TNPSC Thervupettagam

சுகாதாரத் துறைக்குச் செய்வது செலவல்ல, முதலீடு!

February 1 , 2021 1449 days 738 0
  • இந்தியாவின் முதல் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்றிருக்கும் வேளையில் இந்த ஓராண்டும் இந்தியாவுக்கு எவ்வளவு சோதனை மிகுந்த காலகட்டமாக இருந்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
  • இதுவரை சுமார் ஒரு கோடியே 7 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு இந்தியாவில் கரோனா தொற்று ஏற்பட்டு, ஒரு லட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
  • இவையெல்லாம் பதிவுசெய்யப்பட்டவை. பதிவுசெய்யப்படாத தொற்றுகளையும் மரணங்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கைகள் இன்னும் கூடுதலாக இருக்கவே வாய்ப்புள்ளது.
  • இந்தியாவுக்கு முன்னுதாரணமில்லாத வகையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா, நம் பலவீனங்கள் பலவற்றையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. மிக முக்கியமாக, சுகாதாரத் துறைக்கு இந்தியா எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
  • எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சுகாதாரத் துறையானது தனது மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களைக் கொண்டு இந்தப் பெருந்தொற்றுக் காலகட்டத்தைத் திறம்படச் சமாளித்ததை ஒருபக்கம் பாராட்டியாக வேண்டும் என்றால், இன்னொரு பக்கம் சுகாதாரக் கட்டமைப்புக்கு அரசு எந்த அளவுக்குச் செலவிடுகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
  • 2018-2019-ல் சுகாதாரத் துறைக்கு இந்திய அரசு தனது மொத்த செலவினத்தில் 4.5% மட்டுமே செலவிட்டிருக்கிறது; இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3% ஆகும்.
  • இந்தோனேஷியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் தங்கள் நிதிநிலை அறிக்கையில் 7% - 10% வரை சுகாதாரத்துக்குச் செலவிடுகின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு சுகாதாரத்தின் மீதான இந்திய அரசின் உதாசீனமான போக்கையே இது வெளிப்படுத்துகிறது.
  • இந்தியாவில் கிட்டத்தட்ட 80 கோடி ஏழைகளும் 30-35 கோடி நடுத்தர வர்க்கத்தினரும் வாழ்கிறார்கள். இவர்கள் குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட செலவு அதிகம் பிடிக்கும் கொடிய நோய்கள் ஏற்பட்டால், அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலையே செயலிழந்துபோகும் நிலைதான் காணப்படுகிறது.
  • அரசு மருத்துவமனைகளில் மேல்சிகிச்சை இல்லாமல் போகும்போது பலரும் தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டியுள்ளது. எத்தனையோ அரசு மருத்துவமனைகள் இருந்தாலும் இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் தனது ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் 60% வரை தங்கள் கையிலிருந்துதான் செலவுசெய்ய வேண்டியிருக்கிறது என்று ஒரு கணக்கு சொல்கிறது.
  • இந்தியா சுகாதாரத் துறைக்குச் செய்வதை செலவு என்று நினைக்கக் கூடாது; வளமான முதலீடு என்றே நினைக்க வேண்டும். ஏனெனில், ஆரோக்கியமான ஒரு நபரின் உற்பத்தித் திறன் கணிசமான அளவு அதிகமாக இருக்கிறது.
  • அதேபோல், ஆரோக்கியமான குழந்தைகள் படிப்பிலும் விளையாட்டுகளிலும் நன்கு கவனம் செலுத்துகின்றன. ஆகவே, கரோனா காலத்துக்குப் பின் ஒன்றிய அரசானது பெற்ற விழிப்புணர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதோடு இந்திய மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்குத் தனது நிதிநிலை அறிக்கையில் இதுவரை ஒதுக்குவதைவிட இரண்டு மடங்குக்கும் மேல் ஒதுக்க வேண்டும்.
  • அப்போதுதான் கரோனா பெருந்தொற்றையும் சரி... அது போன்ற எதிர்கால அச்சுறுத்தல்களையும் சரி நம்மால் உறுதியாக எதிர்கொள்ள முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories