சீமான் vs பெரியாரிஸ்டுகள்: பொதுவெளியில் எதற்கு இந்த பலப்பிரயோகம்?
- பெரியார் ஈ.வெ.ரா. குறித்து தவறான கருத்துகளை பேசி வருவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
- தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. மறுபுறம், நாம் தமிழர் கட்சி சார்பில் பாதுகாப்புக்காக அவரது கட்சியினர் சீமான் வீட்டில் முன்தினம் இரவு முதலே குவிந்து பாதுகாப்பு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டுள்ளது.
- காவல் துறை கண்முன்பே பெரியாரிய உணர்வாளர்கள் கூடி சீமானின் உருவ பொம்மையை எரித்து, பதாகைகளை ஏந்தி சீமானுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர். ஒப்பாரி போராட்டமும் நடத்தியுள்ளனர். சீமான் வீடு உள்ள பகுதி வரை அவர்களை காவல் துறையினர் அனுமதித்த செயல் விமர்சனத்துக்குரியது.
- இது ஒருபுறம் இருக்க, சீமான் வீட்டில் பாதுகாப்புக்காக நின்றிருந்த தொண்டர்கள் - குறிப்பாக பெண்கள் - கையில் உருட்டுக் கட்டைகளுடன் நின்று, ‘யாராவது வரட்டும், அவர்களை நன்றாக கவனிக்கிறோம்’ என்ற தொனியில் மிரட்டியுள்ளனர். இங்கே வருபவர்களுக்கு ‘விருந்து’ வைக்க தயாராக இருக்கிறோம் என்று பகிரங்கமாக ஊடகங்கள் மூலம் மிரட்டியுள்ளனர்.
- இதுபோன்ற அடிதடிக்கு இரண்டு தரப்பினர் தயாராவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் காவல் துறையின் கடமையா? இதுவே இப்போது நம்முன் உள்ள கேள்வி. தமிழக அரசியல் வரலாற்றில் சமூக சீர்திருத்த இயக்கத்தை தொடங்கி, அதன்மூலம் பல்வேறு பிரதான கட்சிகள் உருவாக காரணமாக இருந்தவர் பெரியார் ஈ.வெ.ரா. அவரது கருத்துகளையும், கொள்கைகளையும் ஆதரிக்கும் ஒரு தரப்பும் தொடர்ந்து இருந்தே வருகிறது.
- அந்த கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறோம் என்றுதான் திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற்று அரசியல் அதிகாரத்திலும் இருந்து வருகின்றன. புதிதாக தொடங்கப்பட்ட நடிகர் விஜய்யின் தவெகவும் பெரியாரின் கொள்கைகளை தூக்கிப் பிடித்துவரும் நிலையில், பெரியாருக்கு எதிராக சீமான் குரல் எழுப்பி, அவரின் கருத்துகளை கேள்விக்கு உள்ளாக்கி இருப்பது தமிழக அரசியலில் கலகத்தை உருவாக்கியுள்ளது.
- சீமானுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் உரிய ஆதாரத்தை சமர்ப்பிக்கிறேன் என்று அவரும் தெரிவித்துவிட்டார். நீதிமன்றத்தில் முடிவாக வேண்டிய ஒரு விவகாரத்துக்கு எதற்காக பொதுவெளியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் இருதரப்பினர் பலப்பிரயோகம் நடத்த வேண்டும்?
- நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டாலே அனுமதி மறுக்கும் காவல் துறையினர், இதுபோன்ற வன்முறை பலப்பிரயோக காட்சிகளை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது நியாயமா? போராட்டம் அறிவித்தவுடனே முன்னெச்சரிக்கையாக முக்கிய நபர்களை கைது செய்வதுதானே நடைமுறை.
- வன்முறைக்கு எளிதில் ஆட்படக்கூடிய இரு பிரிவினரை நெருங்கவிட்டு வேடிக்கை பார்ப்பது சட்டம் - ஒழுங்கை காக்கும் காவல் துறைக்கும், அரசுக்கும் அழகல்ல. ஒருவேளை இதுபோன்ற மோதல்கள் மூலம் மக்கள் பிரச்சினைகள் திசைதிரும்பினால் அதுவும் நல்லதுதான் என்று நினைக்கிறார்களோ?
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 01 – 2025)