TNPSC Thervupettagam

சூழல் மரபணு: பல்லுயிர்களின் பாதுகாவலன்!

September 28 , 2021 1038 days 555 0
  • உலகில் அதிகரித்துவரும் மக்கள் பெருக்கமும், நகரமயமாதலும், தொழிற்புரட்சி விளைவித்த சூழல் கேடுகளும் பல்லுயிர்களின் வளத்துக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
  • மனித இனம் பிழைத்திருக்க நாம் தந்திருக்கும் விலை இதுவரை 5 லட்சம் உயிரினங்கள் என்கிறது, சூழலியல் சேவைகளின் அறிவியல் கொள்கைகளுக்கான சர்வதேச அமைப்பு நடத்திய ஓர் ஆய்வு.
  • இந்தப் போக்கு நீடிக்குமானால், மனித நலத்துக்கும் ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆகவே, ‘பல்லுயிர்ப் பாதுகாப்பு’ குறித்த விழிப்புணர்வு விவாதங்களும் கருத்தரங்குகளும் உலக அளவில் நடைபெற்றுவருகின்றன.
  • அவற்றின் நீட்சியாக, பல்லுயிர்களைக் காக்கவும் கண்காணிக்கவும் நவீன அறிவியல் உத்திகளைப் பயன்படுத்த உயிரியலர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வழியில் அவர்களுக்கு உதவ வந்திருக்கிறது, ‘சூழல் மரபணுச் சங்கிலி’ (environmental DNA - eDNA). இதற்குள் செல்வதற்கு முன்னால் சில அடிப்படைகள்.

உயிரின் ரகசியம்

  • உலக உயிரினங்களை மனித இனமா, விலங்கா, புல்லா, பூண்டா என இனம்காண உடல் செல்களில் உள்ள மரபணுக்கள் (ஜீன்கள்) உதவுகின்றன. ஒவ்வோர் உயிரினத்துக்கும் அதனதன் மரபணுக்கள் தனித்தன்மையோடு இருக்கும்.
  • குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் அவை இருக்கும்; ‘மரபணுச் சங்கிலி’யில் (டிஎன்ஏ) புதைந்திருக்கும். ‘மரபிழை’யில் (குரோமோசோம்) குடியிருக்கும். இந்த மூன்றையும் தொகுத்தால் கிடைப்பது, ‘மரபணுத் தொகுதி’ (ஜீனோம்).
  • மரபணுத் தொகுதி ஒரு ‘புத்தகம்’ என்றால், ‘குரோமோசோம்’கள் அதன் அத்தியாயங்கள்; ‘டிஎன்ஏ’க்கள் பாராக்கள்; ‘ஜீன்கள்’ எழுத்துகள். ஓர் உயிரினத்தின் ரகசியத்தைச் சொல்லும் ‘மரபணுத் தொகுதி’ புத்தகத்தைக் கண்டுபிடித்ததுதான் உயிரியல் ஆராய்ச்சிகளில் உச்சம் தொட்ட மைல்கல்.
  • அமெரிக்காவின் தலைமையில் 6 நாடுகள் ஒன்றிணைந்து, ‘மனித மரபணுத் தொகுப்புத் திட்டம்’ (The Human Genome Project) எனும் பெயரில் 1990-ல் தொடங்கப்பட்டு 2003-ல் முடிவடைந்தது.
  • இதன் நீட்சியாக மரபணுப் பகுப்பாய்வுப் பணிகள் (Genome sequencing) தொடங்கப்பட்டன. இவற்றைக் கொண்டு மனித இனத்தின் கலப்பு, பரவல் குறித்து மட்டுமல்லாமல், பரந்து பட்ட பல்லுயிர்களின் தொடக்கம், உயிரின விரிவாக்கம், வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றையும் சித்திரப்படுத்த முடிந்தது.

சூழல் மரபணுவின் மகிமை

  • இதுவரை, பல்லுயிர்களை இனம்காண, அவற்றின் மாதிரிகளைச் சேகரிக்க அனுபவமிக்க சூழலியலர்களும், வகைப்பாட்டியலர்களும் (Taxonomists) தேவைப்பட்டனர். இவர்களால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே மாதிரிகளைச் சேகரிக்க முடிந்தது.
  • அதிலும் சொற்பமாகவே சேகரிக்க முடிந்தது. இதற்குப் பல வாரங்கள், மாதங்கள்கூட ஆகலாம். செலவும் அதிகம்.
  • உதாரணமாக, சுரங்கத் தொழில்களால் மீன்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைக் கணிக்க, சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கு வர்ஜீனியா நீர்நிலைகளில் நான்கில் மட்டுமே மாதிரிகளை எடுத்து ஆய்வுசெய்ததால், இந்த ஆய்வு முடிவுகளை உலகம் முழுமைக்குமான முடிவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
  • ஓர் உயிரினத்திலிருந்து மரபணுக்களை நேரடியாகப் பெறும் பழைய முறைகளில் இம்மாதிரியான குறைகள் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. தற்போது இந்தக் குறைகளைக் களையும் கருவியாக வந்திருக்கிறது, சூழல் மரபணுத் தொழில்நுட்பம்.
  • நீர், நிலம், காற்று, கடல், உலர்பனி, பனிக்கட்டி போன்றவற்றில் பெரும்பாலான உயிரினங்கள் தத்தம் செதில்கள், மூப்படைந்த தோல்கள், மலம், பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட உடல் கழிவுகளை வெளியிடுகின்றன.
  • இந்தக் கழிவுகளில் அந்தந்த உயிரினத்தின் மரபணுச் சரடுகள் இருக்கின்றன. இவற்றில் உள்ள மரபணுக்கள் ‘சூழல் மரபணுக்கள்’ எனப்படுகின்றன.
  • இந்தக் கழிவு மாதிரிகளைச் சேகரிக்க, வல்லுநர்கள் உதவி தேவையில்லை என்பது முக்கியமான அம்சம். உதவியாளர்களே எளிதாகச் சேகரித்துவிடுவார்கள்.
  • ஒரே நேரத்தில் பல இடங்களில் அதிக எண்ணிக்கையில் மாதிரிகளைச் சேகரிக்க முடியும். செலவும் சொற்பம். இந்த மாதிரிகளை ஆய்வகங்களில் பக்குவப்படுத்தி, செல்களைப் பிரித்தெடுத்து, மரபணுப் பகுப்பாய்வு செய்து, ஏற்கெனவே தயாரித்துள்ள மரபணுத் தொகுதியோடு ஒப்பீடு செய்து உயிரினங்களை இனம்காணலாம்.
  • ஓர் ஒப்பீட்டுக்குச் சொன்னால், நஞ்சருந்தி இறந்த ஒருவரின் உடலிலிருந்து நச்சுப் பொருளை எடுத்துப் பரிசோதிப்பதற்குப் பதிலாக, அந்த நபரின் வாந்தியைப் பரிசோதித்து, இறப்புக்குக் காரணம் கண்டுபிடிக்கும் வழிமுறைபோலவே சூழல் மரபணுத் தொழில்நுட்பமும்.
  • 1968-ல் அழிந்துபோனதாகக் கருதப்பட்ட பிரேசில் நாட்டின் தவளை இனம் மெகேலோஸியா பொகேன்ஸிஸ் (Megaelosia bocainensis) இன்னும் இருப்பதாகக் கடந்த ஆண்டில் இந்தத் தொழில்நுட்பத்தில் கண்டறியப்பட்டது.
  • ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தின் வனவிலங்கு ஆய்வாளர்கள் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கடல் ஆமைகளுக்கு ஏற்படும் ஃபைப்ரோபேப்பிலோமாடோஸிஸ் (Fibropapillomatosis) வகை புற்றுநோய்க் கட்டிகளுக்கு வைரஸ்தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • அண்மையில், கரோனா தொற்று காற்றில் பரவுகிறது என்பதை உறுதிசெய்ய சற்றே மாற்றியமைக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம் உதவியுள்ளது.

என்னென்ன நன்மைகள்?

  • சமீப காலமாக நன்னீர் உயிரிகள்தான் அதிவேகமாக அழிவைச் சந்திக்கின்றன. புள்ளிவிவரப்படி சொன்னால், இவற்றில் 4-ல் ஒன்று வீதம் அழிந்துவருகின்றன.
  • அந்தச் சிறப்பினங்களைச் சூழல் மரபணுத் தொழில்நுட்பம் மூலம் சுலபமாகக் கண்டறிந்து, அவற்றின் அழிவுக்குக் காரணம் அறிந்து, பாதுகாப்பு வழிமுறைகளைப் பரிந்துரைக்க முடியும்.
  • சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள எல்லாச் சிறப்பினங்களின் தொடக்கப் புள்ளிகளையும் புரிந்துகொண்டு, வரிசைப்படுத்தி ஆவணப்படுத்துவது எளிதாகிவிடும்.
  • புதிதாகத் தோன்றும் சிறப்பினங்களையும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களையும் கண்டுபிடித்துப் பாதுகாக்க முடியும்.
  • உயிரோடு உள்ள உயிரினங்களை மட்டுமில்லாமல் அழிந்துபோனவற்றையும் கண்டுபிடிப்பது இனிமேல் அதிகரிக்கும். மிகுந்த இடர்ப்பாடுள்ள இடங்களில் வாழும் உயிரினங்களை இதன் வழியில் அறிந்துகொள்வது சுலபம்.
  • விலங்கின ஆய்வுக்கூடங்கள் வழியாகத் தொற்றுக் கிருமிகள் தப்பி, மனிதருக்குப் பரவும் நிலைமை இதன் பலனால் ஒழியும். மனித ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் தரும் உயிரினங்களை இனம்கண்டு எச்சரிக்க முடியும்.
  • குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் அரிய உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சிகள் இனி பெருகும். ‘உணவுச்சங்கிலி’யில் உள்ள சிக்கலான அம்சங்களைப் புரிந்துகொண்டு சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் கட்டமைப்புகளை வலுப்படுத்த முடியும்.
  • ஆனாலும் ஒன்று, ‘சூழல் மரபணு’ எனும் பாதுகாவலனோடு நாம் ஒவ்வொருவரும் இயற்கைப் பாதுகாப்புக்கு முன்னத்தி ஏர் பிடிக்க வேண்டும். அப்போதுதான் பல்லுயிர்களுக்கு 100% பாதுகாப்பு உறுதிப்படும்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories