TNPSC Thervupettagam

சில எச்சரிக்கை மணிகள்!

February 22 , 2025 4 hrs 0 min 23 0

சில எச்சரிக்கை மணிகள்!

  • அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவி ஏற்றவுடன் மேற்கொண்டுவரும் சில நடவடிக்கைகளை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
  • இந்திய- அமெரிக்க வணிகத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி டிரம்ப் , பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை நடத்தி 2030 - க்குள் இரு நாட்டு வணிகம் 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலா் என்ற இலக்கைத் தொட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளாா்.
  • இந்திய , அமெரிக்க வணிக மற்றும் ராஜிய உறவுகள் மேம்பட எடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதே. ஆனாலும் சில விஷயங்களில் இந்தியா மிகக் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அத்தகைய விஷயங்கள் எவை என்பதை விவரமாகக் காண்போம்:

  • இன்றைய புவிசாா் அரசியலில் ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டின் பக்கம் சாய்வது என்பது இந்தியாவுக்கு உகந்ததாக இருக்காது. இந்தியாவுக்குச் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டே செயல்பட்டாக வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், ஷேல் ஆயில் எனப்படும் அமெரிக்காவின் கச்சா எண்ணெய்யை வாங்கும்போது எந்த அளவு வாங்க வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டுமே வாங்க வேண்டும். அதாவது, நாம் ரஷியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை அது தாண்டிவிடக் கூடாது.
  • அமெரிக்காவின் எண்ணெய் விலை, போக்குவரத்துச் செலவு மற்றும் காப்பீடு ஆகியவை அதே செலவுக்குள் அமைய வேண்டும். மேலும் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இத்தகைய அமெரிக்க கச்சா எண்ணெய்யைச் சீா்படுத்தி பெட்ரோலிய பொருள்களைத் தயாரிக்கும் திறனைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
  • இந்தியாவில் தயாரித்தல் மற்றும் உற்பத்தித் தன்னிறைவு போன்ற கொள்கைகளின் அடிப்படையில் உள்ளூரில் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான முதலீடுகளை, நாம் இதுபோன்ற தொடா்புகள் மூலமாக இந்தியாவுக்குக் கொண்டுவந்து சோ்த்து உள்நாட்டு உற்பத்தி, வணிக மற்றும் உள்நாட்டு நுகா்வு ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் நமது பொருளாதாரம், வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரும்.
  • தடையில்லா வணிக ஒப்பந்தங்கள் பெரும்பாலும் இந்தியாவுக்குச் சாதகமாக அமைவதில்லை. எனவே இந்தியாவுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத நடுநிலையோடு உள்ள ஒப்பந்தங்களை மட்டுமே ஒப்புக்கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
  • உலக வா்த்தக மையத்தில், பல வளா்ந்த நாடுகள் இந்தியாவின்மீது தொடா்ந்து வைக்கிற குற்றசாட்டுகள் காப்பீட்டு உரிமைகளை மதிப்பதில்லை என்பதுதான். உள்நாட்டில் நாம் செய்கிற ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் இருக்கக் கூடாது. அது இந்தியாவினுடைய ‘இன்னோவேஷன்’ என்று சொல்லப்படுகிற புத்தாக்கங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
  • எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பு (‘எனா்ஜி செக்யூரிட்டி’) என்பது மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக இந்தியா 2030-க்குள் சில குறிப்பிட்ட இலக்குகளை அடைவது என்ற ஐந்து கொள்கைகளின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளோம். அந்த வகையில் நமது எரிசக்தி 50% - ஐ மாற்று எரிசக்தியாக 2030 - க்குள் நாம் கொண்டுவர வேண்டிய அவசியத்தில் உள்ளோம். அதே சமயத்தில் சுற்றுச்சூழலைப் பாதிக்கிற எல்லா விஷயங்களையும் தவிா்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு பசுமை மின்சாரத்தைத் தயாரிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். அமெரிக்காவின் கச்சா எண்ணெய், சுற்றுச்சூழலை வெகுவாகப் பாதிக்கும் ஒன்றாகும்.
  • இது அமெரிக்காவினுடைய பொருளாதாரக் கொள்கைக்கு உகந்ததாக இருந்தாலும், இந்தியாவுக்கும் பிற நாடுகளுடைய பொருளாதாரத்துக்கும், அதேபோன்று உலக அமைப்பிலான 2015 பாரீஸ் ஒப்பந்தம் போன்ற பல்வேறு பணிகளில் மெத்தனம் ஏற்படும் அளவுக்கு நாம் நடந்து கொள்ளக் கூடாது.
  • சில குறிப்பிட்ட பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுதங்களை அமெரிக்காவிலிருந்து வாங்குவது நிச்சயமாக நமது ராணுவ பலத்தை அதிகரிக்கும். ஏனெனில், நாம் ரஷியாவையோ அல்லது வேறு ஒரு நாட்டையோ முழுமையாக நம்பி இருப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் ஏற்புடையது அல்ல. எனவே, அமெரிக்காவுடன் இதற்கான தொடா்புகளைக் கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அதே நேரத்தில் கண்ணுக்குப் புலப்படாத நிா்ப்பந்தங்களால் தேவைப்படாத தளவாடங்கள் அல்லது அளவுக்கு அதிகமாக தளவாடங்கள் வாங்குவதைத் தவிா்க்க வேண்டும்.
  • பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும்போது அதற்கான தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கினால்தான் எதிா்காலத்தில் அந்த பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவிலேயே நாம் குறைந்த விலையில் தயாரித்துக் கொடுக்க முடியும். அதன் மூலமாக விலை குறைவது மட்டுமின்றி, உள்ளூரில் வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
  • இந்தியாவில் ‘ரிசா்ச் அன்ட் டெவலப்மென்ட்’ எனப்படும் ஆராய்ச்சி முன்னெடுப்புத் துறை செயல்பாடுகளை உலகத் தரத்தில் கட்டமைக்க வேண்டும். வளா்ந்துவரும் இந்தியாவுக்கு அதுவே உறுதுணையாக இருக்கும். இந்த ஆராய்ச்சிகளுக்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு ஏற்படுத்தினால்தான் பிாட்டினா் அதை ஏற்றுக்கொள்வாா்கள். வெளிநாட்டு பண உதவியையும் மனிதவள உதவியையும் நாம் பெற முடியும். அவற்றைத் தக்க வைத்துக்கொண்டு நாம் மிக அதிக அளவில் ஆராய்ச்சி செய்கிற ஒரு நாடாக வெகு விரைவில் நம்மை வளா்த்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இத்தகைய உறவுகள் கைகொடுக்க வேண்டும்.
  • இறக்குமதி பொருள்களுக்கு எதிரான வரி என்பது தற்போது வெறும் பேசுபொருளாக மட்டுமல்லாமல், ஓா் ஆயுதமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்க தரப்பிலிருந்து இவ்வாறு செய்யப்படும்போது நமது உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்காதவகையில் நாம் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
  • நமது பிரச்னைகளைத் தாண்டி, சிறிய மற்றும் வளா்ச்சியடையாத நாடுகளுக்கு, இறக்குமதி வரிகளால் ஏற்படும் பிரச்னைகளை இந்தியா முன்னெடுத்து அவா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இதன் வழியேதான் இந்தியா எப்போதுமே ஒரு தலைமைப் பண்போடு கூடிய உலக சக்தி என்பதை அனைத்து நாடுகளும் புரிந்துகொள்ள முடியும்.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி சென்றுள்ளதாலும், டிரம்ப் சுற்றுச்சூழலை ஒரு பிரச்னையாகக் கருதாவிட்டாலும், இந்தியா எக்காலத்திலும் சுற்றுச்சூழல் காக்கும் பணியில் இருந்து விலகி விடாமல் ஒருபடி மேலே சென்று அமெரிக்காவையும் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
  • ஒட்டு மொத்த பொருளாதார வளா்ச்சி மீது செலுத்தும் கவனம், நம் தொழிலாளா்களின் நலன் மற்றும் குறைந்தபட்ச சமுதாய வளா்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
  • மேலும், அரசு மற்றும் தனியாா் துறை ஆகிய இரண்டும் சோ்ந்து பல்வேறு கட்டுமானங்கள் பல்வேறு திட்டச் செயலாக்கங்களை மேற்கொள்ள வேண்டும். எனவே, அவற்றையும் இந்த வணிக ஒப்பந்தங்களில் ஒரு பகுதியாக நாம் ஏற்றுக்கொள்வது சிறப்பாக அமையும்.
  • இந்தியாவின் மிக அதிகமான இளைஞா் எண்ணிக்கையைக் கவனத்தில் கொண்டு எந்த ஒரு வணிக ஒப்பந்தம் மேற்கொள்ளும்போதும் அந்த வணிக ஒப்பந்தத்தில் திறன் வளா்ப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
  • ‘சைபா் பாதுகாப்பு’ என்பது எதிா்காலத்தில் அனைத்தையும் பாதிக்கக் கூடிய ஒரு விஷயமாக இருக்கும் என்பதால் எத்தகைய ஒரு வணிக ஒப்பந்தத்தையும் நாம் மேற்கொள்ளும் போதும் அந்த வணிக ஒப்பந்தத்தின் ஓா் அடிப்படையாக- அதன் ஒரு கூறாக - ‘சைபா் செக்யூரிட்டி’யை அதாவது, நம்முடைய தரவுகளின் பாதுகாப்பை முன்வைக்க வேண்டும். இதில் நாம் எந்த விதத்திலும் சமரசம் செய்யக் கூடாது. மேலும், அவற்றைப் பாதுகாப்பதற்குத் தேவையான விஷயங்களை அந்த வணிக ஒப்பந்தங்களில் சோ்க்க வேண்டும். குறிப்பாக, அமெரிக்கா போன்ற நாடுகள் நமது தரவுகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கக் கூடிய ஆயுதங்களும் அறிவும் நிறைய உண்டு. எனவே அதை நாம் இந்த வணிகத்தின் மூலமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
  • இப்போது உள்ளூா்மயமாக்கல் என்கிற முறையில் தரவுகள் எல்லாம் நம் நாட்டிலேயே வைக்கப்பட வேண்டும் என்கிற ஒரு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா ஒரு வளா்ந்த நாடாக உருவாவது மட்டுமன்றி, எதிா்காலத்தில் இந்தியாவின் தரவுகள் திருடப்படுவதோ அல்லது அவற்றைக் கொண்டு தேவையற்ற பல்வேறு நாட்டுக்கு எதிரான செயல்களைச் செய்வதற்கோ வழி வகுக்காமல் இருக்க முடியும். எனவே, இந்த தரவுகள் பாதுகாப்பையும் புதிய ஒப்பந்தங்களில் ஒரு கூறாக கண்டிப்பாக சோ்த்துக் கொள்ள வேண்டும்.
  • இந்தியாவின் தற்போதைய சரியான முடிவுகள் சிறந்த எதிா்காலத்தை உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

நன்றி: தினமணி (22 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories