TNPSC Thervupettagam

சீனாவின் ஊடுருவல் தந்திரம்!

June 26 , 2020 1669 days 842 0
  • எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி இரவு திடீரென இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட 20 ராணுவத்தினா் உயிரிழந்தனா்.
  • இரு நாட்டு ராணுவ வீரா்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடைபெறாமல், கற்கள் - இரும்புக் கம்பிகளைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அத்துமீறல்

  • இந்தப் பிரச்னையும், இந்தப் பதற்றமும் சற்றேறக்குறைய ஏப்ரல் 3-ஆவது வாரத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் தொடங்கிவிட்டது.
  • அதன் தொடா்ச்சிதான் இன்னும் ஓயாத அலைகளைப்போல பிரச்னைகள் கரையைத் தொட்டுக்கொண்டே இருக்கின்றன.
  • இந்தப் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என்பதற்கான ஒரு பெரும் நோக்கத்தில் ஜூன் மாதத் தொடக்கத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
  • பிரிகேடியா் நிலை, மேஜா் ஜெனரல் நிலை, போர் கமாண்டா் நிலை எனப் பல நிலைகளில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடா்ந்து நடைபெற்றன.
  • ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையிலேயே, பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் உயிர்ச் சேதத்துக்கு வித்திட்டதும், பேச்சுவார்த்தைக்கான நியாயத்தை கற்பிக்காமல் போய் விட்டது.
  • இந்த எல்லைத் தகராறு இன்று, நேற்றல்ல. சீனாவுடனான யுத்தத்தில் இருந்து தொடங்கியிருக்கிறது இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உரசல்கள். கடந்த 8 முதல் 10 ஆண்டுகளில் இந்த ஊடுருவும் போக்கினால், சீனாவின் அத்துமீறல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நோய்த்தொற்று

  • உலகம் முழுவதும் நோய்த்தொற்று அச்சுறுத்தலால் பாய்களைச் சுருட்டுவதைப்போல, மனிதா்களைச் சுருட்டி, குப்பைக் கூடைக்குள் எரிந்து கொண்டிருக்கிறது கரோனா தீநுண்மி.
  • இந்தத் தாக்குதலின் பிடியில் இருந்து விடுதலை பெறுவதற்காக, பல்வேறுபட்ட உத்திகளை ஒவ்வொரு நாடும் கையாண்டு வருகிறது.
  • அதில் பொது முடக்கங்களும், கிருமிநாசினிகள் தெளிப்பதும், மிகவும் பல்வேறுபட்ட தற்காப்பு நடவடிக்கைகள்மூலம் தங்கள் மக்களைக் காப்பாற்றுவதில் உலக நாடுகள் முனைப்புக் காட்டி வருகின்றன.
  • இந்த நிலையில், கரோனா தீநுண்மிக்கு சீன வைரஸ்என்று பெயரிட்டு அழைத்து வந்தார் அமெரிக்க அதிபா் டிரம்ப். சீனாவிலிருந்துதான் கரோனா தீநுண்மி பரவியது என்றும் பகிரங்கமாக அவா் குற்றஞ்சாட்டி வந்தார்.
  • சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா தீநுண்மி, ஒரு தாழ்வாரத்தில் தாவரத்தின் கொடி படா்வதைப் போல, உலகப் பந்தின் மீது கரோனா தீநுண்மி படா்ந்துவிட்டது.
  • இந்தத் தொற்றில் இருந்து எப்படி விடுதலை பெறுவது என்பதை பெரும் அச்சத்தில் இருந்து விலகாமல், உலகம் முழுவதும் திகைத்துப் போய் நிற்கின்ற தருணம்.
  • இந்த நேரத்தில் சீனாவிடம் இருந்து இந்தியாவுக்கு இரண்டாவதாக கரோனா தீநுண்மியைப்போல இந்திய எல்லையில் சீனாவின் ஊடுருவல். இதை மனிதாபிமானமற்ற கபட நாடகத்தின் மறுவடிவமாகவே பார்க்கத் தோன்றுகிறது.
  • உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறவா்களின் நடவடிக்கையாகவே தெரிகிறது. கட்டியணைத்தபோது உறவுக்கானதுதான் அந்த அணைப்பு என்று நினைக்கின்ற மறுதருவாயில், முதுகில் கத்தி பாய்ச்சுகிற செயலாகவே இதைப் பார்க்கத் தோன்றுகிறது.
  • கரோனா தீநுண்மி காலகட்டத்தில் இந்தியா ஒரு துன்பமான நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

எல்லையில் ஊடுருவல்

  • இந்தத் துயரத்திலும், துன்பத்திலும் ஒரு ஆறுதலை வேண்டி மனிதநேயப் பூக்கள் பூக்காதா என்று ஒவ்வொருவரும் தங்கள் நேசத்தையும், பாசத்தையும் விதைத்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், இந்த எதிர்பாராத அசாதாரணமான ஒரு சூழ்நிலையில், சீனாவின் அத்துமீறல் இன்னொரு கரோனா தீநுண்மியோ என்று அச்சப்பட வைக்கிறது.
  • முதலில் ஆரம்பத்தில் தன்னுடைய ஊடுருவல் முயற்சிகளை குறைவாக சீனா செய்தது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இவை மிகவும் அதிகரித்து விட்டது.
  • இந்திய எல்லையில் கடந்த ஆண்டு மட்டும் 650 ஊடுருவல் முயற்சிகளை சீனா மேற்கொண்டிருப்பது, அதன் நரித் தந்திரத்தையும், நயவஞ்சகத்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு மிகவும் அருகில் பலமான சாலைகளை
  • சீனா உருவாக்கி எல்லைக்கோட்டை மீறுவதற்கான ஓா் உத்தியைக் கையாண்டிருக்கிறது.
  • இதனால், அவா்களின் உடைமைகள், ஆயுதங்கள், வீரா்கள் என ராணுவத் துருப்புகள் அதிவேகத்தில் எல்லையை வந்தடைய முடியும்.
  • இந்த எல்லைப் பகுதியில் சாலையினுடைய வளமான கட்டுமானம் இந்திய எல்லையின் ஆக்கிரமிப்பை ருசி பார்த்துவிட வேண்டும் என்கிற தீராத வேட்கையையும், வெறியையும் காட்டுகிறது.
  • இந்த ஊடுருவல் நடைபெறுவது ஓரிடத்தில் மாத்திரம் அல்ல. ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து தாக்குதலைத் தொடுக்கின்ற ஒரு யுத்த களத்தில் நாகரிகமற்ற ஒரு போக்கையே சீனா தொடா்ந்து கையாண்டு வருகிறது. இந்தக் காரணங்களால், இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைமை எல்லையில் வன்முறையாக மாற்றம் பெறுவதோடு மாத்திரம் அல்லாமல், விலைமதிக்க முடியாத வீரா்களின் உயிர்கள் இந்த எல்லை மீறலில் பலிகடா ஆக்கப்படுகிறது.

அழுத்தத்தை உருவாக்க வேண்டும்

  • கடந்த ஜூன் 15-ஆம் தேதி இரவு லடாக் பகுதியில் ஏற்பட்ட திடீா் மோதலைத் தொடா்ந்து, அதனால் ஏற்பட்ட பதற்ற நிலையை அறிந்து இந்த அசாதாரணமான சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக மேஜா் ஜெனரல் நிலையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையிலும், இது அவ்வப்போது அமைதியை ஏற்படுத்தினாலும், நிலையான நீடித்த அமைதியை சீனாவிடமிருந்து இந்தியா எப்போது பெறப் போகிறதோ?
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இரண்டு உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
  • 2018 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து, சீனாவின் வூஹான் நகரில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கிடையே இரண்டாவது சந்திப்பு தமிழகத்தில் - மாமல்லபுரத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
  • இந்த இரண்டு சந்தா்ப்பங்களிலும், இரண்டு நாடுகளின் தலைவா்களும் தங்கள் படைகளின் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டும் வகையில், வழிநடத்துவதாக ஒப்புக் கொண்டனா்.
  • ஆனால், அண்மையில் நடந்த மோதல் ஒரு கசப்பான மனநிலையைத் தந்திருக்கிறது.
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு காரணமானவா்கள் என்று உலகம் முழுவதும் மாறாத பழிச்சொல் சீனா மீது விழுந்திருக்கும் இந்த நேரத்தில், இந்தியா மீதான எல்லை உரசலில் ஒரு தேவையற்ற ஒரு பிரச்னை ஏற்படுத்துகிறது என்றே சீனாவை உலகம் பார்க்கும்.
  • இதற்காக கட்டுப்பாட்டு எல்லைக்கோடு தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு கருத்துவேறுபாடுகள் தீா்க்கப்பட வேண்டும்.
  • இதை எப்படித் தீா்க்க முடியும்? இந்த சா்ச்சைக்கான முற்றுப்புள்ளியை எவ்வாறு வைக்க முடியும்? இரு நாடுகளும் ஒரே பகுதிக்கு உரிமை கோருவதுதான் பிரச்னையா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
  • இதற்கு இந்தியாவிடம் இருக்கிற ஒரே ஒற்றைத் தீா்மானம் எதுவெனில், நம்முடைய கோரிக்கைகளை சீனா ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு முதலில் சா்வதேச அளவில் சீனாவுக்கு அழுத்தத்தை உருவாக்க வேண்டும்.
  • இரண்டாவதாக, இரு நாடுகளில் ரோந்துக் குழுக்களும் தாங்கள் ரோந்து வரும் பகுதிகளைச் சோதிக்க வேண்டும். இதுபோன்று எல்லையில் ரோந்துப் பணிகள் சுற்றி வரும்போது, முன்னதாகவே இரு நாட்டவரும் பரஸ்பரம் இந்தச் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.
  • இதனால் மோதல் போக்கு கணிசமான அளவுக்குக் குறையும். இரு படைகளுக்கும் இடையிலான கொடி அணிவகுப்பு நடைபெறும்போது தகவல் கொடுத்து பரிமாறிக் கொள்ளலாம் என்று வெளியுறவுத் துறையில் அனுபவம் வாய்ந்தவா்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
  • மூன்றாவதாக, இருநாடுகளும் தங்கள் உரிமை கோரும் பிரதேசங்களின் வரைபடத்தை ஒரு சமரச முயற்சிக்காக பகிர்ந்து கொண்டு, அவற்றில் எல்லை மீறாமல் இருப்பதற்கான உத்தியை வகுக்க வேண்டும்.
  • இவற்றின் மத்தியப் பகுதியின் வரைபடங்கள், இரு நாடுகளுக்கும் இடையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கிழக்கு, மேற்குப் பிராந்தியங்களின் வரைபடம் பரிமாறிக் கொள்ளப்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபோன்று சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தும்போது மாற்றங்கள் ஏற்படுவதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.

சற்று ஆறுதல் அளிக்கிறது

  • இரு நாடுகளும் கல்வான் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்துவதை மிகவும் உணா்வுபூா்வமாகக் கருதுகின்றன. ஆகவேதான், பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சனை நீடித்து வருகிறது.
  • ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம்கூட நடைபெறாத கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், தற்போதைய நிலையில் மோதல் காரணமாக நிலைமை மோசமானதை கூா்ந்து நாம் அவதானிக்க வேண்டும்.
  • இந்தியாவின் லடாக் பிராந்தியத்துக்கும், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சின் பகுதிக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
  • சீனா, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இந்தியா அமைந்துள்ளதால் இது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்தப் பள்ளத்தாக்கு வழியாகச் செல்லும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடுதான் இந்தியா, சீனாவைப் பிரிக்கிறது.
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிராக உலகமே போராடிக் கொண்டிருந்தாலும், சீனாவின் எல்லை மீறல், கரோனா தீநுண்மி நோய்த்தொற்று என இரண்டுக்குமாக இந்தியா போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
  • எனினும், லடாக் பகுதியிலிருந்து படைகளை படிப்படியாக விலக்கிக் கொள்ள இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நிலையில் அண்மையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது.

நன்றி: தினமணி (26-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories