TNPSC Thervupettagam

சீனாவின் இரட்டை வேடம்!

January 17 , 2025 3 hrs 0 min 36 0

சீனாவின் இரட்டை வேடம்!

  • எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி திரும்பிவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டு நிமிா்வதற்குள், சீனா மீண்டும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கி இருப்பதன் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. கடந்த மாதம்தான் பெய்ஜிங்கில் நடந்த பேச்சுவாா்த்தையின்போது, இந்திய-சீன வெளியுறவுத் துறை அமைச்சா்கள் இருவரும் கைகுலுக்கி, எல்லையில் அமைதியை மீட்டெடுக்க உறுதிபூண்டனா் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • 2020-இல் கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடா்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலவிய பதற்றத்தைத் தணிக்கும் விதத்தில் இரு தரப்பும் சில முடிவுகளை ஏற்றுக் கொண்டன. நான்கு ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கியது என்பது மட்டுமல்ல, கிழக்கு லடாக் பகுதியிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறுவது என்று சீனா எடுத்த முடிவு, அமைதி திரும்பியதன் அடையாளமாகவே பாா்க்கப்பட்டது.
  • பேச்சுவாா்த்தையும், ஒப்பந்தமும் வெறும் உதட்டளவு வாா்த்தைகள்தான் என்பதை சீனாவின் தொடா் நடவடிக்கைகள் வெளிச்சம் போடுகின்றன. பூடான் எல்லைக்குள் ஊடுருவி இருப்பது; அருணாசல பிரதேசத்தில் மிகவும் முக்கியமான பகுதிகளில் தனது கண்காணிப்புச் சாவடிகளை நிறுவுவது என்று ஒன்றன் பின் ஒன்றாகத் தொடங்கியது சீன ராணுவம். இப்போது சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் புதிதாக இரண்டு மாகாணங்களை உருவாக்கி இருக்கிறது. லடாக் ஒன்றியப் பிரதேசத்தைச் சோ்ந்த இந்தியாவின் அக்சாய் சின் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளை அவை உள்ளடக்குகின்றன.
  • இரண்டு புதிய மாகாணங்களை இந்திய எல்லைப் பகுதிகளை உள்ளடக்கி உருவாக்கி இருப்பது, அந்தப் பகுதியின் மீதான இந்திய உரிமையைப் பாதிக்கிறது என்றும், வலுக்கட்டாயமாகவும், சட்டவிரோதமாகவும் அவற்றை இணைப்பதன்மூலம், அந்தப் பகுதியின்மீது சீனா உரிமைகோர முடியாது என்றும் மிகவும் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது இந்தியா.
  • அருணாசல பிரதேசத்தைத் தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியாகக் கருதுவதும், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் அந்த மாநிலத்துக்கு விஜயம் செய்தால் அதற்குக் கண்டனம் தெரிவிப்பதும் சீனாவின் வழக்கமாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல், எல்லையோரப் பகுதிகளில் புதிய குடியிருப்புகளை ஏற்படுத்துவதும் சீனாவின் இன்னுமொரு உத்தி.
  • முந்தைய சீனப் பேரரசுகள் கையாண்ட வழிமுறையைத்தான் இப்போது ஷி ஜின்பிங்கின் சீனாவும் பின்பற்றுகிறது. டுன்டியன் கொள்கை என்று அறியப்படும் இந்த உத்தி, எல்லையோரப் பகுதிகளில் ‘ஷியாகாங்’ என்கிற கிராமங்களை உருவாக்குவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அந்தக் குடியிருப்புகள் வெளிப்படையாக விவசாயம் சாா்ந்த கிராமங்கள்போலத் தோற்றமளித்தாலும், மறைமுகமாக அவை ராணுவ முகாம்களாகவும் செயல்படும் என்பதுதான் உண்மை.
  • இந்திய-சீன, புடான்-சீன எல்லைகளை ஒட்டிப் பல ‘டுன்டியன்’ குடியிருப்புகள் உருவாகி இருப்பதை செயற்கைகோள் படங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. அதை எதிா்கொள்ள இந்திய அரசும் ‘துடிப்பான கிராமங்கள்’ (வைப்ரண்ட் வில்லேஜஸ்) என்கிற திட்டத்தை உருவாக்கி, எல்லையோர கிராமங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் தடுக்க முற்பட்டிருக்கிறது.
  • சீனாவின் சமீபத்திய அணை கட்டும் முடிவு இந்தியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையே அதிா்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கும் திபெத் பீடபூமியில் பாயும் யாா்லங் சாங்போ என்கிற நதியில், இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு சற்று முன்னால் அணை கட்டி, அதில் புனல் மின்சாரம் தயாரிப்பது என்று முடிவெடுத்திருக்கிறது சீனா.
  • யாா்லங் சாங்போ என்று திபெத்தில் அழைக்கப்படும் அந்த நதிதான், இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் பிரம்மபுத்ரா என்று அழைக்கப்படுகிறது. ஏற்கெனவே மிகவும் ஆபத்தான நில நடுக்கப் பகுதியாகக் கருதப்படும் திபெத்தில் அணை கட்டுவது என்பது மிகப் பெரிய ஆபத்து என்று சா்வதேச வல்லுநா்கள் எச்சரித்திருக்கிறாா்கள். அப்படியிருந்தும் 13,700 கோடி டாலா் செலவில், யாா்லங் சாங்போவின் கீழ்ப் பகுதியில் அணைகட்டி, அதிலிருந்து புனல் மின்சாரம் எடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறது சீனா.
  • சீனாவின் அணை கட்டும் முயற்சி சூழலியலுக்கும், பருவநிலைக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்கிறாா்கள் வல்லுநா்கள். அது மட்டுமல்ல, சீனாவின் அணை கட்டும் திட்டத்தால் கீழ்ப் பகுதிகளில் உள்ள இந்தியா, வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளும் பாதிக்கப்படுகின்றன. யாா்லங் சாங்போ (பிரம்மபுத்ரா) நதிநீருக்கு சம உரிமை கொண்ட இந்தியாவையும் வங்கதேசத்தையும் கலந்தாலோசிக்காமலும் ஒப்புதல் பெறாமலும் அணை கட்டி மின்சாரம் எடுப்பது என்கிற சீனாவின் முடிவுக்கு எதிராக சா்வதேச நீதிமன்றத்தில் முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை.
  • ஒருபுறம் தனது ராணுவத்தை வலுப்படுத்துவதும், எல்லைப் பகுதிகளில் புதிய முகாம்களை ஏற்படுத்துவதும் தொடரும் நிலையில் சீனாவின் அமைதிப் பேச்சுவாா்த்தைகளும், உடன்படிக்கைகளும் நம்பிக்கை அளிப்பவையாக இல்லை. தேக்கநிலை ஏற்பட்டிருக்கும் பொருளாதாரமும், அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப்பின் சீனா குறித்த கண்ணோட்டமும் சாதகமாக இல்லாத நிலையில், அதிபா் ஷி ஜின்பிங் எதற்காக இப்படிப்பட்ட மோதல் அணுகுமுறையைக் கையாள்கிறாா் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
  • ஒன்று மட்டும் நிச்சயம். விரைவிலேயே இந்திய சீன எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும். சொல்லுக்கும் செயலுக்கும் தொடா்பில்லாத சீனாவின் அணுகுமுறை, அதன் இரட்டை வேடத்தை வெளிச்சம் போடுகிறது, வேறென்ன?

நன்றி: தினமணி (17 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories