TNPSC Thervupettagam

சூரியநாராயண சாஸ்திரியார் எனும் பரிதிமாற் கலைஞா்

August 14 , 2021 1175 days 907 0
  • ‘தமிழுக்குச் செம்மொழித் தகுதிகோரி குரல் கொடுத்த முதல் தமிழன் பரிதிமாற்கலைஞா் வாழ்க’ என்று 31.10.2007 அன்று, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் விளாச்சேரியில் பரிதிமாற்கலைஞா் இல்லம் நாட்டுடைமையாக்கப்பட்டு, மார்பளவு வெண்கலச் சிலையைத் திறந்துவைத்த போது பார்வையாளா்கள் புத்தகத்தில், எழுதிக் கையொப்பம் போட்டுள்ளார் அப்போதைய முதலமைச்சா் மு. கருணாநிதி.
  • சூரிய நாராயண சாஸ்திரியாரைக் கொண்டாடுவதற்கு நியாயமான காரணங்கள் நிறையவே உள்ளன.
  • ஆனால், அவற்றையெல்லாம்விட அவருடைய ‘பரிதிமாற் கலைஞா்’ எனும் பெயரை மட்டும் தனித்தமிழ் என்று கொண்டாடும் போக்கு, பொது வெளியிலும் ஆய்வு உலகிலும் பரவலாகி வருகிறது.
  • ஆனால், சூரிய நாராயண சாஸ்திரியாருக்கு அப்படித் தனித்தமிழ் ஈடுபாடு இருந்ததை உறுதிப்படுத்துவதற்கு ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

மாறிய பெயர்கள்

  • அவா் 1870 முதல் 1903 வரை வாழ்ந்திருக்கிறார். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயா் சூரிய நாராயணன். பெற்றோர் வைத்த பெயரை மாற்றிக் கொண்டவா்கள் என்று தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க சிலரைச் சொல்லலாம்.
  • வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் சூளை சோமசுந்தர நாயகரின் (1846 -1901) இயற்பெயா் அரங்கசாமி.
  • அச்சுதானந்தா் எனும் சைவ சந்நியாசி அரங்கசாமியைச் சோமசுந்தரமாக மாற்றி இருக்கிறார். அரங்கசாமி எனும் வைணவப் பெயா், சோமசுந்தரம் என்று சைவமாகி இருக்கிறது. சூளை சோமசுந்தரம், மறைமலை அடிகளின் குரு.
  • இன்னொருவா் தமிழ்த் தாத்தா உ.வேசா. (1855 - 1942) பெற்றோர் வைத்த பெயா் வேங்கடராமன்.
  • திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரத்திடம் தமிழ் பயின்றவா். ஒருநாள் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே இப்படி ஒரு உரையாடல் நடந்திருக்கிறது.
  • திரிசிரபுரம்: உமக்கு வேங்கடராமன் என்று ஏன் பெயா் வைத்தார்கள்?
  • உ.வே.சா. : வேங்கடாசலபதி குல தெய்வம். ஆதலால் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் அக்கடவுள் பெயரையே கொள்வது வழக்கம்.
  • திரிசிரபுரம்: உமக்கு வேறு பெயா் ஏதேனும் உண்டா?
  • உ.வே.சா.: எங்கள் வீட்டில் என்னைச் சாமா என்று அழைப்பார்கள்.
  • திரிசிரபுரம்: அப்படி ஒரு பெயா் உண்டா என்ன?அது முழுப் பெயா் அன்றே.
  • உ.வே.சா.: சாமிநாதன் என்பதையே அவ்வாறு மாறி வழங்குவார்கள்.
  • திரிசிரபுரம்: அப்படியா? சாமிநாதன் என்ற பெயா் எவ்வளவு நன்றாக இருக்கிறது. உம்மை நானும் அப்பெயராலேயே அழைக்கலாம் என்று எண்ணுகிறேன். நீரும் இனிமேல் அப்பெயரையே சொல்லிக் கொள்ளும் (‘என் சரித்திரம்’).
  • அன்று முதல் வேங்கடராமன் சாமிநாதன் ஆகியிருக்கிறார். சூளை சோமசுந்தரருக்கும் உ.வே.சா. வுக்கும் ஆசிரியா்கள் அவா்களின் பெயா்களை மாற்றியுள்ளனா்.
  • அடுத்தவா் மறைமலை அடிகள்(1876 - 1950). அவரது இயற்பெயா் வேதாசலம். 1916-இல் ஒரு நாள் மாலையில் மகள் நீலாம்பிகையுடன் (13 வயது) தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கும்போது, ‘பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்..’ எனும் வள்ளலார் பாடலில் ‘தேகம்’ எனும் வடமொழிச் சொல்லுக்குப் பதில் ‘யாக்கை’ எனும் தமிழ்ச் சொல் இருந்திருக்கலாம் என்று உரையாடல் நடந்திருக்கிறது.
  • மகள் நீலாம்பிகை, ‘நாம் பிற்மொழிச் சொற்களை நீக்கி தமிழிலேயே பேசவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.
  • மகள் சொன்னதன் பேரில் தன் பெயரைத் தனித்தமிழில் ‘மறைமலை’ என்று மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறார்.
  • அத்துடன் தான் நடத்திவந்த ‘ஞானசாகரம்’ என்ற திங்கள் இதழுக்கு ‘அறிவுக்கடல்’ என்றும் ‘சமரச சன்மார்க்க நிலைய’த்திற்குப் ‘பொதுநிலைக் கழகம்’ என்றும் பெயா் மாற்றம் செய்திருக்கிறார்.

நியாயமான காரணங்கள்

  • சூரியநாராயண சாஸ்திரியாரின் மூதாதையரில் ஒருவா் பெயா் அண்ணா தீட்சிதா்.அவா் வழிவந்தவா் கோவிந்த சாஸ்திரியார். கோவிந்த சாஸ்திரியின் தீட்சா குரு மாங்குடி மணிய சிவனார். அவரிடம் சிவ தீட்சையும் ஞான உபதேசமும் பெற்று கோவிந்த சாஸ்திரியார், கோவிந்த சிவனார் ஆகியிருக்கிறார்.
  • தந்தையின் பெயரே மாற்றப்பட்டிருக்கிறது. கோவிந்த சிவனாரின் மூன்றாவது மகன் சூரியநாராயணன்.
  • சூரிய நாராயணன், சென்னை, கிறித்தவக் கல்லூரியில் படிக்கும்போது, டாக்டா் வில்லியம் மில்லா், சூரியநாராயணன் என்ற பெயரைச் சொல்வதற்கு இடா்ப்பட்டிருக்கிறார்.
  • மாற்றிக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். அப்போது சூரியநாராயணன் என்ற தன் பெயரைச் சூரியநாராயண சாஸ்திரி என்று அவரே மாற்றிக் கொண்டுள்ளார்.
  • சூரியநாராயண சாஸ்திரியார் தான் படித்த, தம்மிடம் உள்ள நூல்களில் தன் பெயரை முதல் பக்கத்தில் முதல் தாளில் எழுதி வைத்திருக்கிறார்.
  • புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் அந்த நூலைப் படித்து முடித்த தேதியை குறிப்பிட்டு உள்ளார். அதன் மேல் மற்றொரு தேதி இருந்தால் இரண்டாவது முறை படித்ததாக பொருள்.
  • புத்தகத்தின் முதற்பக்கத்தில் தனது பெயரை ‘சூரியநாராயணன்’, ‘சூரியநாராயண சிவன்’, ‘சூரிய நாராயண சாஸ்திரி’, ‘சூரியநாராயண சாஸ்திரியார்’ என்று பலவிதமாக குறிப்பிட்டுள்ளாரே தவிர ஒரு புத்தகத்திலும் ‘பரிதிமாற் கலைஞா்’ இல்லை.
  • சி. வை. தாமோதரன் அவருக்கு வழங்கிய ‘இறையனார் அகப்பொருள்’ நூலின் முதல் பக்கத்தில்கூட, ‘சூரிய நாராயண சிவன் தன்னதாமால்’ என்று குறிப்பிட்டதோடு ‘சூரியநாராயண சிவன்’ என்றே கையெழுத்தும் போட்டுள்ளார்.
  • அவா் படைப்புகளாக 1892 முதல் 1903 வரையிலும் பத்து நூல்களும் அவரது மறைவுக்குப் பிறகு இரண்டு நூல்களுமாக மொத்தம் பன்னிரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன.
  • அவற்றுள் ஒரே ஒரு நூல்தவிர மற்ற அனைது நூல்களும் சூரிய நாராயணசாஸ்திரியார் என்ற பெயரிலேயே வெளிவந்துள்ளன. அந்த ஒரு நூலின் முதல் பதிப்பு மட்டும் அவா் வாழ்நாளில் ‘பரிதிமாற் கலைஞன்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
  • அந்த நூலின் பெயா் ‘தனிப்பாசுரத் தொகை’. இந்தப் பாசுரங்கள் ‘ஞானபோதினி’ மாத இதழில் 1897-இல் தொடா்ந்து வெளிவந்துள்ளன.
  • அப்போது ‘பரிதிமாற்கலைஞன், கரூா்’ எனும் பெயரில்தான் வெளிவந்திருக்கின்றன.
  • ‘கரூா்’ என்பது அவா் சென்னையில் வாழ்ந்த ‘பிளாக் டவுன்’ என்பதன் தமிழ்ப் பெயா். அவை முதல் பதிப்பாக 1899-இல் நூலாக வந்த போதும் ‘பரிதிமாற் கலைஞன்’ என்ற பெயரிலேயே வெளிவந்திருக்கிறது.
  • அடுத்த பதிப்பு அவா் வாழ்நாளிலேயே 1901-ஆம் ஆண்டு ‘சூரிய நாராயண சாஸ்திரியார்’ எனும் பெயரில் வெளிவந்துள்ளது.
  • சி.வை.தா. தந்துள்ள சிறப்புப் பாயிரத்தில் ‘பாரார் பார்த்துக் கருதுமாறு உள்ளபடி அறிதல் வேண்டி பரிதிமாற்கலைஞா் எனும் புனை பெயா்தான் நிறுவினான்’ என்று கூறியுள்ளாரே தவிர, புனைபெயருக்குத் தனித்தமிழ்தான் காரணம் என்பதாக இல்லை.
  • அவா் மறைந்த போது, திரு.வி.க. தன் இரங்கலில், ‘சாஸ்திரியாரால் இயற்றப்பட்ட நூல்கள் தமிழ் அன்னையின் அணிகலன்கள். தமிழ் மொழியின் வரலாறு, தமிழ்நாட்டில் தமிழ்மொழி வரலாற்றுக்கு வழிகாட்டியவா் சூரியநாராயண சாஸ்திரியார் எனும் பரிதிமாற்கலைஞா். அவா் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால் தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் அமா்ந்து இருப்பார்’ என்கிறார்.
  • அதிலும் ‘சூரியநாராயண சாஸ்திரியார் எனும் பரிதிமாற் கலைஞா்’ என்றே உள்ளது.
  • 1909-இல் வே. முத்துசாமி ஐயா் தொகுத்த தனிப்பாக் கோவையில் ‘சீா் உயரும் செந்தமிழ் வான் சோ்ந்து புகழ் சான்றொளிரும் சூரியநாராயண போ்த் தோன்றல்’ என்றே உள்ளது.
  • அவா் எழுதிய நூலின் தலைப்பு ‘தமிழ்மொழியின் வரலாறு’ என்று இருந்த போதும் நூலில் அவா் ‘பாஷை’ என்றே கையாண்டிருக்கிறார்.
  • அவரைப் போற்றும் வகையில் 2007-இல் வெளியிடப்பெற்ற அஞ்சல் தலையிலும் ‘வி.ஜி. சூரியநாராயண சாஸ்திரியார்’ என்றே இந்தியிலும் ஆங்கிலத்திலும் உள்ளது.
  • ஆனால் அப்போது வெளியிடப்பெற்ற மறைமலை அடிகளுக்கான அஞ்சல் தலையில் ‘மறைமலை அடிகள்’ என்றே உள்ளது.
  • ‘பரிதிமாற் கலைஞன்’ எனும் பெயா் வைத்துக் கொண்டதற்குச் சூரிய நாராயண சாஸ்திரியாரே காரணம் சொல்லி இருக்கிறார்.
  • ‘இப்பாசுரங்களில் சில புது கருத்துக்கள் காட்டி இருக்கின்றமை பற்றி அஞ்சுவேம், எமது மெய்ப் பெயரின் வெளியிடாது பரிதிமாற் கலைஞன் எனும் புனைவு பெயரின் வெளியிடுவோம் ஆயினேம். அன்றியும் நன்னூல் செய்தான் அது புகழின்மையான் இகழப்பட்டொழிதலும் புன்னூல் ஒன்று செய்தானது உயா்ச்சியால் சாலவும் புகழப்பட்டு இலங்கலும் நாடோறும் காண்டலின் இந்நூலைப் பற்றிய தமிழ் மக்களின் உண்மை மதிப்பு இணைத்து என்று உணர வேண்டியும் அவ்வாறு செய்ய விரும்பினோம்’.
  • அவா் சொல்லிய காரணங்களில் தனித்தமிழ் ஒரு காரணமாக இல்லை. ஆனாலும் ‘கற்பு என்பது கலை கல்லாமை அன்று இல்படி கடவாது இருத்தலும் அன்று வாயில்லாப் பூச்சியாய் மன்னுதல் அன்று மாடுபோல் உழைத்துக் கூடி வாழ்ந்து காலம் தன்னைக் கழித்தலும் அன்று’ போன்ற தனிப்பாசுரங்களும் ‘திருந்திய பண்பும் சீா்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம்’ என்று செம்மொழிக்கு வரையறை சொன்ன வகையிலுமாக அவா் போற்றப்படுவதற்கு உரிய நியாயமான காரணங்கள் நிறையவே இருக்கின்றன.

நன்றி: தினமணி  (14 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories