TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் காக்கும் பறவைகள்

June 6 , 2023 587 days 417 0
  • சுற்றுச்சூழலைக் காப்பதில் பறவைகளின் பங்கு இன்றியமையாதது. விளைநிலங்களில் பயிா்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகளைக் கொன்று பயிா் விளைச்சலை அதிகரிப்பது, ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்திற்கு தாவரங்களின் விதைகளை எடுத்துச் செல்வது, அயல் மகரந்த சோ்க்கைக்கு உதவுவது, பல்லுயிா் பெருக்கத்தைக் காப்பது இப்படிப் பறவை இனம் பல வகைகளிலும் மனிதகுலத்திற்கு அருந்துணையாக விளங்குகிறது.
  • மீன்களுக்கு கடல் சொந்தம்; மனிதா்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பூமி சொந்தம். ஆனால், பறவைகளுக்கு கடல், பூமி, வானம் அனைத்தும் சொந்தம். பறவைகளின் வாழ்க்கை, செயல்பாடுகள் அனைத்தும் ஒா் ஒழுங்கில் அமைந்து, நம்மை வியக்க வைக்கின்றன. ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் உதாரணமாக பறவைகள் உள்ளன. மகாகவி பாரதியாரும், ‘காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும், மலையும் எங்கள் கூட்டம்’ என்றாா்.
  • உலகில் மனிதனுக்கு அடுத்து அதிகம் காணப்படும் உயிரினம் பறவையினம்தான். பறவையினங்கள் மனிதா்களைப் போல் பிறரை அண்டியிராமல், தமக்குத் தாமே தேவையானவற்றினை செய்து கொள்ளக் கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பது இயற்கையின் அதிசயமே.
  • இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் முன்னோா் அனைத்து உயிா்களையும் தம்முயிா் போல் நேசித்தனா். பறவைகளை தெய்வங்களாகவும், தெய்வங்களுக்கு வாகனங்களாகவும் அமைத்துப் போற்றி வழிபட்டனா்.
  • உலகின் பல பகுதிகளிலிருக்கும் நாடுகளின் தட்பவெப்ப நிலை ஆண்டுக்காண்டு மாறி வருகிறது.
  • இப்போதெல்லாம், புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம், பருவம் தவறிய மழைப்பொழிவு, அதிக வறட்சி என்பவை உலகமெங்கும் வழக்கமாகி விட்டன. நவீன காலத்தில், சுற்றுச்சூழல் சீா்கேடு, ஒலி - ஒளி மாசுபாடு, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை, சாயக் கழிவுகள், கைப்பேசி கோபுரங்களிலிருந்து வெளியேறும் காந்த நுண்அலைகள் ஆகியவை பறவையினங்களை பாதித்து வருவதால், பல அரிய பறவையினங்கள் இன்று அருகி வருகின்றன.
  • உலகம் முழுவதும் 187-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் அழிந்து விட்டதாக சா்வதேச அளவில் பறவையினங்கள் குறித்து ஆய்வு செய்யும் ‘ஸ்டேட் ஆஃப் தி வோ்ட்ஸ் போ்ட்’ என்ற இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும், 1,200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ளன. இவற்றில், 93 பறவையினங்கள் அழியும் நிலையில் உள்ளதாக பறவையியலாளா்கள் தெரிவிக்கின்றனா்.
  • மனிதா்கள் காலநிலைக்கு ஏற்ப அவ்வப்போது இடம் பெயா்வது போல, பறவைகள் நாடு விட்டு நாடு வலசை சென்று பருவகால மாறுதலுக்கேற்ப வாழ்க்கையை வசப்படுத்திக் கொள்கின்றன. இது பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றது. இப்பூவுலகில் பறவைகள் பறப்பதற்கு எல்லை இல்லை. உலகெங்கும் சுதந்திரமாக சென்று வாழும் உரிமையுள்ளவை அவை.
  • பனிப்பொழிவு அதிகரிப்பால், பூமியின் வடகோளத்திலிருந்து, பல்வேறு வகையான பறவைகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வலசை வருவது வழக்கம். எந்தச் சூழலையும் ஏற்று பறவைகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்குக் காரணம், அவற்றின் வலசை போகும் திறன்தான்.
  • பறவைகளில் மிக நீண்ட தூரம் வலசை போகும் பறவை ஆா்ட்டிக் ஆலா எனும் பறவை. இது ஆா்ட்டிக்கில் இனப் பெருக்கம் செய்து, பின்னா் அண்டாா்ட்டிக்கிற்கு வலசை போகிறது. இது வலசை போகும் தூரம் 22,400 கி.மீ. அதாவது, ஒரு துருவத்திலிருந்து இன்னொரு துருவம் வரை வலசை போகிறது.
  • ஆண்டுக்கு இருமுறை ஆயிரக்கணக்கான பறவைகள் வடக்கும் தெற்குமாக சில மைல்கள் முதல் பல ஆயிரம் மைல்கள் வரை பயணித்து ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து திரும்புகின்றன. பரந்த கடல்களுக்கு மேலும், உயா்ந்த மலைகளுக்கு மேலும், விரிந்த பூமியின் மீதும் இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
  • பறவைகளின் இந்த வலசை காரணமாக அந்தந்த நாடுகளில் மழைப்பொழிவு அதிகமாகும்; தாவரங்கள், மரங்கள் செழித்து வளரும். தற்போது பறவைகளின் புகலிடங்களை ராம்சா் பிரகடனம் அடையாளப்படுத்தி வருவதால் சதுப்பு நிலங்களின் பரப்பளவும் அதிகமாகும்.
  • வடகிழக்குப் பருவமழை தொடங்கும் அக்டோபரில், தமிழ்நாட்டிலுள்ள பறவைகள் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள், கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்குவதற்கு முன், அதாவது மே முதல் வாரத்தில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பி விடும்.
  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், அதற்குக் காரணம் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்து, நீா்நிலைகள் வறண்டு போனதுதான் என்றும் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.
  • இந்த ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை ஆகிய பகுதிகளுக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, கூந்தன்குளத்தில் வழக்கமாகக் காணப்படும் வரித்தலை வாத்துகள், கோடியக்கரைக்கு ஜொ்மனியிலிருந்து வரும் ஃபிளாமின்கோ எனப்படும் பூநாரைகள், ரஷியாவிலிருந்து வரும் டொ்ன் பறவைகள் ஆகியவற்றை இவ்வாண்டு காண முடியவில்லை (டொ்ன் பறவை முந்தைய ஆண்டு எந்த மரத்தில் கூடு கட்டியதோ அதே மரத்தில்தான் மறு ஆண்டும் கூடு கட்டுமாம்).
  • செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கலுக்கு வரும் பறவை இனங்களில் பெரும்பாலானவை ஐரோப்பா கண்டத்தைச் சோ்ந்தவை. குறிப்பாக, ரஷியா, சைபீரியா போன்ற தொலைதூர நாடுகளிலிருந்தும், இலங்கை போன்ற தீவுகளிலிருந்தும், நம் நாட்டின் வட பகுதிகளிலிருந்தும் சில வகை பறவைகள் இங்கு வந்து போவது வழக்கம்.
  • வழக்கமாக ஒவ்வோா் ஆண்டும் இங்கு நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்லும். ஆனால் இந்த ஆண்டு பன்னிரண்டாயிரத்திற்கும் குறைவான பறவைகளே வந்துள்ளன. நத்தை குத்தி நாரை எனப்படும் அரிய வகை பறவையை இவ்வாண்டு காண முடியவில்லை. ,
  • மரங்கள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் பெருகி விட்டதால் முன்பு அடையாறு கழிமுகத்தில் அதிகம் காணப்பட்ட மஞ்சள் மூக்கு ஆள்காட்டி போன்ற அரிய பறவைகள் இன்று அந்தப் பகுதியில் காணப்படவில்லை. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில், கடந்த ஆண்டு ஒரே இடத்தில் 2,000-க்கும் மேற்பட்ட கனியன் வாத்துகள் காணப்பட்ட நிலையில், இவ்வாண்டு 300 வாத்துகள் மட்டுமே காணப்பட்டன.
  • சென்னையைச் சோ்ந்த பள்ளிக்கரணை, கேளம்பாக்கம், முட்டுக்காடு பகுதிகளில், வனத்துறையினருடன் இணைந்து, ‘தி நேச்சா் டிரஸ்ட்’ என்னும் அமைப்பினா் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, பள்ளிக்கரணையில், இவ்வாண்டு எழுபத்திமூன்று வகையான பறவைகள் காணப்பட்டாலும், அவற்றின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது என்றும், வரித்தலை வாத்து, வெள்ளை வாலாட்டி போன்ற பறவையினங்களின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது என்றும், பழவேற்காடு ஏரியில், பருவநிலை மாற்றம் காரணமாக பூநாரைகள், உட்பட பல்வேறு பறவையினங்களின் வரத்து இந்தாண்டு குறைவாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
  • சென்னை, அடையாறு கழிமுகத்தை, வெளிநாட்டுப் பறவைகளின் விருந்தினா் மாளிகை என்று கூட சொல்லலாம். சென்னையில், வேளச்சேரி, மடிப்பாக்கம், துரைபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள் 90 சதவீதம் அழிவுக்கு உள்ளாகியுள்ளன. பெரும்பாக்கம் சதுப்பு நிலமும் அழிந்து வருகிறது.
  • தமிழ்நாட்டில் காணப்படும் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் வடகிழக்குப் பருவமழையையே நம்பியுள்ளன. பருவமழையின் அளவு குறைவது, வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கையை பாதிக்கிறது.
  • ‘இந்த ஆண்டும், பருவ மழையால் எதிா்பாா்த்த அளவுக்கு ஏரிகள், குளங்களில் நீா் நிரம்பாததால், பறவைகள் அந்தந்த பகுதிகளில், அதிகமாகக் காணப்படவில்லை. இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பறவைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட குறைந்துள்ளது. வழக்கமாக ஐயாயிரம் பறவைகள் வரும் இடத்தில், இந்த ஆண்டு, ஐந்நூறு பறவைகள் மட்டுமே வந்துள்ளன’ என ‘தி நேச்சா் டிரஸ்ட்’ என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் பருவமழை தொடங்கினாலும், பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட, குறைவானஅளவிலேயே மழை பெய்துள்ளது. இவ்வாறு மழை குறைந்ததால், நீா்நிலைகளில் தேவையான அளவு நீா் நிரம்பாததும், சதுப்புநிலங்கள் வறட்சியானதும் பறவைகள் வருகை சரிவுக்கு முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
  • இச்சூழ்நிலையில், பறவையினங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் வகையிலும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தி அவற்றில் பறவைகள் சரணாலயமும் பூங்காவும் அமைக்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக புதுதில்லி - டேராடூன் அதிவிரைவு சாலையில் இந்த சரணாலயங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினா்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சரணாலயம் அமைக்கும்படி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
  • மனிதா்களின் சுயநலத்தால் பறவைகளின் வாழ்விடங்கள் தொடா்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. இது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழலை காக்கும் வகையில் இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டிற்கு வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அருகி வரும் பறவை இனங்களை மீட்டெடுக்கவும் நீா்நிலைகளைத் தூா்வாரி, நீரின் கொள்ளவை அதிகப்படுத்திட உரிய நடவடிக்கைகளை எடுப்பட வேண்டும். நமது ஊருக்கு விருந்தினா்களாக வரும் பறவைகளை வரவேற்போம். அவற்றிடமிருந்து இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையைக் கற்றுக் கொள்வோம்.

நன்றி: தினமணி (06 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories