TNPSC Thervupettagam

சிறப்புக் கூறுத் திட்ட நிதி: ஒடுக்கப்பட்டோருக்குக் கிடைக்குமா நீதி

July 18 , 2023 554 days 341 0
  • தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக் கூட்ட விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் மு.பூவை ஜெகன்மூர்த்தி, சிறப்பு உட்கூறுத் திட்டம் குறித்த கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அதில், ‘பட்டியல்-பழங்குடி மக்களுக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம், பழங்குடியினர் துணைத் திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே பட்டியல் சாதி மக்களுக்கும் மற்ற சமூகத்தினருக்கும் இடையிலான வளர்ச்சி-மேம்பாட்டு இடைவெளியைக் குறைத்துச் சமன் செய்யவும், அம்மக்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்தவும், அவர்களுக்கான ஆக்க வளமுடைய சொத்துக்களை உருவாக்கித் தந்திடவும் தனியான திட்டங்கள் கொண்டுவந்து செயல்படுத்துவதுதான்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
  • பொதுவாக, எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் உருவாக்கப்படும் திட்டங்களின் பலன், ஒடுக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதில் ஏதோவொரு வகையில் தடைகள் தொடர்கின்றன. சாதிப் பாகுபாட்டுச் சூழலைக் காண முடியாத, கண்டும் காணாது போகும் ஆட்சியாளர்களும், திட்ட வல்லுநர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

மறைந்துபோன நிதி:

  • சிறப்பு உட்கூறுத் திட்டத்துக்காக 2021-22ஆம் நிதியாண்டில், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப் பட்ட நிதி ரூ.14,387.85 கோடி. இதில், செலவிடப்பட்ட தொகை ரூ.11,969.30 கோடி. ஏறக்குறைய ரூ.2,418.55 கோடி, அதாவது 16.81% தொகையானது பயன்படுத்தப்படாத நிதியாகச் செலவிடப்படாமல், பொதுக் கணக்குக்குள் கரைந்தும் மறைந்தும் போனது.
  • ‘ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும், இம்மக்களுக்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்படாத நிதி, அதற்கு அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், காரணகாரியத்தோடு எடுத்துச் செல்லப்பட வேண்டும்’ என்கிற நிதிநிலை அறிக்கை-வரவு-செலவுத் திட்ட மரபு இருந்தாலும், அந்தப் பொறுப்பைச் சிரமேற்கொண்டு யாரும் செய்வதில்லை. அக்கறையோடு தேடி காத்திரமாகக் கேட்பாருமில்லை.
  • மேலும், 2022-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, சிறப்பு உட்கூறுத் திட்டத்தில், பட்டியல் சாதியினருக்கு என ஒதுக்கப்பட்ட நிதியில், ஜனவரி 2023 முடிய 35% நிதியளவு மட்டுமே சிறப்பு உட்கூறுத் திட்ட நிதியிலிருந்து செலவிடப்பட்டிருந்தது என்பது சில ஆதாரபூர்வமான கணக்குகளிலிருந்து தெரியவருகிறது.
  • மக்களின் நல-மேம்பாடு குறித்த அடிப்படைத் தரவுகளும், மக்களின் வாழ்நிலை யதார்த்தம், பிரச்சினைகள்-தேவைகள் குறித்துப் பிரித்து அறியக்கூடிய புள்ளிவிவரங்கள் இல்லாததே இதற்குக் காரணம். மேலும், துறைகளிடம் (ஆதிதிராவிடர் நலத் துறையிலும்கூட) சரியான திட்டமிடல் இல்லாததால், அவர்களுக்காக வரைந்தளிக்கப்பட்ட, சிறப்புக்கூறுத் திட்டமெனும் இத்திட்டம், பட்டியல் சாதிப் பயனாளிகளை முழுமையாகச் சென்றடைவதில்லை.

மடைமாற்றங்கள்:

  • 2023-2024 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் எல்லாத் துறைகளுக்கும் நிதியளவு கூடுதலாக ஒதுக்கப்பட்டு, புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், பட்டியல் சாதி-பட்டியல் பழங்குடியினருக்கு மட்டும் நிதியளவைக் குறைவாக ஒதுக்குவதும், அப்படி ஒதுக்கும் நிதியையும் வேறு திட்டங்களுக்கு மடைமாற்றுவதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வருகிறது.
  • பொது விநியோக முறை உதவியுடன் சமூகப் பாதுகாப்பு–உணவு உத்தரவாத (பொது) திட்டக் கணக்குக்குப் பல ஆண்டு காலமாகப் பொதுவான திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுவந்தது. இந்த (2023-24) நிதியாண்டில் பட்டியல் சாதி மக்களின் சிறப்பு உட்கூறுத் திட்ட நிதிக் கணக்கிலிருந்து மானியத் தொகையில் ரூ.2,310 கோடி, பொதுத் திட்ட நிதிக் கணக்கில் சேர்த்துக் கொடுத்து மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • அதே போல், புதிய பொதுத் திட்டமான மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துக்கு, ரூ.1,540 கோடி சிறப்பு உட்கூறுத் திட்ட நிதியிலிருந்து தாரைவார்க்கப்பட்டுள்ளது (பொதுவாக எல்லாத் தரப்புப் பெண்களுக்குமாகச் சேர்த்து, இத்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதி ரூ.7,000 கோடி ஆகும்).
  • மேற்கூறிய இந்த இரண்டு பொதுத் திட்டங்களில் மட்டும், பட்டியல் சாதி மக்களுக்கான, தனித்துவமான நிதித் தொகையிலிருந்து ரூ.3,850 கோடி, பொதுத் திட்டச் செலவினமாக மடைமாற்றப் பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டும் பட்டியல் சாதி மக்களின் தேவையை, மேம்பாட்டைக் கூர்நோக்குடன் அணுகி (சிறப்புக் கூறுத் திட்ட வரையறைப்படி) வகுத்தளிக்கப்பட்ட திட்டங்கள் அல்ல.
  • அம்மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கெனத் தனித்துவமாக உருவாக்கப்பட்டவையும் அல்ல. இத்திட்டங்களால் பட்டியல் சாதி மக்கள் எவ்விதப் பொருளாதார மேம்பாடும் அடையப் போவதில்லை. இவற்றால், மற்ற சமூக மக்களுக்கும், பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி மக்களுக்கான மேம்பாட்டு இடைவெளி குறையப்போவதும் இல்லை.

வழிகாட்டும் அண்டை மாநிலங்கள்:

  •  2021-22ஆம் நிதியாண்டில் மேற்கண்ட சிறப்பு உட்கூறுத் திட்டத்துக்கென ஒதுக்கப்பட்டுச் செலவிடப் படாததால் ரூ.2,418 கோடி தொகையானது தேவைப்படாத நிதியென்று, இந்த (2023-24) நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தாட்கோவில் (TAHDCO) வழங்கப்படும் மானியத்தில் உள்ள குறைபாடுகள் இன்னொருபுறம். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் தாட்கோ போன்ற பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் கடன்களுக்கு ரூ.1 லட்சம் வரை 80% மானியமும், ரூ.2 லட்சம் வரை 70% மானியமும், ரூ.2 லட்சத்துக்கு மேல் 60% வரை மானியமும் வழங்கப்படுகின்றன.
  • ஆனால், தமிழகத்தில் தாட்கோ மூலம் ஒரே மானியமாக 30% மட்டுமே வழங்கப்படுகிறது. மேற்சொன்ன மாநிலங்களில் உள்ள நிறுவனங்களில் மானியங்களை வழங்குவது போன்று தாட்கோவிலும் வழங்கப்பட வேண்டும். அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானாவில் பொருளாதார மேம்பாட்டுகென திட்டச் செலவினங்களில், மாநில அரசின் பங்களிப்பாக முறையே ரூ.3,931 கோடியும், ரூ.1,784 கோடியும் 2022-23ஆம் ஆண்டில் முறையே ஒதுக்கப்பட்டன.
  • இவை போன்ற மாநில அரசின் பங்களிப்பைப் பட்டியல் சாதி-பழங்குடி மக்களுக்குத் தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்கினால்தான் இங்குள்ள மக்கள் மேம்பாட்டுப் பயன்களைப் பெற முடியும்.
  • ஆனால், தாட்கோவின் மூலம் மானியம் வழங்கப்பட்டாலும் பொதுத்துறை வங்கிகளோ, தமிழக அரசின்கீழ் இயங்கும் கூட்டுறவு வங்கிகளோ பட்டியல் சாதி-பழங்குடி மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுடைய தொழில் முயற்சிகளை, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகக் கடன் வழங்க முன்வருவதே இல்லை.
  • இவை போன்ற முரண்பாடுகள் பட்டியலினத்தவரின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மிகப்பெரும் தடையாக உள்ளன. மத்திய-மாநில அரசுகளால் அவ்வப்போது சுற்றறிக்கை வெளியிடப்பட்டும், பிணை - நிதியாதாரம் கேட்கப்படக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டும், அரசு வங்கிகள் பிணை கேட்டு வலியுறுத்துகின்றன; நிதிநல்கையைத் தாமதப்படுத்தவும் செய்கின்றன.
  • தெலங்கானாவில் ‘தலித் பந்து’ என்னும் பெயரில் பட்டியல் சாதியினருக்கான தொழில்-முனைவோர் திட்டம், 2021 ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின்படி, அம்மாநிலத்தின் உசுராபாத் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மட்டும் 21,563 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, பயனாளி ஒருவருக்கு ரூ.10 லட்சம் என்கிற ரீதியில், வீடு தேடிச் சென்று நிதி வழங்கப்பட்டு மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் 2021-22இல் மட்டும் 18,021 பட்டியல் சாதிப் பயனாளிகள் மேம்பாடு அடைந்திருக்கின்றனர்; 2022-23இல் மட்டும் ரூ.17,000 கோடி நிதிக்கொடை வழங்கப்பட்டு, பட்டியல் சாதியைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் தொழில்முனைவோராக உருவாகியுள்ளனர்.

அரசின் கடமை:

  • தமிழ்நாட்டில் நிலம் வாங்கும் திட்டமென, 2021-22இல் சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பெயரில், பட்டியல் சாதி-பழங்குடிப் பெண்களுக்கு நிலம் வாங்கும் திட்டத்துக்கென 2022-23ஆம் நிதியாண்டில் (தமிழக அரசால் வழங்கப்பட்ட 50% மானியத்தோடு கூடிய திட்டப்படி) ரூ.10 கோடி திட்டநிதியாக ஒதுக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இத்திட்டம் சென்றடையவில்லை.
  • இன்றுவரை, தமிழ்நாட்டில் ஒவ்வொரு நிதியாண்டுக்கும் 100 பயனாளிகளுக்கும் குறைவான எண்ணிக்கையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், தெலங்கானாவில் செயலாக்கப்படும் நில மானியத் திட்டத்தின்கீழ், அம்மாநிலத்தில் 2014-15 முதல் 2022-23 ஆண்டு வரை 6,995 பயனாளிகளுக்கு 17,096 ஏக்கர் நிலங்கள், ரூ.769 கோடி செலவிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாட்டிலும் பட்டியல் சாதி-பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் அக்கறையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • பட்டியல் சாதி-பட்டியல் பழங்குடியினருக்கு மட்டும் நிதியளவைக் குறைவாக ஒதுக்குவதும், அப்படி ஒதுக்கும் நிதியையும் வேறு திட்டங்களுக்கு மடைமாற்றுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (18  – 07 – 2023)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
Top