TNPSC Thervupettagam

சுலபமாக ஒரிகாமியைக் கற்கலாம்

January 26 , 2024 214 days 194 0
  • காகிதங்களை மடித்து விதவிதமாக வடிவங்கள் செய்யும் ஒரு கலை ஒரிகாமி. ஜப்பானில் தோன்றிய இந்தக் கலை உலக அளவில் பிரபலமானது. ஒரிகாமி மூலம் விலங்குகள், பறவைகள், ரோபாட் எனக் கற்பனைக்கு ஏற்ப வடிவங்களை, காகிதத்தை வெட்டாமல் உருவாக்கலாம். கணிதத்தையும் அறிவியலையும் கற்பிக்கப் பயன்படுத்தும் இந்தக் கலையை எளிமையான முறையில் கற்றுத்தருகிறதுஒரிஜிஎன்கிற செயலி.

விதவிதமான உருவங்கள்

  • கூகுளின்பிளேஸ்டோர்தளத்திலிருந்துஒரிஜிசெயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்து உள்ளே நுழைந்தவுடன் ஆயுதம், விமானம், கப்பல், வாகனம், ரோபாட், விலங்கு, பூ எனப் பல தலைப்புகள் முகப்புப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
  • இதில் ஒவ்வொரு தலைப்பின் கீழும் பத்துக்கும் மேற்பட்ட ஒரிகாமி டிசைன்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் விருப்பமான டிசைனைத் தேர்வுசெய்து, ஒரிகாமி செய்யப் பழகலாம். ஒரிகாமி செய்ய கசங்காத தாள்கள் மட்டுமே தேவை.
  • ஓர் உருவத்தைத் தேர்வு செய்து, அதன் செயல்முறை விளக்கங்களை ஒவ்வொன்றாகப் பின்பற்றினால், நீங்கள் விரும்பும் ஒரிகாமி தயார். எங்கு, எப்படித் தாள்களை மடிக்க வேண்டும் என்று ஒளிப்படத்துடன் கூடிய விளக்கங்கள் திரையில் காட்டப்படுவதால் குழப்பமின்றி உருவத்தைச் செய்து முடித்துவிடலாம். தவறாகத் தாள்களை மடித்துவிட்டால், மீண்டும் முந்தைய மடிப்பு எப்படி வந்தது எனப் பின்னோக்கிச் சென்று, சரியாகச் செய்து பழகலாம்.
  • ஆயுதம் என்ற தலைப்பில் சுத்தியல், அம்பு, கத்தி; வாகனம் என்பதன் கீழ் பேருந்து, டேங்கர், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள்; ரூபிக், சாமுராய், நோவா போன்ற ரோபாட்கள்; பூனை, நாய், முயல் போன்ற விலங்குகள்; மல்லிகை, சூரியகாந்தி போன்ற பூக்கள் எனப் பல உருவங்களைத் தயாரிப்பதற்கான விளக்கங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

நல்ல பொழுதுபோக்கு

  • ஒரிகாமி கலையைக் கற்றுக்கொண்டு காலப்போக்கில் நீங்களே புதிய உருவங்களை உருவாக்கலாம். எங்கும் எப்போதும் எளிமையான முறையில் செய்யக்கூடிய கலை என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் இக்கலையைப் பழகலாம்.
  • பள்ளி முடித்து வீடு திரும்பியவுடன், நெடுந்தூரப் பயணத்தின்போது, பணி இடைவெளியின்போது என எந்த நேரத்திலும் ஒரிகாமியைச் செய்து பார்க்கலாம். இது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருப்பது மட்டுமல்ல, மாணவர்கள் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களைக் கற்கவும் உதவும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
  • ஒரிகாமியால் உருவாக்கப்படும் காகித பொம்மைகளைக் கொண்டு மாணவர்கள் கதைசொல்லியும் பழகலாம். சுயமாக உருவாக்கும் ஒரிகாமி பொம்மைகளை வீட்டு அலமாரியில் காட்சிப்படுத்தலாம். எங்கும் கையோடு எடுத்துச் செல்லலாம். வண்ணத்தாள்களில் ஒரிகாமி உருவங்களைச் செய்யும்போது இன்னும் அழகாகக் காட்சி அளிக்கும்.
  • எந்நேரமும் திறன்பேசியும் கையுமாகச் சுற்றுவோருக்கு இந்த ஒரிகாமி கலை, அமைதியையும் மனநிறைவையும் தரக்கூடிய ஒரு மாற்றாக அமையலாம். ஒரிகாமி கலையைப் பயில ஆர்வம் இருப்பவர்கள்ஒரிஜிசெயலியின் மூலம் புதிய உருவங்களைத் தயாரிக்கத் தொடங்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories