- அறிவியலாளர், சூழலியலாளர், எழுத்தாளர், உழவர் உரிமைச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர் வந்தனா சிவா. இந்திய வேளாண் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு முக்கிய பங்களிப்புகளைச் செய்தவர். 30ஆண்டுகளுக்கு முன்பு அவர் தொடங்கிய அறிவியல், தொழில் நுட்பம், சூழலியலுக்கான ஆய்வு மையம் (Research Foundation for Science, Technology and Ecology – RESTE) வேளாண்மையில் வளங்குன்றா முறைகளை வளர்த்தெடுப்பதற்கான அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகிறது. 1991இல் இவர் தொடங்கிய ‘நவதான்யா’, நாட்டு விதைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம்.
- பசுமைப் புரட்சியின் தீவிர விமர்சகரான வந்தனா சிவா, உணவுப் பாதுகாப்பை அதிகரிக்கும் இலக்குடன் பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டாலும், பல மரபார்ந்த விதைகள் வழக்கொழிந்துபோவதற்கும் வேளாண் மரபை இழப்பதற்கும் அது வழிவகுத்தது; வேதிப்பொருள்களின் பயன்பாட்டால் நம்முடைய மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான சேதங்களை விளைவித்தது என்கிறார்.
- 2023 ஆம் ஆண்டு ‘சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு’ என்று ஐக்கிய நாடுகள் அவை அறிவித்திருப்பதை ஒட்டி வந்தனா சிவா அளித்த நேர்காணலின் சுருக்கமான தமிழ் வடிவம்:
‘2023 சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு’ என்று ஐ.நா. அறிவித்திருப்பது, அந்த உணவு வகைகளின் நன்மைகளை அனைவருக்கும் கொண்டுசேர்க்க உதவுமா?
- சிறுதானியங்கள் மறக்கப்பட்ட உணவாகி விட்டன. மறக்கப்பட்ட சிறுதானிய உணவு வகை களை ‘நவதான்யா’ மூலம் வருங்காலத்துக்கான உணவாக மாற்ற கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறோம். சிறுதானியங்களை முக்கிய உணவாக முன்னெடுப்பது விவசாயி களுக்குப் பெரும் பயன் அளிக்கும்.
பெரும்பாலான சிறுதானியங்களின் முன்னணி உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. ஆனால் கரும்பு, பருத்தி, அரிசியை முன்னெடுத்துச் சென்ற அளவுக்குச் சிறுதானியங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஏன்?
- இந்தியா முழுவதும் சிறுதானியங்களே முதன்மைப் பயிர்களாக இருந்தன. விதிவிலக்காக, மிகை நீர்ப்பகுதிகள் சிலவற்றில் மட்டுமே நெல் முதன்மைப் பயிராக இருந்தது. இவற்றுக்கு மாற்றாகக் கரும்பு, பருத்தி ஆகியவற்றைப் பயிரிடும் கலாச்சாரத்தை பிரிட்டிஷார்தான் நம் மீது திணித்தனர். இதன் மூலம் இந்தியாவில் வேளாண்மைப் பன்மைத்துவமும் உள்ளூர் பதப்படுத்தலும் சரிவடைந்தன. காலப் போக்கில் இந்திய உணவுத் தட்டிலிருந்தும் விவசாயிகளின் விளைநிலங்களிலிருந்தும் சிறுதானியங்கள் காணாமல் போயின. நவதான்யா போன்ற இயக்கங் கள், விவசாய அமைப்புகளின் செயல்பாடுகள்தாம் சிறுதானியங்களைப் பாதுகாத்து அவற்றை விவசாயிகள் வளர்க்க ஊக்குவித்துவருகின்றன.
சிறுதானியங்களின் பயன்களை விவரிக்க முடியுமா?
- சிறுதானியங்களை விளைவிக்க மிகக் குறைந்த நீரே போதும். எனவே, நீர்ப் பற்றாக் குறை என்னும் நெடுங்கால நெருக்கடிக்கு சிறுதானியங்களே தீர்வு. அரிசியையும் கோதுமையும்விட அதிக ஊட்டச்சத்து அடர்த்தியைக் கொண்டிருப்பதால், இவை ஊட்டச்சத்து குறைபாடு என்னும் நெருக்கடிக்கும் தீர்வாகின்றன. ஒளிச்சேர்க்கையில் திறன்மிக்கவையாக இருப்பதாலும், புதைபடிவப் பொருள்களை அடிப்படையாகக் கொண்ட உரம் போன்ற இடுபொருள்கள் தேவைப்படாமல் உயிர்த் திரள்களை (Biomass) உருவாக்கக்கூடியவை என்பதாலும் காலநிலை நெருக்கடிக்கும் சிறுதானியங்கள் தீர்வாக அமைகின்றன.
சிறுதானியங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதைத் தடுப்பதாக அமைந்த பயிர் விதைப்பு மாதிரிகளுக்கு நாம் மாறியது எப்படி?
- 1960களில் இந்தியாவில் பசுமைப் புரட்சி திணிக்கப்பட்டபோது வேதித்தன்மை வாய்ந்த அரிசி, கோதுமை ஆகிய ஓரினச் சாகுபடியே பரவலான பயிர்விதைப்பு முறையாக உருவெடுத்தது. உள்ளூர் பயிர்களைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான நீர் அவற்றுக்குத் தேவைப்பட்டது. பசுமைப் புரட்சி என்பது சிறுதானியங்கள் மீதான பண்பாட்டுப் போர். அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட அரிசியையும் கோதுமையும்விட அதிக ஊட்டச்சத்துப் பலன்களைக் கொண்டவை சிறுதானியங்கள். குறைந்த நீரைப் பயன்படுத்தியவை, வளம் குன்றிய நிலங்களில்கூட அவை வளரும். இவ்வளவு இருந்தும் சிறுதானியங்கள் ‘பண்படாத’ பயிர்கள் என்றும் ‘கரடுமுரடான’ தானியங்கள் என்றும் தவறாக அழைக்கப்பட்டன.
- பொது விநியோக முறை நம் உணவுப் பழக்கத்தை அரிசி, கோதுமையின் ஆதிக்கம் நிறைந்ததாக மாற்றிவிட்டது. சிறுதானியங்கள் தாழ்வானவை என்னும் பண்பாட்டுரீதியான வரையறை, வெள்ளை நிறம் மேன்மையானது கறுப்பு/அடர் நிறம் தாழ்வானது என்னும் மனப் போக்கின் அடிப்படையிலானது. ஏனென்றால் சிறுதானிய மாவு கறுப்பு/அடர் நிறம் கொண்டது. ஊட்டச்சத்து இல்லாத நிறமூட்டப்பட்ட வெள்ளை அரிசியையும் பதனிடப்பட்ட கோதுமை மாவையும் உணவு அமைப்புக்குள் கொண்டு வந்ததன் மூலம் உணவில் இனவாதக் கூறு அறிமுகப்படுத்தப் பட்டது. இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் நோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகிய நெருக்கடிகள் இவற்றின் விளைவுகள்தாம். நம் வேளாண் நிலங்களில் சிறுதானியங்களின் உயிர்ப்பன்மையை இழந்துவிட்டோம்.
சிறுதானிய உற்பத்தி அதிகரிப்பது சிறு விவசாயிகளுக்கும் சிறிய அளவிலான நில உரிமையாளர்களுக்கும் உதவுமா?
- சிறுதானியங்களின் எதிர்காலம் சிறு விவசாயிகளின் கைகளில்தாம் உள்ளது. அவர்களின் உழவு அமைப்புகள், உணவு அமைப்புகள், உழவர்களின் அறிவு, உணவுப் பண்பாடு ஆகியவை மீட்கப்பட வேண்டும். பொது விநியோக முறை, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவை (ICDS), மதிய உணவுத் திட்டம் போன்ற ஏழை மக்களுக்கான திட்டங்கள் ஆகியவற்றுக்காகச் சிறுதானியங்களை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதே சிறு விவசாயிகளுக்கு அரசு அளிக்கக்கூடிய ஆதரவு. நியாயமான, குறைந்தபட்ச ஆதார விலையும் அரசு கொள்முதலும் சிறுதானியங்களின் மறுமலர்ச்சிக்குப் பெரிய பங்களிக்க முடியும். அத்துடன் சிறு விவசாயிகளுக்கு வாழ்வாதார பாதுகாப்பையும் ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும். வாங்கும் சக்தியும் விழிப்புணர்வும் உள்ளோர், ஏற்கெனவே சிறுதானியங்களுக்கு மாறத் தொடங்கிவிட்டனர். கடந்த முறை நான் பெங்களூருவுக்குச் சென்றபோது அங்கு 500 கடைகளில் சிறுதானியங்கள் விற்கப்படுவதாகக் கேள்விப்பட்டேன்.
சிறுதானியங்களின் மீட்புக்கு உகந்த மாதிரித் திட்டம் எது?
- நவதான்யாவில் நாங்கள் உருவாக்கியுள்ள மாதிரி இது:
- 1. சமூக விதை வங்கிகள் மூலம் சிறுதானிய விதைகளைச் சேமித்தல், பகிர்ந்துகொள்ளுதல், பெருக்குதல்.
- 2. விவசாயி-உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்குதல்.
- 3. கிராம நிலையில் சிறிய அளவிலான பதப்படுத்துதலை உருவாக்குதல். இதன்மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள், சுழற்சிப் பொருளா தாரத்தில் உள்ளடக்கப்படுவதை உறுதிப்படுத்துதல்.
- 4. சிறுதானியங்கள் சந்தை வழியாகவும் அரசு கொள்முதல் மூலமாகவும் நுகர்வோரைச் சென்றடைவதற்கான விநியோக வலைபின்னல்களை உருவாக்குதல்.
- 5. மரபார்ந்த - புதிய சிறுதானிய விழாக்களைக் கொண்டாடுதல். இதன் மூலமும் சிறுதானியப் பண்பாட்டுக்குப் புத்துயிரூட்ட முடியும்.
நன்றி: தி இந்து (27 – 08 – 2023)