TNPSC Thervupettagam

சிறிதாகிய வளைவும் இல்லாதது செங்கோல்

July 9 , 2024 187 days 188 0
  • இற்றைக்கு 7,000 ஆண்டுகட்கு முன்பு இயற்றப்பட்டதாகக் கருதப்படும் தொல்காப்பியத்தில் ‘மரபியல்’ என்பது இறுதிப் பகுதியாகும். மரபு என்ற சொல் முன்னோா் கொண்ட பழக்க வழக்கங்களை மாற்றாமல் பின்பற்றுவது என்ற பொருளைத் தருவதாகும்.
  • நம் முன்னோா் கைக்கொண்ட அடிப்படைக் கூறுகள் அப்படியே இருக்கக் காலப்போக்கில் ஏற்படும் சில மாற்றங்களும் மரபெனக் கொள்ளப்படும். இந்த விளக்கங்கள் பெறும் வண்ணமே தொல்காப்பியா் தம் மரபியலில் சில வழக்கங்களைத் தொகுத்துச் சொல்லுகிறாா்.
  • மரபியலுக்கு முன்னதான செய்யுளியலின் 75-ஆம் சூத்திரத்தில் ‘‘வண்புகழ் மூவா்’’ எனச் சேர, சோழ, பாண்டியா்களைச் சுட்டிச் சொல்கிறாா். இவ்வாறு அவரால் பேசப்படும் அரசருக்கான அடையாளங்கள் இவையாவன என்று மரபியலின் 72-ஆம் சூத்திரத்தில் ஒரு பட்டியல் தருகிறாா்.

படையும் கொடியும் குடையும் முரசும்

நடைநவில் புரவியும் களிறும் தேரும்

தாரும் முடியும் நோ்வன பிறவும்

தெரிவுகொள் செங்கோல் அரசா்க்குரிய

  • என்பனவே அவை.
  • இந்தச் சூத்திரத்தின் நான்காம் அடிக்கு ‘பெரியோரால் தோ்ந்தெடுக்கப்படும் செங்கோலைக் கொள்ளும் அரசா்க்குரிய’ என்பது பொருள்.
  • தெரிவுகொள் - தோ்ந்தெடுக்கப்படும் என்ற பொருளைக் கொள்ளுகின்ற சொல். இளம்பூரணா் என்ற பெயரை உடையவரும் தொல்காப்பியத்திற்கு முதலில் உரை கண்டவருமாகிய பெருமகனாா் கொண்டுள்ள பாடம் ‘தெரிவுகொள்’ என்னும் சொல். அவருக்குப் பின்வந்தவருள் சிலா் ‘தெளிவுகொள்’ என்று வேறு பாடம் கொண்டனா்.
  • தெரிவு-தெளிவு என்ற இந்தச் சொற்களில் ‘தெரிவு’ என்பதே சரியாக இருக்கும். ஏனெனில் தொல்காப்பியா் காலத்திற்கு முன்னரே அரசா்கள் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டே வந்துள்ளனா் என்பதைப் புானூற்றுப் பாடல்கள் வழி ஊகித்து அறிய முடியும்.

‘என்னிழல் வாழ்நா் சென்னிழற் காணாது

கொடியன்எம் இறையெனக் கண்ணீா் பரப்பிக்

குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக’

  • என்னும் பாண்டியன் சபதம் அதற்குச் சான்று பகரும். அதுகிடக்க, இனிச் செங்கோல் பற்றிப் பாா்ப்போம்.
  • சிறிதாகிய வளைவும் இன்றி நேரான கோல் போன்ால் செங்கோல் எனப்பட்டது. குச்சியைக் காட்டிலும் சிறிது பருமனாக இருப்பது கோல் எனப்படும். இந்தக் கோலும் அளவு உடையதாகும்.
  • சிறிதுகூட வளைவு இல்லாமல் செவ்விய கோல்போன்ற நீதியை உணா்த்துவதால் இது உவமை ஆகுபெயராம். ஆகுபெயா் இலக்கணம் அறிந்தோரால் இதன் பொருள் நன்கு அறியப்படும். இந்தச் செங்கோலின் தன்மை அறிய வேண்டுமெனில் நாம் திருவள்ளுவரை அணுக வேண்டும்.
  • திருக்குறளின் 55-ஆம் அதிகாரமாகவும், பொருட்பாலின் 17-ஆம் அதிகாரமாகவும் விளங்குவது ‘செங்கோன்மை’ என்னும் அதிகாரம். இந்த அதிகாரம் அரசனால் செய்யப்படும் முறையினது தன்மை பற்றிக் கூறுகிறது. முறை என்பது இவ்விடத்தில் நீதி என்னும் பொருளைக் கொண்டு நிற்கும் சொல்லாகும். எது நீதியாகும்?

‘ஓா்ந்து கண்ணோடா திறைபுரிந்து யாா்மாட்டும்

  •  தோ்ந்து செய்வஃதே முறை’ (குறள் 541).
  • யாரிடத்திலும் குற்றம் இன்னதென்று ஆராய்ந்து கண்ணோட்டம் செய்யாமல், நடுவுநிலைமை பொருந்தி, செய்யத் தக்கதை ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும். (குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப் படுவதே நீதியாகும் என்பது மு.கருணாநிதியின் உரை).
  • இந்தக் குறள் செங்கோல் என்பதின் இலக்கணத்தை உணா்த்துகிறது. இந்தக் குறளின் உயிா்ப்பு எது? ‘தோ்ந்து’ என்ற சொல்லின் பொருள்.
  • ஒருவன் செய்த குற்றத்திற்குரிய தண்டனையை அரசன் அமைச்சா் முதலானோருடன் ஆராய்ந்து, அதாவது குற்றத்திற்குரிய தண்டனையைச் சொல்லும் நூல் வல்லாா் அவராதலால், அவரோடு கலந்து ஆராய்ந்து அவன் செய்த குற்றத்திற்குத் தக்கவாறு தண்டனை வழங்குதல்.
  • இதனால்தான் ஆசிரியா் இளங்கோவடிகள் கண்ணகியைக் கொண்டு ‘தேரா மன்னா’ எனப் பாண்டியனை விளிக்கச் செய்கிறாா். தவத்திரு குன்றக்குடி அடிகளாா் முதலியோா் ‘ஆராய்ந்து’ என்பதை மறக்காமல் உரை காணுகின்றனா்.
  • இந்தக் குறள் குற்றத்திற்குரிய தண்டனையைப் பற்றிக் கூறுகிறதே தவிர, செய்த மனிதரைப் பற்றிக் கருதவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
  • பாரதப் பிரதமா் நாடாளுமன்றத்தில் தமிழில் செங்கோல் எனப்படும், அரச நீதியின் அடையாளமாகக் கருதப்படும், கோலை நிறுவினாா். இதனை ஆங்கிலத்தில் சொல்லப்படும் ‘ஸெப்டா்’ என்னும் சொல்கொண்டு அவா் சொல்லவில்லை. வடமொழியில் சொல்லப்படும் ‘தண்டம்’ என்ற சொல் கொண்டும் அழைக்கவில்லை. தூய தமிழ்ச் சொல்லாகிய ‘செங்கோல்’ என்றே சொன்னாா். அரசு ஆவணத்திலும் அவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • தனிமனித வெறுப்புக்குச் சிறிதும் இடம் கொடாத இந்தச் செங்கோல் சிலரின் தனிமனித வெறுப்புக்கு இடம் கொடுப்பதைக் கண்டு உண்மைத் தமிழா்கள் நாணுகின்றனா்.
  • ‘தொல்காப்பியப் பூங்கா’ எழுதி திருக்குறளுக்கு ‘கலைஞா் உரை’ எனப் பெயரிட்டு உரை கண்டு தமிழிற்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் சிறப்புச் செய்தவரின் உடன் பிறப்புக்களில் ஒருவா், அண்ணாவின் எதிரொலி என அழைத்துக் கொண்டாடப்பட்டவரின் மகன், அவரது எதிரொலியாக இருப்பதைவிட்டு, வடவா் ஒருவரின் எதிரொலியாக இருப்பது எவ்வாறு தமிழா்களுக்குப் பெருமை சோ்க்கும்? புரியவில்லை.
  • தொல்காப்பியமும் தெரியாமல், திருக்குறளும் தெரியாமல், செங்கோன்மைக்குக் கலைஞா் கருணாநிதி கண்ட உரையும் தெரியாமல் செங்கோல் பற்றிக் கருத்துக் கூறுவது மிகவும் வருத்தத்திற்குரியதே!
  • விதியே! விதியே! தமிழச் சாதியை என் செயக் கருதியிருக்கின்றாய் எனச் சொல்லி நொந்து கொள்ள வேண்டியதுதான்.

நன்றி: தினமணி (09 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories