- நமது உடல் நலம் சீர்கெடுவதைப் போல, புவியின் இயற்கை வள ஆரோக்கியம் கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. முக்கியமாக மனிதச் செயல்பாடுகள், பல உயிரினங்களை அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளன.
- உலகம் முழுவதும் 200 கோடி ஹெக்டேர் நிலம் மனிதச் செயல்பாடுகளால் சீரழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எண்ணற்ற உயிரினங்கள் அழிவுநிலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை இன்னும் நாம் உணரவில்லை.
- ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான தசாப்தத்தின் (2021 - 2030) பாதியை நெருங்கும் இந்த வேளையில், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், புதுப்பிக்கவும் அரசாங்கங்கள், பொது சமூகம், தனியார் துறைகள் அவசரமாகச் செயல்பட்டாக வேண்டிய தேவை உள்ளது.
- உலக சுற்றுசூழல் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் 5, 2024 கொண்டாடப்படும். ‘நில மறுசீரமைப்பு, பாலை வனமாக்கல், வறட்சியைத் தடுக்கும் தன்மைகளை மேம்படுத்துதல்’ ஆகியவை இந்த வருடச் சுற்றுசூழல் தின மையப்பொருள்.
பிரச்சினைகளின் தீவிரம்:
- இந்த நூற்றாண்டில் உலக நாடுகள் மூன்று முக்கிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. அவை, காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகள், இயற்கை-பல்லுயிர் வள இழப்பு, மாசுபடுதல்-தீர்வு காணமுடியாத அளவுள்ள கழிவு உற்பத்தி.
- கவலைக்குரிய இந்தப் பிரச்சினைகளைக் களைய சிறிய - பெரிய அளவிலான நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் இந்த நெருக்கடிகள், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியை அச்சுறுத்துகின்றன. கிராமப்புறச் சமூகங்கள், சிறு விவசாயிகள், மிகவும் வறுமை நிலையில் இருப்பவர்கள் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.
- எனவே காலநிலை மாற்றம் தூண்டிவிடக்கூடிய நிலச் சீரழிவு, வெள்ளம், வறட்சி, பாலைவனமாக்கல் ஆகிய காரணிகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். கடந்த ஆண்டு, வெப்பநிலைப் பதிவுகள் மீண்டும் ஒரு வரலாற்று உச்சத்தைத் தொட்டு, வரவிருக்கும் அபாயங்களை நமக்கு உணர்த்திவிட்டுச் சென்றிருக்கின்றன.
- வெப்பநிலை உயர்வு மட்டுமே கவலை அளிக்கக்கூடிய செய்தியல்ல. அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் புயல், வெள்ளம், வறட்சி போன்றவற்றின் தாக்கங்களை உலகின் பெரும்பகுதி நாடுகள் உணர்ந்திருக்கின்றன. காலநிலை மாற்றத்தை சமாளிக்காமல் நிலத்தை மீட்டெடுப்பது என்பது நிரந்தர தீர்வாக அமையாது.
மீட்டெடுக்கும் வழி:
- ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அறிக்கையின்படி, மறுசீரமைப்பில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சுமார் 30 ரூபாய் அளவிற்குச் சுற்றுச்சூழல் சேவைகளாக இயற்கை நமக்குத் திரும்ப அளிக்கிறது. அது மட்டுமன்றி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வறுமையைக் குறைக்கின்றன.
- தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை, தாக்கங்களைக் குறைகின்றன.மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வளிமண்டலக் கரியமிலவாயு கிரகித்தலை அதிகரிக்கின்றன, காலநிலை மாற்றத்தைக் குறைக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக உலகின் மிக முக்கியமான 15 சதவீத நிலப்பரப்பை மீட்டெடுத்தாலே, உயிரினங்களின் அழிவில் 60 சதவீதம்வரை நாம் தவிர்க்க முடியும்.
- இந்தியாவில் சுமார் 86 லட்சம் ஏக்கர் அளவிற்கு பாழ்பட்ட நிலங்கள் உள்ளதாக அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு நில மறுசீரமைப்புத் திட்டங்களின் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் அவற்றை மீட்டெடுப்பதாக ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாடுகளில் இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. நகர்ப்புறம்-கிராமப்புறங்களில் உள்ள மத்திய-மாநில அரசுத் துறைகளுக்குச் சொந்தமான நிலங்களில் வனப்பரப்பு-மரங்களின் பரப்பை அதிகரிக்க பல்வேறு காடு வளர்ப்பு-மறுசீரமைப்புத் திட்டங்களை இந்திய அரசு-மாநில அரசாங்கங்கள் தொடங்கியுள்ளன.
- இவற்றைத் திறம்படச் செய்து முடித்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும், அவ்வாறு செய்யும்போதுதான் பாரிஸ் காலநிலை மாநாட்டில் மத்திய அரசு முன்மொழிந்தபடி தேசிய அளவில்நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளாக 2030ஆம்ஆண்டிற்குள் சுமார் 2.5 முதல் 3 பில்லியன்டன் வரையிலான கரியமில வாயுவைக் கிரகித்து மரங்களில் நிலைநிறுத்த முடியும்.
- இந்த இலக்குகள் - உறுதிமொழிகளை நிறைவேற்ற, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பற்றிய அறிவியல் புரிதல், நிலங்கள் பாதிக்கப் பட்டதன் தன்மைக்கேற்ப மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றின் தரநிலைகள் போன்ற விவரங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். அப்போதுதான் இந்தியா போன்ற பல்வேறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்டுள்ள நாட்டில் சீரழிந்த நிலங்களை மீட்டெடுப்பதற்கான சாத்தியம் அதிகரிக்கும்.
தமிழ்நாட்டின் முன்மாதிரி:
- கடந்த சில ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தைத் தணிப்பதில் தமிழ்நாடு அரசாங்கத்தின் முக்கியப் பணிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. காலநிலை மாற்றத்தினால் தமிழ்நாடு எதிர்கொள்ளும் பல்வேறு விதமான சேதங்களில் இருந்து மக்களையும் இயற்கைச் சூழலையும் காப்பாற்ற இந்தத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் காலநிலை மீள்தன்மை-பசுங்குடில் வாயுக்களை நிகர-பூஜ்ஜிய உமிழ்வை நோக்கிக் கொண்டுசெல்வது அவசியமாகும். தமிழகத்தின் லட்சிய முயற்சிகளான பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், தமிழ்நாடு சதுப்பு நிலப் பாதுகாப்பு இயக்கம் போன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்த இலக்கை அடையமுடியும்.
- மிகப்பெரிய அளவிலான காடு வளர்ப்பு மூலம் ஆண்டுதோறும் சுமார் 20 முதல் 25 மில்லியன் டன் கரியமில வாயுவைக் கிரகித்துக்கொள்ள முடியும். அரசு நடவடிக்கைகளுடன், தனியார் பங்கேற்பையும் அதிகரிக்க வேண்டும், இதனால் காலநிலை மாற்றத்தைக் குறைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் அடைய முடியும்.
- எனவே அரசாங்கத்தின் முயற்சிகளில், வணிகம் - தொழில் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல், வறட்சியைத் தடுக்கும் பணிகளில் தீவிர கவனத்தைச் செலுத்தித் தங்களின் தலைமைப்பண்புகளை வெளிக்காட்ட வேண்டிய தருணம் இது.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 06 – 2024)