சூப்பர் கம்ப்யூட்டர் உலகில் இந்தியா!
- கணினி இல்லாத உலகை இன்று கற்பனை கூட செய்ய இயலாது. அதைப்போல, சூப்பர் கம்ப்யூட்டர் எனப்படும் மீதிறன் கணினி இல்லாத அறிவியல் வளர்ச்சியை நினைத்துப் பார்க்கவே இயலாது. இதற்கான சிந்தனை வித்து அமெரிக்காவில் 1929-இல் உருவானாலும், 1950-களில் தான் இதற்கான முயற்சிகள் வேகமெடுத்தன.
- அமெரிக்க பல்கலைக்கழகங்களும் ஐபிஎம் போன்ற தொழில் நிறுவனங்களும் மேற்கொண்ட ஆரம்பகால ஆராய்ச்சிகள் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணித்தன. எனினும், 1964இல் அமெரிக்க பொறியாளர் சீமோர் ரோஜர் கிரே உருவாக்கிய "சிடிசி-6600' தான் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் என்ற பெருமையைப் பெற்றது. அதன் அதிவேக இயக்கம் விஞ்ஞான உலகை பிரமிப்பில் ஆழ்த்தியது.
- இதையடுத்து, வல்லரசுகள் சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கின.
- ஆய்வுக்கூடச் சோதனைகளில் கிடைக்கும் முடிவுகளை, சோதனை செய்யாமலே கணினியில் செய்யப்படும் கணித மாதிரிகளால் பெறுவது கணினிசார் அறிவியலாகும். இத்துறையிலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், கோட்பாட்டு கணினி அறிவியல், குவான்டம் இயற்பியல், மூலக்கூறு இயக்கவியல், மருத்துவம், அதிவேகத் தேடல், காலநிலை ஆராய்ச்சி, தரவுப் பகுப்பாய்வு உள்ளிட்ட பயன்பாடுகளிலும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் உச்சங்களை எட்டியுள்ளன.
- இப்போது சூப்பர் கம்ப்யூட்டர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக "எக்சோஸ்கேல் கம்ப்யூட்டிங்' எனப்படும் அதிமீதிறன் கணினிகள் உருவாக்கப்படுகின்றன. கடந்த 2022-இல் உலகின் முதல் எக்சோஸ்கேல் கணினியாக, அமெரிக்காவின் "ஃபிரான்டியர்' உருவாக்கப்பட்டது.
- இந்தத் துறையில் இந்தியா 1980-களுக்குப் பிறகே கவனம் கொடுக்கத் தொடங்கியது. தமிழகத்தைச் சார்ந்த கணினி விஞ்ஞானி ரங்கசாமி நரசிம்மன் (1926 - 2007) இத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். 1975-இல் தில்லியில் இவர் நிறுவிய அரசு நிறுவனமான சிஎம்சி, கணினி அறிவியலில் இந்தியாவின் முதல் துணிச்சலான முயற்சி.
- நமது விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு 1970-களில் வல்லரசு நாடுகள் தடையாக இருந்தன. அதுபோலவே, சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பிலும் அவை பல இடையூறுகளைச் செய்தன. அதையடுத்து, மின்னணுவியல் ஆணையத்தில் கணினி விஞ்ஞானியாகப் பணியாற்றிய விஜய் பாண்டுரங் பட்கரிடம், சுதேசித் தொழில்நுட்பத்துடன் சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. அவரது தலைமையில் மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையம் (சி-டாக்), 1988-இல் புணேயில் தொடங்கப்பட்டது. அதில் திறமையுள்ள இளைஞர்கள் பலர் பணியாற்றத் தொடங்கினர்.
- அதன் விளைவாக, 1991-இல் இந்தியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரான "பரம் 8000' உருவானது. அதையடுத்து பரம் வரிசையில், பரம் 10000, பத்மா, யுவா, பிரம்மா, சிúரஷ்டா, நீல், ஸ்மிருதி, யுக்தி உள்ளிட்ட மேலும் 30 சூப்பர் கம்ப்யூட்டர்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன.
- உலக அளவில் மிகவும் குறைந்த செலவில் தயாரிக்கப்படுபவை என்பதால், இவை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி உள்ளன. இன்று உலக நாடுகள் பலவற்றில் 51 பரம் கம்ப்யூட்டர்கள் இயங்குகின்றன. இதனை ஓர் அறிவு வர்த்தகமாகவே விஜய் பட்கர் வளர்த்தெடுத்துள்ளார். இவரை "இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்களின் தந்தை' என்று நாடு கொண்டாடுகிறது.
- சூப்பர் கம்ப்யூட்டர்களின் தரவு தேக்கும் திறன் (டெரா பைட்ஸ்), செயல்வேகம் (பீட்டா ஃபிளாப்ஸ்) ஆகியவற்றின் அடிப்படையில் தர வரிசை உருவாக்கப்படுகிறது. இந்தியாவின் 4 சூப்பர் கம்ப்யூட்டர்கள் மட்டுமே (ஐராவத்-75, பரம் சித்தி -163, பிரத்யுஷ்-201, மிஹிர்-354) இதற்குத் தகுதி பெறுகின்றன. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகியவை இந்த வரிசையில் முன்னிலையில் உள்ளன. இந்த வகையில் உலகின் 20-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
- 2015-இல் இந்திய அரசு உருவாக்கிய தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் மிஷன் (என்எஸ்எம்), மிக விûரவில் நாடு முழுவதிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 70 சூப்பர் கம்ப்யூட்டர்களை நிறுவும் இலக்குடன் பணிபுரிகிறது. உயர்திறன் மிகுந்த 22 சூப்பர் கம்ப்யூட்டர்கள் இப்போது நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இவற்றை இணைத்து தேசிய அறிவு வலைப்பின்னலை (என்கேஎன்) இந்திய அரசு அமைத்துள்ளது.
- இதன் அண்மைக்காலப் பரிசுதான் "பரம் ருத்ரா'. கடந்த செப். 26-இல் 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை நாட்டிற்கு அர்ப்பணித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இவை முறையே விண்வெளி ஆய்வு, அணுவியல் ஆய்வு, அண்டவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்பட உள்ளன.
- இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர்கள் மூன்று அம்சங்களில் உலகை வியப்பில் ஆழத்துகின்றன. முதலாவதாக, பிற நாடுகளின் தயவில்லாமல், முழுவதும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை இவை. அடுத்ததாக, உலக அளவில் இதற்கு ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கில் இந்தியா இதனைச் சாதித்திருக்கிறது. மூன்றாவதாக, இந்த ஞானத்தேடலின் பயனை பிற நாடுகளுக்கு எந்தத் தடையுமின்றி விநியோகிப்பது.
- உலக நாடுகள் பலவற்றில் சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களில் இந்தியர்கள் பணி புரிந்தாலும், இந்தியா இத்துறையில் தன்னிறைவு அடைவதற்காக தாய்நாட்டிலேயே உழைத்த ஆயிரக்கணக்கான இளம் விஞ்ஞானிகளால்தான் இது சாத்தியமாகி இருக்கிறது.
- இந்த நவீன உலகில் அறிவுசார் சமூகமே வெல்லும். அந்த வகையில், எந்த வல்லரசு நாட்டிற்கும் இந்தியா சளைத்ததல்ல என்பதை நமது சூப்பர் கம்ப்யூட்டர்கள் உலகிற்குப் பறைசாற்றி வருகின்றன எனில் மிகையில்லை.
நன்றி: தினமணி (11 – 10 – 2024)