TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் முக்கிய மாற்றங்கள் என்னென்ன?

August 10 , 2020 1626 days 1706 0

சுற்றுச்சூழல் ஒழுங்காற்று முறை பலவீனப்படுத்தப்படுமா?

  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சமீபத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை-2020-ன் வரைவை வெளியிட்டது.
  • சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-ன் கீழ் ஏற்கெனவே வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2006-க்குப் பதிலாக இது கொண்டுவரப்பட்டிருக்கிறது.
  • இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அரசு இதில் உள்ளடக்க விரும்புகிறது. சுரங்கம் தோண்டுதல், பாசனத்துக்கான அணை, தொழிலகம், கழிவு சுத்திகரிப்பு நிலையம் போன்றவை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அறிவியல்பூர்வமாக மதிப்பிடுவதுதான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு.
  • இந்த விதிகளில் மக்களிடம் கருத்து கேட்பதற்கான வழிவகையும் இருக்கிறது; ஒரு திட்டப் பணிக்கென்று நிபுணர்களால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை அடிப்படையாகக் கொண்டு உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டங்கள் நடத்தலாம்.

ஏற்கெனவே அமலில் உள்ள அறிவிக்கையிலிருந்து தற்போதைய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு எப்படி வேறுபடுகிறது?

  • முந்தைய அறிவிக்கையிலிருந்து இது பெரிதும் வேறுபடும் இடங்கள் எவையென்றால் மக்களிடம் கருத்து கேட்க வேண்டிய திட்டப்பணிகள் பலவற்றையும் நீக்கியதுதான்.
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலிருந்து (பிரிவு 13, துணைப்பிரிவு 11) விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் பல்வேறு திட்டப்பணிகளின் பட்டியலானது வகைப்பாடு பி2-வின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வகைப்பாட்டில் உள்ளடங்கும் திட்டப்பணிகளுள் சில பின்வருமாறு:

  • கடலுக்குள்ளிருந்தும் கடல் பகுதி அல்லாத இடங்களிலிருந்தும் எண்ணெய், எரிவாயு, ஷேல் எரிவாயு போன்றவற்றைத் தேடுதல், 25 மெகா வாட் வரையிலான நீர்மின் திட்டங்கள், 2,000-த்திலிருந்து 10,000 ஹெக்டேர் நிலங்களுக்கான நீர்ப்பாசனத் திட்டங்கள், கனிமங்களைத் தரப்படுத்தும் சிறு மற்றும் குறு அலகுகள், எரிஉலைகளைக் கொண்ட சிறிய வார்ப்பாலைகள், சிறு மற்றும் குறு சிமெண்ட் ஆலைகள், பாஸ்ஃபோரிக் அமிலம், அம்மோனியா அமிலம், கந்தக அமிலம் போன்றவையல்லாத அமிலங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சிறு மற்றும் குறு சாயத்தொழிற்சாலைகள், பெருமளவிலான மருந்துகள், செயற்கை ரப்பர்கள், குறு வண்ணத் தயாரிப்பு அலகுகள், உள்நாட்டுக்குள் அமையும் எல்லா நீர்வழிப்பாதைத் திட்டப்பணிகள், 25 கி.மீ. தொலைவிலிருந்து 100 கி.மி.. தொலைவு வரையிலான தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தல், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் காற்றுவழிக் கம்பிப்பாதைகள், குறிப்பிட்ட கட்டுமானப் பணிகள், குறிப்பிட்ட பகுதிகளின் மேம்பாட்டுத் திட்டப் பணிகள். ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகளின்படி, இந்தப் பட்டியலில் உள்ள திட்டப்பணிகள் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுக்களால் அடையாளம் காணப்படும்.

இதில் உள்ள அச்சப்பட வேண்டிய விஷயங்கள் எவையெவை?

  • பி2 வகைப்பாட்டில் உள்ள திட்டப்பணிகளும் விரிவாக்க, நவீனப்படுத்தல் திட்டப்பணிகளும் மேற்பார்வை இன்றி மேற்கொள்ளப்படுவதாலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலிருந்தும் பொதுமக்கள் கருத்து கேட்பிலிருந்தும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதாலும் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.
  • திட்டப் பணிகள் தொடங்கிய பிறகு சுற்றுச்சூழல் அனுமதி வாங்கிக்கொள்ளலாம் என்ற புதிய வழிவகையால் இது சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடும் என்று பலரும் அஞ்சுகிறார்கள்.
  • மேலும், பொது மக்கள் கருத்துகேட்புக்கான அவகாசம் 30 நாட்களிலிருந்து 20 நாட்களாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கால அவகாசம் குறைவு என்பதாலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை பிராந்திய மொழிகளில் பரவலாகக் கிடைக்காது என்பதாலும் அந்த அறிவிக்கையை ஆய்வுக்குட்படுத்துவது சிரமமாக ஆகிவிடும்.
  • அதேபோல, நவீனப்படுத்தல் மற்றும் விரிவாக்கத் திட்டங்களைப் பொறுத்தவரை 2020-ன் அறிவிக்கை மிகவும் தாராளமாக இருக்கிறது. இவற்றில் 25% பணிகள் தேவைப்படும் திட்டப்பணிகளுக்கு மட்டுமே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு உரியதாகிறது, 50% பணிகள் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளுக்கு மட்டுமே பொதுமக்கள் கருத்துகேட்பு தேவைப்படுகிறது.
  • புதிதாக முன்வைக்கப்பட்ட மாற்றங்களைப் பொறுத்தவரை திட்டப்பணிகளை மேற்கொள்பவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் அறிக்கை வெளியிட்டால் போதும். முன்னர் இது ஆண்டுக்கு இரண்டு முறையாக இருந்தது. இந்த நகர்வு பிற்போக்கானதாகவே பார்க்கப்படுகிறது, ஏனெனில் 2016-ல் ஆண்டுக்கு இருமுறை தரவேண்டிய அறிக்கைகள் 43%-லிருந்து 78% வரை மட்டுமே தரப்பட்டதாக சி.ஏ.ஜி. கண்டுபிடித்தார். 5%-லிருந்து 57% வரை விதிமுறைகளுக்கு இணங்காததும் கண்டறியப்பட்டது.
  • அணைத் திட்டங்கள், நீர்மின் திட்டங்கள், அனல்மின் திட்டங்கள் போன்றவை விதிமுறைக்கு இணங்காதது கண்டறியப்பட்டது. கடந்த மே 7 அன்று விசாகப்பட்டினத்தின் எல்.ஜி. பாலிமர்ஸில் விஷவாயு கசிந்ததற்குப் பிறகு அந்த தொழிற்சாலையானது சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றிருக்கவில்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது இந்த விதிமுறைகள் மிகக் குறைவாகவே பலனளிக்கின்றன என்பதை உணர்த்தியது.

விதிமீறல்களுக்குப் பின் அனுமதி வழங்கப்படுவதற்கு புதிய விதிமுறைகள் எவ்வாறு வழிவகை செய்கின்றன?

  • 2017-ம் ஆண்டு மார்ச் 14-ல் தான் வெளியிட்ட ஆணையை சுற்றுச்சூழல் அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது. அதன்படி விதிமீறல்கள் செய்யப்பட்ட திட்டப்பணிகளை மதிப்பீடு செய்வதற்கு அது வழிவகை செய்கிறது. விதிமீறல்கள் என்பவை அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகளும், விரிவாக்கமும் நவீனப்படுத்தலும் தொடங்கப்பட்டதைக் குறிக்கின்றன. விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் முறையீடு செய்வதை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 அனுமதிக்கவில்லை. மாறாக, விதிகளை மீறிய திட்டப்பணியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், மதிப்பீட்டுக் குழு அல்லது ஒழுங்காற்று ஆணையம் ஆகியோரிடமிருந்து அரசே கேட்டறியும்.
  • இதுபோன்ற திட்டப்பணிகள் அதற்குப் பிறகு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படும், அதாவது அவர்கள் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் சேதத்துக்கு உரிய நிவாரண நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள். இதுவும்கூட விதிமீறியவரால் மதிப்பிடப்படும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் இதில் பின்பற்றப்பட வேண்டும்.

உலகளாவிய நெறிமுறைகளுடன் இந்தப் புதிய அறிவிக்கையை எப்படியெல்லாம் ஒப்பிடலாம்?

  • தீங்கைத் தவிர்த்தல், பல தலைமுறைகளுக்கும் நியாயம் வழங்குதல் போன்ற முன்னெச்சரிக்கைக் கோட்பாடுகளை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை கொண்டிருக்க வேண்டும்.
  • 1998-ல் செய்துகொள்ளப்பட்ட ஆர்ஹஸ் ஒப்பந்தத்துக்கு இணங்க ஐரோப்பிய ஒன்றியம் தனது நடைமுறைகளைத் திருத்தியமைத்திருக்கிறது. இது பரிணாமமடைந்துவரும் முன்னுதாரணமாக இருக்கிறது.
  • இது சுற்றுச்சூழல் உரிமைகளையும் மனித உரிமைகளையும் ஒருசேரக் கோருகிறது. அதைப் பொறுத்தவரை எதிர்காலத் தலைமுறைகளுக்குத் தற்போதைய தலைமுறை கடப்பாடு கொண்டிருக்கிறது, ஒன்றில் தொடர்புடைய அனைவரும் உள்ளடக்கப்படும்போதே வளம்குன்றா வளர்ச்சியை சாதிக்க முடியும், அரசின் பொறுப்பும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, பொதுமக்களுக்கும் அரசு அதிகாரத் தரப்புக்கும் இடையிலான உரையாடல்கள் ஒரு ஜனநாயகச் சூழலில் நடைபெற வேண்டும்.
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவுறுத்தல் பருவநிலை மாற்றத்தையும் பல்லுயிர்ப் பாதுகாப்பையும் உள்ளடக்குகிறது.
  • இந்தியாவில் உள்ள விதிமுறைகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2006 உட்பட, திட்டப்பணிகளை முன்னெடுப்பவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில்தான் இருக்கின்றன என்றும், பொதுமக்களின் கருத்துகளுக்கான இடத்தை குறைவாகவே கொண்டிருக்கின்றன என்றும் வாதிடலாம்; பிழையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிலிருந்து வரும் அழுத்தங்களால் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்கள் குறித்து அக்கறை கொள்ளாத வகையிலும்தான் இந்தியாவில் உள்ள நெறிமுறைகள் அப்போதிலிருந்து இருக்கின்றன என்றும் கூறலாம். 2020 அறிவிக்கை இந்தச் சட்டகத்தின் தாக்கத்தை அதிகரித்திருக்கிறது.

நன்றி: தி இந்து (10-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories