TNPSC Thervupettagam

சிப்பி எப்படி முத்துகளை உருவாக்குகிறது

January 10 , 2024 314 days 886 0
  • இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று முத்து. மதிப்புமிக்கப் பொருள்களில் ஒன்றாக இருக்கிறது. அதைக் கடலில் வாழும் உயிரினமான சிப்பிதான் உருவாக்குகிறது என்பதும் தெரியும். ஆனால், சிப்பி ஏன் முத்தை உருவாக்குகிறது? சிப்பியின் ஓடு எந்தப் பொருளால் உருவாக்கப் பட்டிருக்கிறதோ அதே பொருளால்தான் முத்தும் உருவாக்கப்படுகிறது. முத்து மட்டுமல்ல மெல்லுடலி (Molluscs) உயிரினங்களான நத்தை, கிளிஞ்சல் போன்றவற்றின் ஓடுகளும் அதே பொருளால்தான் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வேதிப்பொருள், நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தும் கால்சியம் கார்பனேட்.
  • புவியின் மேலோட்டில் எக்கச்சக்கமான கால்சியம் இருக்கிறது. இது பல ஆயிரம் ஆண்டுகளாகச் சிறிது சிறிதாக அரிக்கப்பட்டு ஆறுகளிலும் கடலிலும் கலந்துள்ளது. குறிப்பாகக் கடலுக்கு அடியில் எரிமலைகள் அமைந்திருக்கும் பகுதியில் வெளிவரும் சூடான ஊற்று பாறைகளில் உராய்ந்து நிறைய கால்சியம் தாதுவை உருவாக்குகிறது.
  • அதேபோல வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு கடல்நீரில் கலக்கும்போது வேதிவினை நடைபெற்று, கரைந்த நிலை கார்பனேட்டாகக் கடலில் தங்குகிறது. இவ்வாறு கால்சியமும் கார்பனேட்டும் கலந்து கடல் முழுவதும் கால்சியம் கார்பனேட் காணக்கிடைக்கிறது.
  • ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் இந்த வேதிப்பொருளைத்தான் கடலில் இருக்கும் உயிரினங்கள் தங்கள் உயிர் வாழும் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
  • குறிப்பாக நீரில் வாழும் மெல்லுடலிகள் பல்வேறு பாதுகாப்புக் காரணங்களுக்காக கால்சியம் கார்பனேட்டைப் பயன்படுத்தி ஓடுகளை வடிவமைக் கின்றன.
  • எல்லா மெல்லுடலிகளைப் போலவும் சிப்பிகளின் வாழ்க்கையும் புழுப் பருவத்தில் இருந்தே தொடங்குகிறது. சிப்பியில் உள்ள மேன்டில் எனும் உறுப்புதான் ஓட்டை உருவாக்குவதற்கான கோன்சியோலின், பெர்லுசின் உள்ளிட்ட புரதங்களையும், வேறு சில வேதிப்பொருள்களையும் சுரக்கிறது.
  • இந்தப் புரதங்கள்தாம் ஓட்டை உருவாக்குவதற்கான சாரங் களைக் கட்டமைக்கின்றன. அதாவது நாம் வீடு கட்டுவதற்கு முன் மரப்பலகைகளை வைத்து சாரம் அமைப்பதுபோல. பிறகு சிப்பியில் இருக்கும் செதில் காம்புகள் கடல்நீரைச் சுத்திகரித்து அதிலுள்ள கால்சியம் கார்பனேட்டைப் பயன்படுத்தி ஓடுகளை உருவாக்கும். இப்படித்தான் மெல்லுடலி உயிரினங்கள் ஓடுகளைப் பெறுகின்றன.
  • மெல்லுடலி வகைகளைப் பொறுத்தும், அது வாழும் சுற்றுச்சூழலைப் பொறுத்தும் வெவ்வேறு வகையில் புரதச் சாரங்கள் அமைக்கப்படுகின்றன. அந்தச் சாரங்களைப் பொறுத்து ஓட்டின் வடிவங்களும் அளவுகளும் வண்ணங்களும் மாறுபடுகின்றன.
  • சரி, இந்த ஓடு உருவாகும்போது கடல்நீரில் கரைந்துவிடாதா? கரையாது. மெல்லுடலிகள் மிகச் சிறந்த கட்டிடக் கலைஞர்கள். அவை மிக நேர்த்தியாக கால்சியம் கார்பனேட்டைப் பயன்படுத்துகின்றன.
  • மெல்லுடலிகள் கொலாஜென் உள்ளிட்ட சில புரதங்களைப் பயன்படுத்தி கால்சியம் கார்பனேட்டை இரண்டு வகைப் படிகங்களாகக் கட்டமைக்கின்றன. ஒன்று கால்சைட் (Calcite). மற்றொன்று அரகோனைட் (Aragonite).
  • இரண்டுமே கால்சியம் கார்பனேட்தான். ஆனால், கால்சைட் நிலையானது. அவ்வளவு சீக்கிரத்தில் கரையாது. அதனால் மெல்லுடலிகளுடைய ஓடுகளின் வெளிப்புற அடுக்கு கால்சைட்டால் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், சற்றே கரையும் தன்மை வாய்ந்த அரகோனைட் ஓட்டின் உள்பகுதியில் அமைந்திருக்கும். மெல்லுடலிகளின் உடலில் அமில அளவையும் வெப்பத்தையும் சீராகவைத்திருப்பதில் இந்த அரகோனைட்டுக்கும் பங்கு இருக்கிறது.
  • இவ்வாறு மெல்லுடலிகள் உருவாக் கும் அரகோனைட்டின் ஒருவகைதான் நேகர் (Nacre). இதுதான் விலை உயர்ந்த முத்துகளை உருவாக்கும் மந்திரப் பொருள்.
  • மெல்லுடலிகள் அரகோனைட்டை ஒரு குறிப்பிட்ட அடுக்குகளில் பொருத்தி, அதில் புரதங்களைச் செலுத்தி நேக்கர் எனும் கனிமக் கலவையை உருவாக்குகின்றன. நேக்கரின் சீரான கட்டமைப்புதான் அதன் ஒளிர்வுத் தன்மைக்கும் பளபளப்புக்கும் காரணமாகிறது.
  • ஒளியின் துகள்கள் கெட்டியடைந்த நேக்கரில் மோதும்போது அதன் பல அடுக்குப் படிக அமைப்பில் மோதிச் சிதறுகின்றன. அதனால்தான் முத்து பல வண்ணங்களாக ஒளிர்கிறது.
  • நேக்கர் அழகான பொருள் மட்டுமல்ல. மெலிதானதும் அதேநேரம் வலிமையானதும்கூட. சிப்பிகள் மட்டுமல்ல, பல மெல்லுடலிகள் நேக்கரைச் சுரக்கின்றன. ஆனால், சிப்பிகள் மட்டும்தான் முத்துகளை உருவாக்குகின்றன.
  • ஏன் சிப்பி மட்டும் முத்துகளை உருவாக்க வேண்டும்? உண்மையில் சிப்பி தன்னை வெளிப் பொருள்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத்தான் நேக்கரை உற்பத்தி செய்கிறது.
  • சிப்பிகளுக்குள் ஒட்டுண்ணியோ அல்லது இடையூறு ஏற்படுத்தும் வெளிப்பொருள்களோ உள்ளே நுழையும்போது உறுத்தலை ஏற்படுத்து கின்றன. உடனே மேன்டில் நாம் மேலே பார்த்த கோன்சியோலின் எனும் புரதத்தைச் சுரந்து அவற்றைப் பிடித்துவைத்துக்கொள்ளும். பிறகு அடர்த்தியான நேக்கர் சுரக்க ஆரம்பிக்கும். இந்த நேக்கர் பல அடுக்குகளாகச் சுரந்து சிறிது சிறிதாகக் கெட்டியடையும்போது முத்து உருவாகுகிறது.
  • உண்மையில் முத்து கோள வடிவில் இருப்பது என்பது அபூர்வம்தான். நேகர் இந்த வடிவத்தில்தான் கெட்டியடையும் என்று சொல்ல முடியாது. ஆனால், மனிதர்கள் கோள வடிவத்தில் உள்ள முத்தையே எடுத்துப் பயன்படுத்துகின்றனர். இதனால்தான் அது அபூர்வமானதாகவும் தோன்றுகிறது.
  • இப்படியாகத் தம்மை பாதிக்க வரும் வெளிப்பொருள்களைப் பிடித்து வைத்துதான் சிப்பிகள் முத்துகளைத் தயாரிக்கின்றன. மழை வரும்போது சிப்பி தன் வாயைத் திறந்து, ஒரு துளி மழை நீரை விழுங்கும். அதுதான் முத்தாக உருமாறும் என்று கதைகளில் படித்திருப்பீர்கள். இனிமேல் அந்தக் கதையை நம்ப மாட்டீர்கள்தானே?

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories