TNPSC Thervupettagam

சிறாரைப் புத்தகக் காட்சிக்கு வரவேற்போம்!

September 28 , 2024 109 days 169 0
  • நடந்து முடிந்த மதுரைப் புத்தகக்​காட்​சியில் சிறுதெய்வ வழிபாட்டுப் பாடலுக்குப் பள்ளிச் சிறார் சிலர் ஆடியதைச் சாமி ஆடியதாக விமர்சனம் செய்யப்​பட்டது. ஆனால், நம்மில் எத்தனை பேர் அரங்கு​களில் இருந்த புத்தகங்களை, அவற்றின் தரத்தை விமர்சனம் செய்தோம்?
  • அரசே நடத்தும் புத்தகத் திருவிழா​வில், சில அரங்கு​களில் அரசுப் பள்ளிச் சிறாரை அனுமதிப்பது இல்லை என்பதை ஒவ்வோர் ஆண்டும் நேரில் பார்க்​கிறேன். ஏன் சிறாரை உள்ளே அனுமதிக்க​வில்லை என்று அவர்களிடம் வாக்கு​வாதம் செய்திருக்​கிறேன். இந்த ஆண்டில் பெரும்​பாலான அரங்கு​களில் பள்ளிச் சிறாரை அரங்கு​களுக்கு உள்ளே அழைத்​தார்கள். புத்தகங்களை எப்படி எடுத்​துப்​பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்கள். ஆனாலும் வழக்கம்​போலச் சில அரங்கு​களில் பள்ளிச் சிறாரை அனுமதிக்க​வில்லை.
  • அரசே புத்தகக்​காட்​சிகளை நடத்து​கிறது என்றால், அது முழுவதும் வியாபார நோக்கத்தில் அல்ல என்பது தெளிவு. இச்சமூகத்தில் வாசிப்பு ஒரு பழக்கமாக மாற வேண்டும் என்பதே அதன் அடிப்படை நோக்கம். அதற்காகத்தான் அரசால் பெருமளவு நிதி செலவழிக்​கப்​படு​கிறது.
  • எனவே, புத்தகக்​காட்​சிகளின் நோக்கத்தைப் பதிப்​பாளர்கள், விற்பனை​யாளர்​களிடம் தெளிவுபடுத்த வேண்டும். பெரிய​வர்களை வாசிக்க வைப்ப​தை​விடப் பள்ளிச் சிறாரை வாசிக்கப் பழக்குவது எளிது. எனவே, பள்ளிச் சிறாரை அனுமதிக்காத அரங்குகளை உடனே கண்காட்​சியி​லிருந்து வெளியேற்ற வேண்டும்.
  • மாவட்​டங்​களில் புத்தகக்​காட்​சிகளை நடத்து​வதற்கு மாநில அளவிலான வழிகாட்டும் நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட வேண்டும். மாவட்​டங்​களில் அரசு அலுவலர்கள், தன்னார்வ நிறுவனங்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்​களைக் கொண்ட குழு அமைக்​கப்பட வேண்டும். அந்தக் குழுவின் மூலமே புத்தகக்​காட்சி நிகழ்வு​களைத் திட்டமிட வேண்டும்.
  • அந்தந்த மாவட்​டத்தில் உள்ள பேச்சாளர்கள், கவிஞர்கள், எழுத்​தாளர்கள், கலைஞர்களை மட்டுமே மாலை நேர நிகழ்வு​களுக்கு அழைக்க வேண்டும். கலைத் திருவிழா போட்டிகளில் பங்குபெற்ற சிறப்பான கலைநிகழ்வுகளை அங்கே நிகழ்த்​த வைக்​கலாம்.
  • பள்ளிச் சிறார் வந்ததும் அவர்களை அமர வைக்கத் தனியான அரங்கு இருக்க வேண்டும். தினமும் அந்தந்த மாவட்​டத்தில் உள்ள கவிஞர்கள், எழுத்​தாளர்கள், வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களை அந்த அரங்கிற்கு அழைக்​கலாம். அவர்கள் வாசிப்பு, எழுதுதல் பற்றிய அனுபவங்​களைச் சிறாரிடம் சிறிது நேரம் பகிரலாம். புத்தகங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று எடுத்​துச்​சொல்ல வேண்டும். அவர்களே சிறுசிறு குழுவாகச் சிறாரை அரங்கு​களுக்கு அழைத்​துச்​சென்று புத்தகங்களை அறிமுகப்​படுத்​தலாம். வாசித்தல், எழுதுதல், கலைகள் எனப் பல்வேறு அறிமுகப் பயிற்சி​களையும் சிறாருக்கு வழங்கலாம்.
  • சிறார் புத்தகங்​களுக்காக மட்டுமே தனியான அரங்குகளை ஒரு பகுதியில் ஒதுக்​கலாம். பல்வேறு அரங்கு​களில் பல்வேறு பதிப்​பகங்​களின் புத்தகங்களை விற்பனை செய்வது​போலச் சிறாரின் வயதுக்​கேற்ற அரங்குகளை அமைக்​கலாம். மகளிர் சுயஉதவிக் குழுக்​களின் மூலம் அந்த அரங்குகளை நிர்வகிக்​கலாம். சிறாருக்கு ஏற்றபடி அந்த அரங்குகளை வடிவமைக்​கவும் வேண்டும்.
  • புத்தகக்​காட்​சிகள், புத்தகத் திருவிழாக்களாக மாற வேண்டும். வாசிப்​பவர்கள் குறைந்​து​விட்​டார்கள் என்று புலம்​புவதை விடுத்து, வருங்​காலத் தலைமுறையை வாசிப்​பவர்களாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதே இன்றைய தேவை.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories