- “கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில் வை”என ஒரு சொலவடை உண்டு. வேட்டை காரணமாக இந்தியாவிலிருந்து 1960களில் முற்றிலுமாக அற்றுப்போன சிவிங்கிப்புலியை, இப்போது ஆப்ரிக்காவிலிருந்து ‘இறக்குமதி’ செய்திருக்கும் திட்டத்தைப் பற்றி நினைக்கும்போது அந்தச் சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.
- சிவிங்கிப்புலி இப்போது இந்தியாவுக்குத் தேவையா, இல்லையா என்பதைப் பற்றி பிறகு காணலாம். இந்தியாவில் இருக்கும் உயிரினங்களைப் பற்றிய புரிதலே போதுமான அளவு இல்லாதவர்களுக்கு, சிவிங்கிப்புலியைப் பற்றிய சிறு அறிமுகம் அவசியம்.
- பெரும் பூனை (Big cats) வகைகளான சிங்கம், புலி அல்லது வேங்கை (Tiger), சிறுத்தை (Leopard or Panther), பனிச் சிறுத்தை (Snow leopard) ஆகியவற்றுடன் சிவிங்கிப்புலியும் (Asiatic Cheetah) ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்தது. இவை அனைத்தும் இந்தியாவில் அவற்றுக்குத் தகுந்த வாழிடங்களில் பரவிக் காணப்பட்டன. அடர்ந்த காட்டுப்பகுதிகளில், மலைப்பாங்கான பகுதிகளில் புலிகளும், புதர்க்காடுகள், சமவெளிக் காடுகளில் சிங்கங்களும், இந்த இரண்டுவகையான வாழிடங்களிலும் வசிக்கும் சிறுத்தைகளும், பனி படர்ந்த இமயமலைப் பகுதிகளில் பனிச் சிறுத்தையும், சமவெளிகளில் உள்ள பரந்த வெட்டவெளி, புல்வெளி, புதர்க்காடுகளில் சிவிங்கிப்புலிகளும் வாழ்ந்துவந்தன.
- உலகில் ஐந்து வகையான பெரும் பூனை இனங்களைக் கொண்ட ஒரே பகுதி எனும் பெருமை இந்தியாவுக்கு இருந்தது. ஆனால், காலப்போக்கில் மனிதச் செயல்பாடுகளினால் இவற்றின் வாழிடங்கள் சுருங்கின. ஒருகாலத்தில் மேற்கு, மத்திய இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இடங்களில் பரவியிருந்த ஆசிய சிங்கம் படிப்படியாக எண்ணிக்கையிலும் பரப்பிலும் குறைந்து, தற்போது குஜராத் மாநிலத்திலுள்ள கிர் தேசியப் பூங்காவில் தஞ்சமடைந்துள்ளது.
- புலி, சிறுத்தை, பனிச் சிறுத்தை ஆகியவையும் எண்ணிக்கையிலும், அவற்றின் வாழிடப் பரப்பிலும் குறைந்தாலும், நாம் முற்றிலுமாக இழந்தது சிவிங்கிப்புலியைத்தான். ஒருகாலத்தில் கிட்டத்தட்ட இந்தியாவின் பல பாகங்களில் பரவியிருந்த சிவிங்கிப்புலி ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு துப்பாக்கிக்கு இரையாகி, ஒன்றுகூட மிஞ்சாமல் பூண்டோடு அழிந்துபோனது.
சில வித்தியாசங்கள்
- மற்ற பெரும் பூனைகளைப் போல் அல்லாமல் சிறுத்தையும் சிவிங்கிப்புலியும் தோற்றத்தில் சற்றே ஒன்றுபோலத் தோன்றுவதால் இவை இரண்டையும் ஒன்றெனக் கருதி சிலர் குழப்பிக் கொள்கின்றனர். எனினும் சரியாக உற்றுநோக்கினால் இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர முடியும் (பார்க்க: பெட்டிச் செய்தி).
- இவை இரண்டும் இந்தியா, மத்தியக் கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் பரவியுள்ளன. இவை தவிர, சிறுத்தையைப் போலவே இருக்கும் மற்றுமொரு பெரும்பூனை இனம் ஜாகுவார் (Jaguar). இவை மெக்சிகோவிலும் தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே தென்படுபவை.
- சிறுத்தையா சிவிங்கிப்புலியா
- சிவிங்கிப்புலி, ஆங்கிலத்தில் Cheetah/ Cheeta (ச்சீட்டா) என அழைக்கப்படுகிறது; இந்தியில் Chita (ச்சித்தா) என்றழைக்கப்படுகிறது. ஆகவே, இதன் ஆங்கிலப் பெயர் இந்தியில் இருந்து வந்திருப்பதை அறிய முடியும். எனினும் பழைய ஆங்கில வேட்டை இலக்கியங்களிலும் ஆராய்ச்சிக் குறிப்புகளிலும் Hunting leopard என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
- தலைசிறந்த இயற்கையியலாளரும் மருத்துவருமான டி.சி.ஜெர்டான் 1835இல் இந்தியாவுக்கு வந்து, பல ஆண்டுகளுக்குத் தங்கி, இந்திய உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று 1867இல் வெளியான ‘The Mammals of India’ (இந்தியப் பாலூட்டிகள்). இந்நூலில் பாலூட்டிகளின் வட்டாரப் பெயர்களையும் தந்துள்ளார்.
- அதில் கன்னட மொழியில் இந்தப் பாலூட்டியின் பெயர் சிவுங்கி (Sivungi) என்று குறிப்பிட்டுள்ளார். பழந்தமிழ் இலக்கியங்களில் சிவிங்கிப்புலி பற்றிய தகவல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. 1954-1961 ஆண்டுகளில் கலைக்களஞ்சியத்துக்காக மா.கிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்றில், ‘வேட்டைச் சிவிங்கி' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
- ‘மழைக்காலமும் குயிலோசையும்’ நூலில் இடம்பெற்றுள்ள அக்கட்டுரையில் கிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார்: “தமிழில் இதைச் 'சிவிங்கி' எனக் கொள்ளலாம் என்று ஓர் இயற்கை விஞ்ஞானி சொன்னதாகக் கேள்வி.....தமிழில் சிவிங்கி என்ற சொல் ஒரு மீனுக்கும் பறவைக்கும்கூட வழங்கும். அது புள்ளிவாய்ந்த தோற்றத்தைக் குறிக்கும் சொல்லே.”
- தமிழ் அகரமுதலியில் தேடியபோது Leopard-க்கு (அதாவது சிறுத்தை) ‘சிவங்கி’ என்று பெயர் உள்ளதை அறியமுடிகிறது. இந்தச் சிவுங்கி, சிவிங்கி, சிவங்கி வார்த்தைகளை மொழி ஆய்வாளர்களிடம் விட்டுவிடலாம். இப்போதைக்கு நாம் அறிந்துகொள்வது மா.கிருஷ்ணன் தந்த ‘வேட்டை சிவிங்கி’ எனும் பெயர், தற்போது சிவிங்கிப்புலியாக வழங்கப்படுகிறது என்பதே.
- இந்தப் பெயர்க் குழப்பம் இங்கு மட்டுமல்ல, இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருப்பதால் பல ஆவணங்களில் சிறுத்தையையும் சிவிங்கிப்புலியையும் ஒன்றாகவே கருதிப் பலர் பதிவிட்டுள்ளனர். வெகுஜனப் பத்திரிகைகளில் வெளியிடும் படங்களில்கூட சிவிங்கிப்புலிக்குச் சிறுத்தை என்றும் சிறுத்தையின் படத்துக்கு Cheetah என்றும் தலைப்பிடுவதையும் கண்டிருக்கலாம்.
- இதற்கு நாம் அனைவரும் அறிந்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, Cheeta Fight எனும் தீப்பெட்டியின் முகப்புப் படம். இந்தப்படத்தில் இடம்பெற்றிருப்பது சிறுத்தையே; Cheetah எனும் சிவிங்கிப்புலி அல்ல. இந்தக் குழப்பங்கள் போதாதென்று புலிகள் பாதுகாப்புக்காகப் பாடுபடும் வால்மிக் தாப்பர், வரலாற்று ஆசிரியரான ரொமிலா தாப்பர், யூசுப் அன்சாரி ஆகியோர் 2013இல் வெளியான ‘Exotic Aliens: The Lion
நன்றி: இந்து தமிழ் திசை (14 - 10 – 2023)