லை.
  • அண்மையில், சிந்துவெளி நாகரிகத்தின் நூறு ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடிய தமிழ்நாடு அரசு, இந்த எழுத்துகளைப் படித்தறிபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசை அறிவித்திருக்கிறது. சிந்துவெளி நாகரிகத்தின் மீதான அதிகமான ஆர்வத்துக்கு முக்கியக் காரணம் என்ன?
  • உலகின் ஒரு சில வெண்கலக் கால நாகரி​கங்​களில் ஒன்று சிந்துவெளி நாகரிகம். சுமார் 4,500 ஆண்டு​களுக்கும் மேல் பழமையான சிந்துவெளி நாகரிகம், பழங்கால இந்தியாவின் அடையாளமாக, சாதனை​யாகப் பார்க்​கப்​படு​கிறது. காலனி​யா​திக்கம் எழுப்பிய இந்தியாவின் சாதனை குறித்த கேள்விக்கான பதிலாக இதன் கண்டு​பிடிப்பு பார்க்​கப்​பட்டது.
  • பள்ளி, கல்லூரி​களில் இந்நாகரிகம் குறித்த அறிவுறுத்​தலும், படித்​தறியப்படாத எழுத்​தும், திட்ட​மிடப்பட்ட நகரக் கூறுகளும், வணிகத் தொடர்​பு​களும், பொருள் உற்பத்​தி​யும், தொழில்​நுட்​பமும் பொதுவெளியில் இதன் மீதும் அதன் தோற்றத்​திலும் அதிகமான ஆர்வம் உருவாவதற்கான காரணங்கள் எனக் கருதலாம்.

நகரங்​களும் ஊர்களும்:

  • சிந்துவெளி நாகரி​கத்தின் கண்டு​பிடிப்பில் நாம் சர் ஜான் மார்ஷலை மட்டுமே நினைவு​கூர்ந்​தா​லும், ராக்கல்தாஸ் பானர்ஜி, தயாராம் சாஹ்னி போன்ற இந்திய அறிஞர்​களின் பங்களிப்பை நினைவு​கூரும் வரலாற்​றாசிரியர் நயன்ஜோத் லஹரி, சிந்துவெளி நாகரிகம் ஒரு நிறுவனத்தின் (இந்திய அரசு தொல்லியல் துறை) கண்டு​பிடிப்பு என்கிறார். சிந்துவெளி நாகரி​கத்தில் பெருநகரங்கள் குறைவாகவே இருந்தன. அவை, ஐந்து மட்டுமே. ஆனால், அங்கு 1,400க்கும் மேற்பட்ட ஊர்கள் இருந்தன.
  • சிந்துவெளி நாகரிகம் ஓர் ஊர் சார்ந்த நாகரிகம் என பரேக், கமரோன் பெட்ரி ஆகிய அறிஞர்கள், ‘இந்தியாவின் சமகாலக் கிராமங்கள் போல சிந்துவெளி நாகரி​கத்தின் ஊர்களும் முக்கியமான வாழ்விடங்களாக இருந்தன’ எனப் பதிவுசெய்​கின்​றனர். நகரவாசிகள், நாடோடிகள், மேய்ச்சல் சமூகங்கள், வணிகர்கள், கைத்தொழில் வினைஞர்கள், கற்கருவி பயன்படுத்தும் மக்கள் எனப் பல குழுக்கள் அப்பகு​தியில் இருந்தன.
  • சிந்துவெளி நாகரி​கத்தில் கிடைத்த நடனப் பெண்ணின் உருவமும், பூசாரி எனப்படும் குருமார் ஒருவரின் உருவமும், வேறு சில உருவங்​களும் முக்கிய​மானவை. இங்கு இருந்த மக்களின் உருவத்​தோற்​றத்​திலும் வேறுபாடுகள் இருந்ததை இது தெளிவாக உணர்த்து​கின்றது. அண்மை டிஎன்ஏ ஆய்வுகள், வட இந்திய, தென்னிந்திய முன்னோர்​களின் மரபணுக்களை சிந்துவெளி நாகரிகம் வெளிப்​படுத்து​வ​தாகக் கருதுவது இங்கு குறிப்​பிடத்​தக்​க​தாகும்.
  • சிந்துவெளி இந்தியா​வில், சிந்துவெளி நாகரி​கத்​துக்கும் பிற பண்பாடு​களுக்கும் கிடைமட்ட (பிற பகுதி​களு​டன்), செங்குத்து (முந்தைய, பிந்தைய கால அளவிலான) தொடர்ச்​சியும் உறவுகளும் இருந்​துள்ளன. பொதுவாக, நாம் சிந்துவெளி நாகரி​கத்தைப் பற்றிப் படிக்​கிறோம், ஆனால் இந்தியாவில் இருந்த பல ஊர்ப்புற, நாட்டுப்புற, காட்டுப்புறப் பண்பாடு​களைக் கருதுவதே இல்லை.

செங்குத்துத் தொடர்ச்சி:

  • சிந்துவெளி நாகரி​கத்தின் வீழ்ச்​சிக்குப் பின்னர் மக்கள் எங்கு, எவ்வாறு புலம்​பெயர்ந்தனர் என்பது தெளிவாகத் தெரிய​வில்லை. ஆனால், சிந்து​வெளியின் பண்பாட்டுத் தொடர்ச்சி, தொழில்​நுட்பக் கூறுகள் பிற்காலப் பண்பாடு​களில் காணப்​படு​கின்றன. சில கூறுகள் வட இந்தியாவின் காவிநிறப் பானை வகைப் பண்பாட்​டிலும், சில செம்புக்​காலப் பண்பாடு​களிலும் காணப்​படு​கின்றன. சிந்துவெளி நாகரி​கத்தின் மரபு அறிவின் தொடர்ச்சி செம்புக்​காலத்​தி​லும், இரும்​புக்​காலத்​தி​லும், வரலாற்றுத் தொடக்கக் காலத்​திலும் இருந்தது.
  • சங்க இலக்கி​யத்தில் இருக்​கக்​கூடிய சில தகவல்கள் ஐராவதம் மகாதேவன், ஆர்.பால​கிருஷ்ணன் ஆகியோர் கூறுவது​போலப் பழங்கால நினைவு​களின் தொகுப்பாக இருப்பது குறிப்​பிடத்​தக்​க​தாகும். பழங்கால இந்திய அறிவு மரபுகளின் கருத்துகள் சங்க இலக்கி​யத்தில் இருப்பதன் மூலம், சங்க இலக்கியம் இந்திய வரலாற்றுப் பண்பாட்டுக் கருத்து​களின் தொகுப்பாக அமைந்தது என்றும், இந்திய வரலாற்​றையும் பண்பாட்​டையும் மீட்டுரு​வாக்க உதவும் சான்றுகளில் ஒன்று என்றும் திண்ண​மாகக் கருதலாம். ஊர்ப் பெயராய்வை வரலாற்​றாய்​வாளர்கள் முழுமை​யாகப் பயன்படுத்​தவில்லை எனலாம். ஊர்ப் பெயர்​களில் சில, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்​திலிருந்து தொடர்ச்​சியாக இருந்​திருக்க வாய்ப்புண்டு.

கிடைமட்டத் தொடர்ச்சி (சமகாலத்​தில்)

  • சிந்துவெளி நாகரி​கத்தின் சமகாலத்தில் (பொ.ஆ.மு 3300-1350) இந்தியாவில் பல பண்பாடு​களும் இனக்குழுக்​களும் இருந்​துள்ளன. இந்தியாவில் பலவகைப் பண்பாடுகள் அவற்றின் வட்டாரங்​களில் சூழலுக்கு ஏற்ப வளர்ந்​துள்ளன. இந்தியாவின் பல பகுதி​களிலும் மக்கள் வசித்தனர். அவர்கள், இந்தியப் பண்பாட்டுக்குப் பல பங்களிப்பைச் செய்துள்ளனர். தென்னிந்திய மேய்ச்​சலியப் பண்பாடு தமிழ்​நாடு, கர்நாடகம், ஆந்திரப் பகுதி​களில் காணப்​படு​கிறது.
  • இம்மக்கள் சாம்பல் மேடுகளை உருவாக்​கி​னார்கள். ஆடு மாடுகளை வளர்த்​தார்கள். இவர்களின் காலம் பொ.ஆ.மு 3000 முதல் 1200 வரை எனக் கணக்கிடப்​பட்​டுள்ளது. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசத்தில் இருந்த தக்காணப் பண்பாடுகள் செம்புக்​காலப் பண்பாடுகள் என அழைக்​கப்​பட்​டாலும், அவை மேய்ச்​சலிய-வேளாண் பண்பாடுகள்; அங்கு வாழ்ந்​தவர்கள் செம்புக்​கருவிகளை அதிகமாகப் பயன்படுத்​தினர். இவற்றின் காலமும் பொ.ஆ.மு 2400-1000 எனக் கருதப்​படு​கிறது.
  • வேட்டை​யாடும் மக்கள் குழுக்கள் மேற்குத் தொடர்ச்சி மலை, மத்திய இந்தியா, ராஜஸ்​தான், கிழக்​கிந்தியா, வடகிழக்​கிந்தியா, இலங்கை, அந்தமான் உள்ளிட்ட பல பகுதி​களில் வாழ்ந்​துள்ளனர். அகார் பாணாஸ் ஆற்றுப்​பண்பாடு செம்புப் பொருள்​களைப் பயன்படுத்திய சிந்து​வெளியின் சமகாலப் பண்பாடு. இவர்கள் சிந்துவெளி நாகரிக மக்களுக்கு அண்மையில் ராஜஸ்​தானத்தில் இருந்​தவர்கள். இவர்கள் செம்புத் தாதுக்​களைச் சிந்து​வெளிப் பண்பாட்டுக்குப் பரிமாற்றம் செய்திருக்​கலாம்.
  • கங்கைச் சமவெளி​யிலும் விந்திய மலைப்​பகு​தி​யிலும், கிழக்​கிந்தியா​விலும், காஷ்மீரிலும் வேளாண்​-மேய்ச்சல் சமூகங்கள் இருந்தன. வடகிழக்கு இந்தியாவில் வேட்டை​யாடும், வேளாண் சமூகங்கள் இருந்தன. இப்பண்​பாடு​களின் வேளாண் உற்பத்​தியும் இயற்கை​சார்ந்த அறிவும் இந்தியப் பண்பாட்டு மரபிற்குச் சிறந்த பங்கை அளித்​துள்ளன. பிற பண்பாடுகளை ஒப்பிடும்​போது, நாம் சிந்துவெளி நாகரி​கத்தைத் தெளிவாகப் புரிந்​து​கொள்​ளலாம்.
  • சிந்துவெளி மக்கள் வேளாண்மை, ஆடு மாடு வளர்த்தல் மட்டுமல்​லாமல், தொழில்​நுட்பங்களைப் பயன்படுத்திப் பொருள்களை உருவாக்கு​ வ​தி​லும், கைவினைத் தொழிலிலும் ஈடுபட்டது நகர வளர்ச்​சிக்கான காரணங்​களில் ஒன்று எனலாம். மற்ற பண்பாடுகளை ஒப்பிடும்போது வணிகம், கைவினைத்​தொழில், பொருள் உற்பத்தி, சந்தைப்​படுத்தும் திறன், தொழில் திறன் இவர்களிடம் மிகுந்​திருந்தது. இவர்கள் தொழில்​மய​மாக்க சமூகமாக இருந்திருக்க வேண்டும்.
  • மேலும் எழுத்து முறை, தொழில்​நுட்பம், வணிகம் ஆகியவையும் நகர உருவாக்​கத்​திற்கான காரணம் எனலாம். ஊர்ப்பு​றங்​களைவிட நகர்ப்பு​றங்​களில் அதிகமான மக்கள் வளமாக வாழ முடிந்தது. இதற்குக் காரணம், கூட்டுறவு போன்ற கருத்​தியல் முறையில் செயல்​பட்​டது​தான்.
  • இந்தியாவில் இந்தோ-ஆரிய, திராவிட, ஆஸ்திரோ ஆசிய, திபெத்​தோ-பர்மிய மொழிக் குடும்பங்கள் இருக்​கின்றன என்பதை நாம் நினைவுகூர வேண்டும். இந்தியாவில் இருந்த பல வகையான இனக்குழுக்களும் சுற்றுச்​சூழலும் பல வகையான பண்பாடுகள் வந்தடையும் ஒருவழிக் கூடு (cul de sac) போன்று இந்தியாவின் கடல் சூழ்ந்த அமைவிடம் இந்தியப் பெருங்​கடற்​பகுதியில் இருப்​பதும் இதற்கான காரணம் எனலாம்.
  • இந்திய வரலாற்றை நாம் ஒற்றைப் பொருண்​மையில் நேர்க்​கோட்டில் கடக்கும் போது தொல்பழங்​காலம், சிந்து​வெளி, வேதகாலம், ஜனபதா எனக் கடந்து​விடு​கிறோம். சில நாகரி​கங்​களுக்கு மட்டுமே சிறப்​பிடம் அளிக்​கிறோம். இங்கு இருந்த பண்பாட்டுப் பன்முகத்​தன்மையை நாம் நினைப்​ப​தில்லை. பண்பாடு ஒற்றை நேர்க்​கோட்டில் வளரவில்லை என்பதைத் தொல்காப்​பியரின் திணைக்​கோட்பாடு விளக்கு​கிறது.
  • தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஆய்வில் வெளிப்​படும் பழங்கால இரும்புத் தொழில்​நுட்​பத்தின் காலம் மிகப் பழையது எனில் அதுவும் குறிப்​பிடத்​தக்​க​தாகும். இங்குதான் பல வரலாற்​றறிஞர்கள் கூறும் இந்தியாவின் வரலாறு கா​விரியி​லிருந்து, வை​கையி​லிருந்து, பொருநையி​லிருந்து தொடங்க வேண்​டும் என்கிற கருத்​தாடல் சிறப்​பிடம் பெறுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories