TNPSC Thervupettagam

சுந்தர வாழ்க்கை

December 1 , 2024 4 days 126 0

சுந்தர வாழ்க்கை

  • தமிழ்நாட்டின் முப்பெரும் தேவாரப் பெருமக்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் சுந்தரர். சிவபெருமானைப் போற்றி அவர் பாடிய நூறு பதிகங்களே ஏழாம் திருமுறையின் உள்ளடக்கம். முதல் ஆறு திருமுறைகளைப் பாடிய சம்பந்தரும் அப்பரும் மண்ணுலகினர். சுந்தரரோ விண்ணுலகில் வாழ்ந்து, செய்த பிழைக்காக மண்ணுலக வாழ்வுக்கு அனுப்பப்பட்டவர். அவரது வாழ்க்கையை விரித்துரைக்க சேக்கிழாருக்கு உதவிய எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகளில் ராஜராஜீசுவரத்துத் தூரிகைப் படப்பிடிப்பு முதன்மையானது எனலாம்.
  • ‘நாம் எடுப்​பித்த திருக்​கற்றளி’ என்கிற பெருமைமிகு அறிவிப்புடன் சோழப் பேரரசர் முதல் ராஜராஜர் தஞ்சாவூரில் எழுப்பிய ராஜராஜீசுவரம், தமிழ்​நாட்டுக் கட்டிடக் கலை வரலாற்றில் ஒரு மைல் கல். கருவறையைச் சுற்றி இரண்டு சுவர்​களும் அவற்றுக்கு இடைப்​பட்டு நடைவழியும் கொண்டு உருவான சாந்தார விமானங்​களில் ராஜராஜீசுவரம் தனித்​தன்மை கொண்டது. இங்கு மட்டுமே அந்த நடைவழி அமைந்​துள்ள விமானத்தின் இருதளங்​களிலும் கலைப் படைப்பு​களைப் பெற்றுள்ளது. கருவறையைச் சுற்றி அமைந்​துள்ள கீழ்த்தள நடைவழியில் சோழ, நாயக்கர் கால ஓவியங்​களுடன் கூரைப் பகுதியில் ஆடற்சிற்​பங்​களும் உள்ளன. மேல்தள நடைவழி பரதரின் நாட்டியச் சாத்திரம் குறிப்​பிடும் 108 ஆடற்கரணங்​களில் 81க்கான சிற்ப வடிப்பு​களைக் காட்சிப்​படுத்து​கிறது.

துணைநின்ற ஓவியங்கள்

  • கீழ்த்தள நடையின் நான்கு பெருஞ்​சுவர்​களில் முழுமை​யாகவும் பிற சுவர்​களில் ஆங்காங்கும் வெளிப்​பட்​டுள்ள சோழர் கால ஓவியங்​களில் ஒன்றே, சுந்தரர் வாழ்க்கையைப் பேசும் தடுத்​தாட்​கொண்ட புராணத்தை எழுத சேக்கிழாருக்குத் துணைபுரிந்தது. ராஜராஜர் காலத்தில் வழக்கில் இருந்த தரவுகளும் பதிவு​களுமே நான்கு பெருஞ்​சுவர்​களுள் ஒன்றில் அந்த வாழ்க்கையின் வளமையைக் காட்டச் சோழத் தூரிகைகளுக்கு உதவின எனலாம். சுந்தரர் வாழ்க்கையில் காதலும் பக்தியும் இணைந்தே இருந்தன. பரவை, சங்கிலி எனும் இரு பெண்களுடன் அவருக்கு ஏற்பட்ட இணைவையும் பிரிவையும் தவிர்த்த சோழ ஓவியர்கள், தாம் அறிய நேர்ந்த சுந்தரர் வாழ்க்கையின் மூன்று திருப்புமுனை நிகழ்வுகளை மட்டுமே காட்சிகளாக்​கினர்.
  • சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து, ஓலைகாட்டி அவரைத் தம் அடிமையென அறிவித்து, அதை வழக்குமன்​றத்​திலும் நிறுவி, தம் இருப்​பிடம் கேட்ட​வர்​களைத் திருவருட்​துறைக்கு அழைத்​துச்​சென்று, அங்கு சுந்தரருக்குத் தம்மை வெளிப்​படுத்தி, அவர் பாடுவதற்காக ‘பித்தா’ எனச் சொல்லெடுத்துத் தந்த சிவபெரு​மானின் திருவிளை​யாட்டு முதல் நிகழ்​வாகச் சுவரின் கீழ்ப்​பகு​தியில் பதிவாகி​யுள்ளது. சுந்தரருக்கும் சேரமான் பெருமாளுக்கும் இடையில் மலர்ந்த நட்புறவு இரண்டாம் நிகழ்​வாகச் சுவரின் நடுப்​பிரிவில் சுருக்கமாக அமைய, சுந்தரரும் சேரமான் பெருமாளும் மேற்கொண்ட கயிலைப் பயணமும் அங்கே இறைப் பார்வையில் அவர்களுக்குக் கிடைத்த தேவ வரவேற்பும் மேற்பகு​தியில் விரிந்​துள்ளன.

சோழர் காலக் கலைவளம்

  • சோழர் கால அடுக்களை, மணவரங்கு, வழக்கு மன்றம், வழக்காடு முறை, கோயில் என்று பொ.ஆ. (கி.பி.) 10, 11ஆம் நூற்றாண்டுச் சமூக வாழ்க்கையை முதல் பிரிவு ஓவியங்கள் வண்ணப் படப்பிடிப்பாக வழங்கு​கின்றன. இரண்டாம் பிரிவில், சேரமானின் அஞ்சைக்கள ஆடவல்லான் சிறப்பாக வடிக்​கப்​பட்​டுள்​ளார். இறைவனின் ஆனந்தத் தாண்ட​வத்தை உமையுடன் பிள்ளைகள் இருவரும் இடப்பு​றமிருந்து காண, குடமுழவில் தாளம் தருபவரும் காரைக்கால் அம்மையும் வீசிய திருவடியின் கீழ் வலப்புறம் இருக்​கிறார்கள்.
  • சுந்தரர், சேரமான் பெருமாளின் கயிலைப் பயணம் சுவரையும் கடந்து தூணிலும் பரவியுள்ளது. வருபவர் சுந்தரர் என்பதால் அவரை வரவேற்க, விண்ணுலக நண்பர்கள் ஆடலும் பாடலு​மாகச் சிறுசிறு குழுக்​களாய் வழியெங்கும் பரவி அவரை வரவேற்​கின்​றனர். இந்தக் காட்சிப் பரப்பில் சோழர் காலக் கலைவளம், கருவிகள், கலைஞர்கள், நிகழ்​முறை, ஒப்பனை எனக் கண்களை விரியச்​செய்து தரவுகளைக் குவிக்​கின்றன.

கண் நிறைக்கும் கயிலைப் பயணம்

  • யானை மீது சுந்தரரும் குதிரை மீது சேரமானும் கயிலை செல்லும் அந்தப் பெருவழி​யில், நீர்வாழ் இனங்கள் நீந்திப் பரவ, யானையின் கால்கள் கடல்நீரில் இருக்​கின்றன. வான்வழிப் பயணத்தில் கடல் எங்கிருந்து வந்தது? யானையின் வாலைப் பற்றியவாறு சுந்தரரின் உடன் பயணியாகப் பின்னால் ஒருவர். யார் இவர்? இந்த இரண்டு கேள்வி​களுக்கும் சுந்தரரின் நூறாம் பதிகம் விடைதரு​கிறது.
  • சுந்தரரை அழைத்துவர யானையையும் வழிநடத்திவர தம் அடியார்​களுள் ஒருவரான வாணனையும் இறைவன் அனுப்ப, பயண வழியில் கடல் அரசனான வருணன் வானவர் அனைவருக்கும் முன்னதாக வந்து மலர்கள் தூவித் தம்மை வணங்கி வரவேற்றதாக சுந்தரரே பேசுகிறார். கடலரசன் வணங்க, வழிதர வந்த வாணன் யானையின் வால் பிடித்துப் பின்வர, சேரமான் பெருமாள் முன் செல்ல, வானவ நண்பர்​களின் வரவேற்​பிற்கு இடையே சுந்தரர் கயிலையை அடைந்​ததும் அங்கே இறைத்திரு முன் அவரும் சேரமானும் இணைந்து கண்ட ஆடல், பாடல் நிறைந்த அரங்க நிகழ்வும் கோடுகளும் வண்ணங்​களு​மாகச் சோழர் கால ஓவியர்கள் நிகழ்த்திக் காட்டி​யிருக்கும் அழகின் உச்சம்.
  • சிவபெரு​மானும் உமையும் மேடையில் அமர்ந்​திருக்க, பின்னால் எழில்நிறை வடிவுடன் இறைவியின் விண்ணகத் தோழியர். அரங்கில் ஒழுங்குற அமர்ந்த பாடல் குழு. அவர்தம் பண்ணிசைப் பாடல்​களுக்கு ஆடலரசிகளின் அபிநயம். உடன் கூட்ட​மாகப் பூதங்​களின் இசைக் கோலத்​துடன், பேரிசை​யாகக் குடமுழவு. பார்வை​யாளர்களாக சுந்தரரே சுட்டும் திருமால், நான்முகன், இந்திரன் உள்ளிட்ட தேவர்​களும் பிறரும் இருக்​கிறார்கள். சிலப்​ப​தி​காரத்தின் அரங்கேற்றுக் காதையை நினைவூட்டுமாறு விரிந்து பரவும் இந்தக் கயிலாயக் காட்சி, சோழர் கால நிகழ்த்துக் கலைக்குக் கிடைத்த அரிதிலும் அரிதான வண்ணப்​ப​திவு.

யாருக்கும் வாய்க்காத பேறு

  • தவம், நட்பு, போர், பக்தி எனும் நான்கை முதன்​மைப்​படுத்தி நான்கு பெருஞ்​சுவர்களை வண்ணக் கலவைகளால் நிறைத்​திருக்கும் சோழத் தூரிகைகள் இலக்கியம் பயின்றும் வரலாறு அறிந்துமே வரைவைச் செய்தன என்பதை சுந்தரர் வாழ்க்கையின் தேர்ந்​தெடுத்த நிகழ்வு​களும், அவற்றை அவை பதிவுசெய்திருக்கும் பாங்கும் உள்ளங்கைக் கனியாய் உணர்த்து​கின்றன. வாணன் வந்து வழி தந்து உடன் சென்றதும், கடலரசன் மலர்
  • கொண்டு வாழ்த்தி வணங்கிப் பரவியதும் நம்பி ஆரூராருக்கு மட்டுமே வாய்த்த சுந்தரப் பெருமைகள். தள்ளாத வயதில் அப்பரும் தளிரான பருவத்தில் சம்பந்​தரும் தலைக்கு மூன்று திருமுறைகள் கொள்ளு​மள​விற்குப் பதிகங்கள் பாடியும் கருவறைச் சுவரோ​வி​யத்​திற்கு சுந்தரர் வாழ்க்கையை ராஜராஜர் தேர்ந்​தெடுத்தது ஏன்? அவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த தம்பிரான் தோழர் என்பதாலா?
  • அப்பருக்கும் சம்பந்​தருக்கும் கிடைக்காத இணையற்ற நண்பராக சுந்தரருக்கு சேரமான் பெருமாள் வாய்த்​த​தாலா? ஊர்ப் பதிகங்​களோடு நில்லாமல் வரலாற்றுத் தொடராகத் தமக்கு முன்னும் தம் ​காலத்தும் ​வாழ்ந்த இறையடி​யார்​களைத் தொகைப்​படுத்தித் ​திருத்​தொண்​டத்தொகை தந்​த​தாலா? வரலாறு வளப்​படுவதே கேள்​விகளால்​தான்​.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories