TNPSC Thervupettagam

சுற்றுச்சூழலைக் காக்கப் பறவைகள் ஆற்றும் அரிய சேவைகள்

May 20 , 2023 555 days 576 0
  • சுற்றுச்சூழல் அமைப்பில் அனைத்து உயிரினங்களும் முக்கியமானவையே. இருப்பினும், அவற்றில் ஒரு சில உயிரினங்களின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கண்டறியப் பட்டுள்ளது. அந்த வகை உயிரினங்களை உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் Keystone species, umbrella species, flagship species என்று அழைக்கின்றனர்; ஆதார உயிரினங்கள் என்று தமிழில் கூறலாம்.
  • இந்தியக் காடுகளில் ஆதார உயிரினங்கள் பல உள்ளன; குறிப்பாக புலி, யானை ஆகியவை. தாவர உண்ணிகளின் எண்ணிக்கை பெருகாமல் புலி கட்டுக்குள் வைத்திருக்கும். அதேபோல் காட்டுத் தாவரங்கள் பல இடங்களில் பரவுவதற்கு யானை வழிவகுக்கும். இவை இரண்டும் அந்தக் காடுகளிலிருந்து அழியும் பட்சத்தில் காடுகளில் தாவர இழப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகும்; அந்தக் காடுகளின் செயல்பாடுகளும் அவை வழங்கும் சேவைகளிலும் மாற்றம் ஏற்படும். இதேபோல, பல சுற்றுச்சூழல் மண்டலங்களில் பறவைகள் ஆதார உயிரினங்களாகச் செயல்பட்டுவருகின்றன.

பறவைகளின் முக்கியத்துவம்:

  • சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பறவை இனங்கள், பூமியில் உள்ள பல சுற்றுச்சூழல் மண்டலங்களில் முதன்மை உயிரினங்களாக உள்ளன. பறவைகளால் மனித இனத்திற்கு அளவிட முடியாத நன்மைகள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே வருகின்றன.
  • தீங்கு விளைவிக்கும் பல பூச்சிகளை விவசாய நிலங்களிலிருந்து அழிப்பதன் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரிக்க பறவைகள் காரணமாக இருக்கின்றன. பொருளாதார அடிப்படையில் பார்த்தால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதற்குப் பறவைகள் காரணமாக உள்ளன.

விதைப் பரவல்:

  • வெப்பமண்டல, மிதவெப்ப மண்டலக் காடுகளில் உள்ள 90 முதல் 95 சதவீதத் தாவரங்களின் விதைப் பரவலுக்குப் பறவைகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. கோவையில் உள்ள சாலிம் அலி பறவைகள், இயற்கை வரலாற்று மையத்தின் ஓர் ஆய்வின்படி, இந்தியக் காடுகளில் வாழும் பறவைகளில் மூன்றில் ஒரு பங்கு பறவையினங்கள் விதைப் பரவலுக்கு முக்கியக் காரணமாக உள்ளன; மேற்கு மலைத்தொடரில் உள்ள பசுமைமாறா காடுகளில் வசிக்கும் இருவாச்சி பறவையும் பழம் மட்டுமே உண்ணும் புறா இனங்களும் இருப்பதால் இந்தியாவின் முக்கியமான தாவர இனங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன; வறண்ட பகுதியில் உள்ள காடுகளில் குயில், செம்மீசைச் சின்னான் / கொண்டைக் குருவி அதிக அளவு விதைப் பரவலுக்குக் காரணமாக இருக்கின்றன.
  • பறவையினங்கள் இருப்பதால் மட்டுமே இன்றும் பல அரிய வகைக் காட்டுத் தாவரங்கள் அழியாமல் காக்கப்படுகின்றன என்பதே அந்த ஆய்வு உணர்த்தும் செய்தி.
  • பறவைகளால் நடைபெறும் விதைப் பரவலால், அந்தத் தாவர இனங்களுக்கும் கூடுதலாகச் சில நன்மைகள் கிடைக்கின்றன. ஒரு தாவரம் புதிய இடத்தில் வளரும்போது பழைய இடங்களில் ஏற்படக்கூடிய சில வகைப் பூஞ்சை, காளான் தொற்றுகள் புதிய இடத்தில் இருக்காது.
  • அந்த வகையில் அந்த மரமானது பூஞ்சை, காளான் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. பழைய இடங்களில் அதிக அளவு காணப்படும் பூச்சிகள், குறிப்பிட்ட தாவரத்தைத் தாக்கும் உயிரினங்கள் போன்றவற்றிலிருந்தும் புதிய இடத்தில் வளரும் மரங்கள் பாதுகாப்பைப் பெறுகின்றன. முக்கியமாக, அதே தாவர இனங் களுக்குள் ஏற்படும் போட்டியைத் தவிர்க்கவும் இந்த விதைப் பரவல் பெரிதும் உதவுகிறது.

நீர்ப் பறவைகள்:

  • தாவரங்களின் செழிப்பான வளர்ச்சிக்கு நைட்ரஜன் (தழைச்சத்து), பாஸ்பரஸ் (மணிச்சத்து) போன்ற சத்துகள் மிகவும் அவசியம். ஆனால், வெப்ப மண்டலக் கடலோரங்களில் காணப்படும் அலையாத்திக் காடுகளுக்குப் போதுமான அளவு நைட்ரஜன், பாஸ்பரஸ் சத்துகள் கிடைப்பதில்லை. இந்தக் குறையை நீர்ப் பறவைகளே சரிசெய்கின்றன.
  • அலையாத்திக் காட்டு பகுதிகளுக்கு வலசை வரும் பல ஆயிரக்கணக்கான நீர்ப் பறவை இனங்கள், அந்தப் பகுதிகளிலேயே எச்சங்களை இடுகின்றன. இயற்கையாகவே பறவைகளின் எச்சத்தில் பாஸ்பரஸ், நைட்ரஜன் ஆகிய சத்துகள் அதிகம். பல்லாயிரம் நீர்ப்பறவையின் எச்சம், அலையாத்திக் காடுகளுக்குத் தேவையான நைட்ரஜன் சத்துகளை அளிக்கின்றன.
  • கடலில் இருக்கக்கூடிய உயிரினங்களில் 90 சதவீத உயிரினங்கள் தன்னுடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு பகுதியை அலையாத்திக் காடுகளில் கழிக்கின்றன. அதன்படி பார்த்தால், உலகின் 90 சதவீதக் கடல் மீன் வளத்தை நீர்ப் பறவைகளே உறுதிப்படுத்துகின்றன.

பூச்சி அழிப்பான்கள்:

  • இந்திய விவசாய நிலங்களில் அதிகம் காணப்படும் பறவை இனங்கள் பூச்சிகளை அழிக்கும் திறன்கொண்டவை. உதாரணமாக, உண்ணிக் கொக்கு தனது உணவு முறையில் பயிர்களுக்குத் தீங்கிழைக்கும் பூச்சிகளையே 80 சதவீதம் உணவாகக் கொள்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, ஒரு விவசாயப் பருவத்தில் ஓர் உண்ணிக் கொக்கினால் மட்டும் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 361 ஹெக்டேர் அளவிலான விளைநிலங்களைப் பாதுகாக்க முடியும்.

பூச்சிக்கொல்லி:

  • கடந்த 50 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாகத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி களால் பல இந்தியப் பறவையினங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது; உதாரணமாக, மயில்களின் எண்ணிக்கை. விளைநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘மோனோகுரோடோபாஸ்’ (Monocrotophos) எனும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மயில்களின் இறப்புக்குக் காரணமாகிறது.
  • பூச்சி களை உண்ணும் பறவைகளின் எண்ணிக்கை வயல்வெளிகளில் குறைந்தால், அதற்கு மாற்றாக அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டிய தேவை ஏற்படும். பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றே.

காப்பது நமது கடமை:

  • இந்தியாவில் பறவைகளின் தற்போதைய நிலைமை பற்றிய ஒரு நீண்ட ஆய்வு 2020இல் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு, அனைவருக்கும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதன்படி, மேற்கு மலைத் தொடர் பகுதியில் காணப்படும் பறவை இனங்களில் 75 சதவீதம் குறைந்துள்ளன; இந்திய நீர்நிலைகளுக்கு வலசை வரும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவையினங்களின் வரத்து 25 சதவீதம் குறைந்துள்ளது.
  • பறவைகள் அழிவது அல்லது குறைவது என்பது பல சுற்றுச்சூழல் மண்டலங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பறவைகளின் எண்ணிக்கை குறையக் காரணமாக இருக்கும் அனைத்துக் காரணிகளையும் நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும் அல்லது முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்; தவறும் பட்சத்தில், அதற்காக நாம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

நன்றி: தி இந்து (20 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories