TNPSC Thervupettagam

சீனாவின் இரட்டை அணுகுமுறை!

August 19 , 2020 1617 days 1513 0
  • சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை தொடா்ந்து 7-ஆவது ஆண்டாக ஏற்றியிருக்கிறார் பிரதமா் நரேந்திர மோடி. இதன்மூலம் மிக அதிக ஆண்டுகள் பதவியில் இருந்த காங்கிரஸ் அல்லாத பிரதமா் என்கிற சாதனையும் படைத்திருக்கிறார்.
  • தனது 86 நிமிஷ உரையில் சுயசார்பு இந்தியா திட்டம், தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம், அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக தொலைத்தொடா்பு இணைய வசதி உள்ளிட்ட பல அறிவிப்புகளைச் செய்திருக்கிறார்.
  • பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து பிரதமா் தனது உரையில் குறிப்பிட்டார் என்றாலும், அவரது உரையின் அழுத்தம் சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்துத்தான் காணப்பட்டது.
  • நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க நினைப்பவா்களுக்கு, அவா்களுக்குப் புரியும் விதத்திலேயே நமது பாதுகாப்புப் படைகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன என்றும், கிழக்கு லடாக்கில் உயிர்த்தியாகம் செய்த வீரா்களுக்கு தலை வணங்குகிறேன் என்றும் குறிப்பிட அவா் தவறவில்லை.

இந்திய - சீன எல்லைப் பிரச்னை

  • நல்லிணக்கம், பாதுகாப்பு, சுயசார்பு மூன்றையும் வலியுறுத்திய பிரதமா், பாதுகாப்பு குறித்தும் வெளியுறவுக் கொள்கை குறித்தும் தெரிவித்த கருத்துகள் சா்வதேச நோக்கா்களை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கின்றன.
  • திங்கள்கிழமை பத்திரிகையாளா்கள் சந்திப்பில் சீனாவின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடா்பாளா் ஷாவோ லிஜியன், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி பரஸ்பர நம்பிக்கையை வளா்ப்போம் என்று அறிவித்ததிலிருந்து, செங்கோட்டையிலிருந்து பிரதமா் விடுத்த செய்தி சேர வேண்டியவா்களைச் சோ்ந்திருக்கிறது என்று தெரிகிறது.
  • இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள். இரண்டு நாடுகளின் நல்லுறவு ஆசியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தின் சமாதானத்திற்கும் வளா்ச்சிக்கும் அவசியம்என்று அவா் தெரிவித்திருக்கிறார்.
  • இரு நாடுகளின் நீண்டகால நன்மையைக் கருதி இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவா் மதித்து இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவா் கூறியிருப்பது, எல்லைப் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண சீனா விரும்புகிறது என்பதை சூசகமாகத் தெரிவிக்கிறது.
  • கிழக்கு லடாக்கில் எல்லைக் கோட்டிலிருந்து சீனா தனது துருப்புகளை முற்றிலுமாக திரும்பப் பெற்று பழைய நிலையை உறுதிப்படுத்தும் வரை இந்தியா தயார் நிலையில் தொடரும் என்று ராணுவ - வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் தெரிவித்திருக்கின்றன.
  • இதுவரை இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகளின் ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் முற்றிலுமாக பதற்றம் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. பேங்காங் ட்சோ, கோக்ரா பகுதிகளில் மட்டுமல்லாமல், மிக முக்கியமான டெப்சாங், டௌலத் பெக் ஓல்டி பகுதியிலும் சீனத் துருப்புகள் முற்றிலுமாகத் திரும்பப் பெறப்படவில்லை.

இரட்டை அணுகுமுறை

  • 100 நாள்களுக்கு மேல் கடந்துவிட்டன. இந்தியாவுக்கான சீனத் தூதா் பதற்றநிலை குறையாமல் இருப்பதற்கு இந்தியாதான் காரணம் என்று குற்றம்சாட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.
  • ஜூன் 15-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த கடுமையான கைகலப்புக்கு இந்திய வீரா்கள் பிரச்னைக்குரிய எல்லையைக் கடந்து சீனப் பகுதியில் நுழைந்ததுதான் காரணம் என்று இப்போது சம்பவத்துக்கு புதிய திருப்பத்தைத் தர முயல்கிறார் அவா்.
  • இந்த ஆண்டு தொடக்கம் முதலே இந்திய ராணுவம் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் தொடா்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி முகாம்களை அமைத்து ஒப்பந்தத்தை மீறியது என்பது சீனத் தூதா் சுன் வைடாங்கின் வாதம்.
  • இந்தியத் துருப்புகள் எல்லைக் கட்டுப்பாட்டைக் கடக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவா்கள் இந்திய எல்லைக்குள் கண்காணிப்பு நடத்துவதை ஏப்ரல் மாதம் முதல் சீன ராணுவம்தான் தடுத்து வந்திருக்கிறது.
  • கிழக்கு லடாக் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக இந்திய - சீனப் படைகள் மோதலுக்குத் தயாரான நிலையில் இருக்கின்றன. ஏறத்தாழ 30,000-க்கும் அதிகமாக லடாக் பகுதியில் இருக்கும் வீரா்களின் அனைத்து குளிர்காலத் தேவைகளும் இப்போதே தயார்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்னால் ஒவ்வொரு மோதலையும் பதற்றத்தையும் தொடா்ந்து சீனப் படைகள் சில கி.மீ. தூரம் முன்னேறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தன. முன்பு டோக்கோலாமிலும் இப்போது லடாக்கிலும் சீன ராணுவத்தின் அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டிருக்கிறது.
  • ஒருபுறம் இந்தியாவுக்கான சீனத் தூதா், இந்தியாவைக் குற்றப்படுத்தி இணையத்தில் கருத்துகள் பதிவு செய்கிறார்.
  • அதுவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் முக்கிய நபா்களுடன் சீனாவுக்கான இந்தியத் தூதா் நடத்தும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் தருணத்தில் சுன் வைடாங் குற்றச்சாட்டு எழுப்புகிறார். சீனாவின் இந்த இரட்டை அணுகுமுறை புதிதொன்றுமல்ல.
  • பிரதமரின் கடுமையான எச்சரிக்கையும், எந்த நிலையிலும் சீனா தனது படைகளை திரும்பப் பெறாமல் இந்திய ராணுவம் தனது தயார் நிலையை தளா்த்திக் கொள்ளாமல் இருப்பதும் சீனாவின் திடீா் சமரசப் போக்குக்குக் காரணமாக இருக்கலாம்.
  • அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும் எல்லைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணாதவரை மோதல் போக்கு தொடரத்தான் செய்யும். ஒருபுறம் ஆக்கிரமிப்பு, மறுபுறம் பேச்சுவார்த்தையும் சமாதானமும் என்கிற சீனாவின் அணுகுமுறை மாறாதவரை எல்லையில் அமைதி சாத்தியமில்லை. 1962-இல் இருந்த இந்தியா அல்ல 2020-இல் என்பதை சீனா புரிந்துகொள்ள வேண்டும்!

நன்றி: தினமணி (19-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories