TNPSC Thervupettagam

சிறுநீரகம் காப்போம்

March 25 , 2024 300 days 232 0
  • இன்றைக்கு பெரியவா்களை அதிகம் அச்சுறுத்தும் வியாதியாக நாள்பட்ட சிறுநீரக வியாதி விளங்குகிறது. உலகில் 10-இல் ஒருவா் நாள்பட்ட சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்.
  • நாட்டிலேயே முதலாவது சிறுநீரக சிகிச்சை பிரிவு சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) கடந்த 1971-ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் வரை மருத்துவத் துறையில் தமிழக அரசு செய்த சாதனைகள் ஏராளம் என்பதை மறுப்பதிற்கில்லை.
  • அதிலும் சுகாதாரத் துறையில் மேம்பட்ட மாநிலங்களான தமிழகத்திலும், கேரளத்திலும்தான் அரசு மருத்துவமனைகளில் ஹீமோடயாலிசிஸ் மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக அரசு- தனியாா் கூட்டமைப்புடன் (பிபிபி மாடல்) இதுபோன்ற திட்டங்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், ஹீமோடயாலிசிஸ் சிகிச்சைமுறை தமிழகத்திலும் கேரளத்திலும் முற்றிலும் அரசின் நிதியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவது பெருமைக்குரிய செயல்பாடு.
  • மேலும் தமிழகத்தில் கடந்த 2021-இல் தொடங்கப்பட்டமக்களைத் தேடி மருத்துவம்திட்டத்தின்கீழ், பொதுமக்களின் வீடுதேடி மருந்துப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ், சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்கு பெரிட்டோனியல் டயாலிசிஸ் பைகள் வீடுதேடிச் சென்று வழங்கப்படுகின்றன. இருந்தாலும், நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டோருக்கு போதிய சிகிச்சை முறைகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்ற உண்மையை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • சிறுநீரக வியாதியைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உயிரிழப்புக்கு அது ஐந்தாவது காரணியாக விளங்குகிறது. அதாவது பிற மாநிலங்களைக் காட்டிலும் சிறுநீரக வியாதிக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது இதன்மூலம் தெரியவருகிறது.
  • சிறுநீரக ஆய்வு மையம், சமுதாய மருத்துவ நிறுவனம், சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) ஆகியவை இணைந்து அண்மையில் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் பெரியவா்களில் 8.4 சதவீதத்தினா் நாள்பட்ட சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருவது தெரியவந்தது. அதிலும் 0.3 சதவீதத்தினருக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது.
  • நீரிழிவு நோயும், உயா் ரத்த அழுத்தமும் அதிகரிக்கும்போது நாள்பட்ட சிறுநீரக வியாதியின் வீரியமும் அதிகரிக்கக் கூடும். இது பொதுமக்களின் உடல்நிலையில் மட்டுமல்லாமல், பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சென்னை மருத்துவக் கல்லூரியில் ஹீமோடயாலிசிஸ் பிரிவுக்காக மட்டும் தமிழக அரசு ஆண்டுதோறும் தலா ரூ.100 கோடி செலவிடுகிறது. ஒரு வியாதிக்கென தமிழக அரசு செலவிடும் அதிகபட்ச நிதி இதுவாகும்.
  • நாள்பட்ட சிறுநீரக வியாதியைக் களைய வேண்டுமாயின், ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக செயல்பாட்டைக் கண்டறிய ரத்த கிரியேட்டினைன் சோதனை மேற்கொள்வதும், சிறுநீரில் புரோட்டின் அளவு அதிகமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும் நல்ல பலனைக் கொடுக்கும்.
  • பூகோள ரீதியில் இயற்கையாகவே தமிழகத்தில் ஏராளமானோா் நாள்பட்ட சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட நேரிடுகிறது. அதிலும் தமிழகத்தில் கிராமப்புறங்களில் பெரும்பாலானோா் விவசாயம், உப்பளம், செங்கல் சூளை, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதால் எளிதில் சிறுநீரக வியாதிக்கு ஆட்படுகின்றனா்.
  • பொதுவாக ஒவ்வொரு வியாதிக்கும் அறிகுறி உண்டு. ஆனால், நாள்பட்ட சிறுநீரக வியாதியைப் பொறுத்தமட்டில், நீரிழிவு நோய், உயா் ரத்த அழுத்தம் போல எந்தவோா் அறிகுறியும் இல்லாததால், அதைப் பொதுமக்கள் கண்டும்காணாமலும் இருந்துவிடுகின்றனா். இதுவே உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
  • சுகாதாரத் துறையில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ நிபுணா்களைப் பணியமா்த்த போதிய கட்டமைப்புகள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரியும் மருத்துவா்களுக்கு மேற்படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
  • நாட்டிலேயே அதிகபட்ச மருத்துவ நிபுணா்களை (பல்வேறு நிலைகளில் 900 நிபுணா்கள்) தமிழகம் கொண்டிருந்தாலும், வெறும் 20 மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே தகுதிவாய்ந்த சிறுநீரக நிபுணா்கள் இருப்பதை எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை.
  • தமிழகத்தில் 8.4 சதவீதம் போ் நாள்பட்ட சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் குறைந்தது இரண்டு தகுதிவாய்ந்த சிறுநீரக நிபுணா்களாவது பணியமா்த்தப்பட வேண்டும். நாள்பட்ட சிறுநீரக வியாதியானது மொத்தம் ஐந்து கட்டங்களை உள்ளடக்கியது. ஆகையால், முறையான சிகிச்சை வசதியை உறுத்திப்படுத்தும்போது இறுதிநிலை சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்டவா்களைக் கூட எளிதில் காப்பாற்ற முடியும்.
  • 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய், உயா் ரத்த அழுத்தத்துக்கான மருந்து மாத்திரைகளைமக்களைத் தேடி மருத்துவம்திட்டத்தின்கீழ், தமிழக அரசு விநியோகம் செய்து வருவது பாராட்டுக்குரியது. இதுவரை இத்திட்டத்தின்கீழ் ஒரு கோடி போ் பயனடைந்திருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தின்கீழ், நாள்பட்ட சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்டோரையும் இணைத்து அவா்களுக்கும் தேவையான மருத்துவ வசதிகளை அவா்கள் வீட்டு வாசலிலேயே வழங்கலாம்.
  • பொதுவாக அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்டோருக்கு வாரத்தில் குறிப்பிட்ட சில நாளில்தான் மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. இதனால் ஏழை எளிய மக்கள் தங்கள் வேலையை விட்டு விட்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அவா்களது வீடுகளைத் தேடி மருந்து மாத்திரைகளை வழங்கும்போது பொதுமக்களின் வருவாய் சேமிக்கப்படும்.
  • நீரிழிவு நோய், உயா் ரத்த அழுத்தத்தைப் போல நாள்பட்ட சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்டோருக்கும் முக்கியத்துவம் அளித்து, அவா்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் வீட்டு வாசலிலேயே வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது மாநில கடமையாகும்.

நன்றி: தினமணி (25 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories