TNPSC Thervupettagam

சுங்கக் கட்டண உயர்வு: நியாயமற்ற சுமை

April 5 , 2023 659 days 439 0
  • இந்தியாவில் இருக்கும் சுங்கச்சாவடிகளில், ஏற்கெனவே வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து இலகு ரக வாகனங்களுக்கு 5%, கனரக வாகனங்களுக்கு 10% சுங்கக் கட்டணம் உயர்த்தப் பட்டிருப்பது, நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளைக் கவலைக்குள்ளாக்கி உள்ளது.
  • இந்தியாவில் 1,44,634 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 816 சுங்கச்சாவடிகள் செயல்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டில் 6,606 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தியாவில் இரண்டு கட்டங்களாகச் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 29 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் கட்டணங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்கிறது. இதன்படி கடந்த நிதியாண்டில் சுங்கக் கட்டணம் 10-20%வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் 5-10% வரையிலான கட்டண உயர்வுக்கு நெடுஞ்சாலை ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது.
  • அதை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்றுக்கொண்ட நிலையில், கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கட்டண உயர்வு மூலம் 2022இல் மத்திய அரசுக்கு 21% கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. தற்போதையகட்டண உயர்வால் வருவாய் இன்னும் அதிகரிக்கக்கூடும்.
  • மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேரடியாகவோ தனியார் பங்களிப்புடனோ தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கவும் அவற்றைப் பராமரிக்கவுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் சாலைப் போக்குவரத்தையே மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
  • சாலை வழியாகவே சரக்குப் போக்குவரத்தும் அதிகம் நடைபெறுகிறது. மேம்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு பயண நேரம் குறைந்து, துரிதப் போக்குவரத்தும் சாத்தியமாகியிருக்கிறது என்பதுமறுக்க முடியாத உண்மை.
  • ஆனால் எரிபொருள், சுங்கக் கட்டண உயர்வின் விளைவாக சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் உயர்ந்து, அந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றப்படுவதை மத்திய அரசு உணர வேண்டியது அவசியம். ஒவ்வோர் ஆண்டும் உயரும் சுங்கக் கட்டணத்தால், மாநிலப் போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும். இது பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவும் வழிவகுத்துவிடும் அபாயமும் உள்ளது.
  • வாகனங்களை வாங்கும்போதே அனைத்து வாகனங்களுக்கும் ஆயுள் கால சாலை வரி வசூலிக்கப்படுகிறது. அப்படியிருக்க, சுங்க வரி உயர்வேதேவையற்றது என்கிற கருத்து முன்வைக்கப்படுவதை முற்றிலும் அலட்சியப்படுத்திவிட முடியாது.
  • மேலும், 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி என்கிற அரசின் அறிவிப்பும் அமலுக்கு வரவில்லை. சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கான காலம் முடிந்துவிட்ட நெடுஞ்சாலைகளில், சாலைப் பராமரிப்பு என்கிற பெயரில் கட்டண வசூல் தொடர்வதும், அந்தச் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாகவே இருந்துவருகின்றன.
  • இதுபோன்று நெடுஞ்சாலைத் துறையில் முறைப்படுத்த வேண்டிய பல பணிகள் இருக்கின்றன. அவற்றைச் செய்யாமல் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்திக்கொண்டிருப்பது அரசின் பொருளாதாரத் திட்டமிடலில் உள்ள பிரச்சினையையே சுட்டிக் காட்டுகிறது. அரசு சிந்திக்க வேண்டும்!

நன்றி: தி இந்து (05 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories