- ‘உலகத் தரம் வாய்ந்த இலக்கியம் படைத்த தமிழர்களுக்கு, தங்கள்வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தத் தெரியவில்லை; தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு மிகக் குறைவு’ என்றெல்லாம் வரலாற்றுலகில் பேசப்பட்ட காலம் உண்டு. இப்படி இலக்கிய வரலாற்றுத் திசையறியாமல் அவமானப் புயலில் அலைக்கழிக்கப்பட்ட தமிழிலக்கிய வரலாற்றுக் கப்பலுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் தோன்றியவர்தான் மனோன்மணீயம் சுந்தரனார்(1855).
ஆங்கிலத்தில் ஆய்வு முடிவுகள்:
- தமிழ் இலக்கியப் புலமை, சைவ சமய நூல்களின் ஆழ்ந்த வாசிப்பு, கல்வெட்டு ஆய்வில் தேர்ச்சி, பிறமொழிப் புலமை எனப் பன்முகத்திறன் படைத்தவராக இருந்ததால், தமிழ் இலக்கியங்களின் வரலாற்றுப் பெருமையையும், சைவ சமயச் சான்றோர் திருஞானசம்பந்தரின் காலத்தையும் தக்க ஆதாரங்களுடன் சுந்தரனார் உறுதிப்படுத்தினார். தமிழ் இலக்கியங்களின் வரலாறு ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்களால் கேள்விக்குறியானபோது, அதைத் தனது ஆழ்ந்த புலமையால் வென்றார்.
- தனது ஆய்வு முடிவுகளை ஆங்கிலத்தில் வெளியிட்டதால், ஐரோப்பிய அறிஞர்களின் பாராட்டைப் பெற்றார்; ‘ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி ஆஃப் கிரேட் பிரிட்டன்’ என்ற பன்னாட்டு ஆய்வு நிறுவனத்தின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
பன்முகப் பேரறிஞர்:
- நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் அடையாளம் தந்த மாபெரும் படைப்பாகும். தனது ‘மனோன்மணீயம்’ நாடகத்தின் முகவுரையில், ‘பழைமையிலும், இலக்கண நுண்மையிலும், விரிவிலும், ஏனைய சிறப்புகளிலும் எந்த மொழியையும்விடச் சிறந்த பெருமையுடையது செந்தமிழ்.
- இன்று பல காரணங்களால் நலிந்து, மாசடைந்து, நிலை தளர்ந்து நிற்கின்ற தமிழைப் போற்ற வேண்டியது தமிழர்களின் தலையாய கடமையன்றோ’ என அவர் குறிப்பிட்டிருக்கிறார். நமது முன்னோர்கள் படைத்த - பொருள்சுவையும், சொற்சுவையும் நிறைந்த - நூல்களை அறிமுகம் செய்வது முதன்மையானது என்றும், அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு புதிய படைப்புகளை உருவாக்குவது புதிய தலைமுறையின் இரண்டாவது கடமை என்றும் கூறியிருக்கிறார்.
- பொதுவாகத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள், பிற துறைகளில் - குறிப்பாகக் கல்வெட்டு, செப்பேட்டு ஆய்வுத் துறையில் ஆய்வாளர்களாக அந்தக் காலத்தில் இருக்கவில்லை. அதேபோல், தொல்லியல் துறை வல்லுநர்கள் தமிழ் இலக்கியங்களில் அப்போது ஆர்வம் காட்டவில்லை.
- ஆனால், தத்துவத் துறைப் பேராசிரியரான சுந்தரனார், கல்வெட்டு, செப்பேடுகள், தமிழ் இலக்கியம், பக்தி இலக்கியம், வரலாறு, வடமொழி, ஆங்கிலம் போன்ற பல்வேறு துறைகளில் மிளிர்ந்து நின்றார். அதனால்தான், திருஞானசம்பந்தரின் காலம் பொ.ஆ. (கி.பி.) ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தையது என அவரால் அறுதியிட்டுக் கூற முடிந்தது.
தமிழ் இலக்கியத்தின் தொன்மை:
- இந்திய இலக்கியம், மொழி வரலாறுகளில் முன்னோடிகளாக விளங்கிய முனைவர் பர்னெல், கால்டுவெல், நெல்சன் ஆகியோர், பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளின் ஆசிரியரும், சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவருமான திருஞானசம்பந்தரின் காலம் பொ.ஆ. 13ஆம் நூற்றாண்டு என்று தவறாகக் கணித்திருந்தது கவனிக்கத்தக்கது.
- பர்னெல் தனது ‘Elements of South-Indian Palaeography’ (1874) என்கிற நூலில், ‘ஏழாம் நூற்றாண்டில் இங்கு வந்த சுவான் சாங் (யுவான் சுவாங்) என்கிற சீனப் பயணி, தமிழர்கள் இலக்கிய ஆர்வம் குறைந்தவர்களாக இருந்தார்கள் என்று தனது கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார்’ என்று கூறி, அதன் அடிப்படையில் இந்தத் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் வடமொழி இலக்கியங்களின் தாக்கத்தால் எழுதப்பட்டவை அல்லது அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்டவை என முடிவுக்கு வந்து, தமிழ் இலக்கியங்களின் தரத்தையும், காலத்தையும் குறைவாக மதிப்பிட்டார்.
- அதேபோல், திருக்குறளை ஆய்வுசெய்த கால்டுவெல், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அங்கீகரிக்கப்பட்டது இந்தத் திருக்குறள் என்றும், தமிழ்ச் சங்க காலத்தை அடிப்படையாகக் கொண்டால், அதன் தலைவராகக் கருதப்படும் நக்கீரர் காலமும், கரிகால் சோழனின் ஆட்சிக் காலமும் பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டு எனக் கணக்கிடலாம் என்றார்.
- கால்டுவெல் தனது ‘A Comparative Grammar ofthe Dravidian or South-Indian Family of Languages’ என்ற ஆய்வு நூலில், ‘சில நூற்றாண்டுகளில் தமிழ் நூல்கள் அரங்கேற்றப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழர்களும் தமிழ்ப் புலவர்களும் இந்து மத அறிஞர்களும் நூல்களின் கருத்துக்களை முதன்மைப்படுத்தித் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
- அது மட்டுமல்ல, கால்டுவெல் ‘இவர்களுக்கு வரலாற்று நிகழ்வுகளில் ஆர்வமோ, பழமையின் மீது பற்றோ, ஆராய்ச்சிப் பண்போ மிகக் குறைவு. நவீன காலத்தில் இவர்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் சிறிது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, நான் தமிழ் இலக்கிய காலம் குறித்த ஆராய்ச்சியில் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற முடியும். அதாவது, இந்த நூல்கள் இருந்தன’ என்று அவர் பதிவுசெய்திருக்கிறார்.
சுந்தரனாரின் பதில்:
- இதற்குப் பதிலடி தந்த சுந்தரனார், ‘தமிழ் இலக்கியங்களை ஆழமாகப் படிக்கும்போது, தனித்துவம் மிகுந்த சிறந்த புலவர்களையும் படைப்பாளிகளையும் பாடல்களையும் ஆங்காங்கு காண முடியும்; அவர்கள் தங்கள் பெயரையும், நிகழ்வுநடந்த இடத்தையும், காலத்தையும் பதிவுசெய்வதில் எந்தத் தயக்கமும் காட்டியதில்லை’ என்றார்.
- அதற்கு உதாரணமாக சம்பந்தரையே கூறி, அவர் தனது ஒவ்வொரு பதிகத்தின் இறுதிப் பாடலிலும், இறைவனைப் புகழ்ந்து வாழ்த்துவது மட்டுமின்றித் தனது பெயரையும், பதிகம் அருளிய திருத்தலத்தையும் மற்றும் பதிகம் ஓதுவதால் வரும் பயன்களையும், தனிச் சிறப்பினையும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, ‘இலக்கியங்கள் கால ஆராய்ச்சிக்குப் பயனற்றவை என்ற கருத்தை நான் நம்பவும் இல்லை, அதனுடன் எனக்கு உடன்பாடும் இல்லை’ என்று அந்த நூலில் கூறுகிறார்.
- ‘என்னால் சைவ சமய நூல்களை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தர் எந்தக் காலத்தில் வாழ்ந்திருக்க முடியாது என்று உறுதியாகக் கூறத் தகுந்த சான்றுகளைத் தர முடியும். சம்பந்தரின் காலம் குறித்து பல ஐயப்பாடுகளும் குழப்பங்களும் இருப்பதால் சமய நூல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கூறுவது கடினம்’ என்று கூறி, இதற்காக அவர் தேர்வு செய்தது, 14 சித்தாந்த சாத்திரங்களில், சித்தாந்த அட்டகத்தை அருளியவரும் சந்தானக் குரவர்களில் நான்காமவருமான உமாபதி சிவத்தை. இவர் ‘சேக்கிழார் புராணம்’, ‘திருமுறை கண்ட புராணம்’, ‘திருத்தொண்டர் புராண சாரம்’, ‘தில்லை கோயில் புராணம்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியவர்.
ஆதிசங்கரருக்கும் முற்பட்டவர் திருஞானசம்பந்தர்:
- வடமொழி இலக்கியமான ‘சௌந்தர்ய லகரி’ என்னும் நூலில் ஆதிசங்கரர் தனது காலத்துக்கும் முற்பட்ட திருஞானசம்பந்தர் தேவியிடம் ஞானப்பால் உண்ட ‘திராவிட சிசு’ என்று குறிப்பிடுகிறார். ஆதிசங்கரர் காலம் பொ.ஆ. எட்டாம் நூற்றாண்டு என வரலாற்றுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
- எனவே, சம்பந்தரின் காலம் பொ.ஆ. எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று சுந்தரனார் கூறுகிறார். இப்படிப் பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் திருஞானசம்பந்தரின் காலத்தை நிறுவுவதில் சுந்தரனார் மிகுந்த முனைப்புக் காட்டினார். சுந்தரனாரின் காலத்துக்குப் பிறகு வந்த பல ஆராய்ச்சி முடிவுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.
- தமிழ் மொழி நலிந்து, மாசடைந்து நின்ற காலத்தில், அதன் தொன்மையையும், சிறப்பையும் எடுத்துக் கூறி ‘மனோன்மணீயம்’ என்கிற நாடகத்தின் வாயிலாக ஒரு மறுமலர்ச்சிக்கும் வித்திட்டார் சுந்தரனார்.
- ஏப்ரல் 4: மனோன்மணீயம் சுந்தரனார் 168ஆவது பிறந்த நாள்
நன்றி: தி இந்து (04 – 04 – 2023)