- கேரளப் பண்பாட்டில் கலந்திருக்கும் தமிழ் அடையாளங்களை இன்றும் தேட முடியும். முக்கியமாக கேரள நாட்டார் கலைகளின் பின்னணியாக உள்ளே சில இசைக் கருவிகளும் நெறிப்படுத்தப்பட்ட கலைகளின் பின்னணியாக உள்ள இசைக் கருவிகள் சிலவும் தமிழ் மண்ணுக்கு உரிமை உடையவை என்றும் இவை பண்டைய கேரளத்தில் வழக்கில் இருந்தவை என்றும் கூற முடியும்.
- தமிழகத்தின் ஒரு பகுதியாக இன்றைய கேரளப் பகுதி இருந்த காலகட்டத்தில் வழக்கில் இருந்த இசைக்கருவிகள் இன்றும் அங்குப் புழக்கத்தில் உள்ளன. இவை ஆரம்ப காலத் தமிழகத்திற்கு உரியவை என்கிறார் கேரள இசைக் கருவிகளை விரிவாக ஆராய்ந்த அறிஞர் எல்.எஸ்.ராஜகோபாலன் (சான்று: Temple Musical Instruements of Kerala, 2010). இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சேர நாட்டு இலக்கியமான சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட இசைக்கருவிகள் இன்றும் கேரளத்தில் வழக்கில் உள்ளன. இப்போதும் கேரளத்தில் வழக்கில் உள்ள இடக்கா, மத்தளம், உடுக்கை, திமிலை, மிளவு, பறை, துடி ஆகியன சில உதாரணங்கள்.
- கேரள நாட்டார் கலைகளுக்கும் கேரள நெறிப்படுத்தப்பட்ட கலைகளுக்கும் தொடர்பு உண்டு. தமிழக நாட்டார் கலைகளுக்குரிய இசைக் கருவிகள் நெறிப்படுத்தப்பட்ட கலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதைச் சாத்திரிய சங்கீதக்காரர்கள் ஒப்புக்கொள்வதில்லை.
- கேரளத்தின் அடையாளமான செண்டை என்ற இசைக்கருவியில் அடிக்கப்படும் அடி வகைகளில் பாண்டி மேளம் என்பதும் ஒன்று. இது மட்டும் கோயிலுக்கு வெளியே அடிக்கப்பட வேண்டும் என்பது மரபு. இதன் தாளக்கட்டு தமிழக இசை மரபுடன் தொடர்புடையது
- கேரள நாட்டார் இசைக் கருவிகள் என இலைத்தாளம், உடுக்கு, இடக்கா, அர மணி, ஒத்தக்குழல், கிண்கிணி, கிண்ணம், கொக்கரை, கோல் மணி, கொம்பு, கொம்பு வாடயம், குலுங்குழல், கோல்குடம், சங்கு, செண்டை, சுத்த மத்தளம், சிப்பளாக்கட்டை, செங்கிலை தாளம், சிலம்பு, துடி, திமிலை, தப்பு, நகரா, நந்துன்னி, பறை, பாணி, புள்ளுவன் குடம், புள்ளுவன் வீணை, மிளவு, வில், வீராணம் எனச் சிலவற்றைக் கூறலாம். இவற்றில் பல வைதீகக் கோயில்களிலும் வழக்கில் இருப்பவை. இந்த இசைக்கருவிகளில் இடக்கா, மிளவு, திமிலை, துடி, பறை, வில் ஆகிய இசைக் கருவிகளுக்குத் தமிழ் அடையாளம் உண்டு.
இடக்கா
- சில கருவிகளுக்கான தமிழ் அடையாளத்தை உதாரணமாகப் பார்க்கலாம். இடக்கா என்கிற கேரள இசைக்கருவி, பஞ்ச வாத்தியங்களில் ஒன்று. சோபன சங்கீத நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுவது இது; தெய்விக வாத்தியம்; மங்கல இசைக்கருவி. சிவனின் கையில் உள்ள துடி என்னும் இசைக்கருவியே இடக்கா என்பது ஒரு தொன்மம். இயக்கப்படாத காலத்தில் கருவறையின் முன் பகுதியில் தொங்கவிடப்பட வேண்டும் என்பது நியதி. ஒரு காலத்தில் கேரளத்தின் எல்லாக் கோயில்களிலும் அத்தாள பூசைகளிலும் (இரவு நேர பூசை)சோபன சங்கீதம் பாடப்பட்டபோதும் இடக்கா அடிக்கப்பட்டது. இன்று இந்த வழக்கம் குறைந்துவருகிறது. இதைத் தோளில் தொங்கவிட்டு நின்றபடி அடிப்பர். கூடியாட்டம், கதகளி, மோகினி ஆட்டம், கிருஷ்ணன் ஆட்டம் போன்ற கலைகளுக்கு உரிய கருவி இது. கதகளி நிகழ்வில் பெண் கதாபாத்திரம் வரும்போது இடக்காவைக் அடிப்பர். அப்போது செண்டை ஒலிக்காது.
- கூடியாட்டத்தில் மிளவு இசைக்கருவிக்கு உதவியாக இடக்கா அடிக்கப்படும். சோபன சங்கீதம் பாடப்படும்போது இதனுடன் இலைத்தாளம் அடிப்பதும் ஒரு மரபு. இந்த இசைக்கருவியில் இருந்து மென்மையான பல்வேறு சப்தங்களை உருவாக்க முடியும். வட கேரளத்தில் இது பற்றிய தொன்மம் நிறைய உண்டு.
- இடக்கா, உடுக்கு கருவியின் அமைப்பை ஒத்தது. இது 8 அல்லது 8.5 இஞ்ச் நீளமுடையது. இதன் உடல் பகுதி கருங்காலி அல்லது பலா மரத்தால் செய்யப்பட்டிருக்கும். இதன் இரண்டு புறவட்ட வடிவப் பகுதியில் மாட்டுத்தோல் பொருத்தப்பட்டிருக்கும். இந்த வட்டம் 4 முதல்- 4 1/2 இஞ்ச் விட்டம் உடையது. இந்த வட்டத்தில் உள்ள துளைகளும் கயிற்றால் பின்னப்பட்டிருக்கும் இடக்காவை வலது கையால் அடிப்பர். இந்த இசைக்கருவி பற்றி ராஜகோபாலன் “இது பழைய மலையாள இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. இதன் பெயர் தமிழ் மரபில் இருந்து வந்தது” என்கிறார். சாரங்கத்தேவரின் ‘சங்கீத ரத்னாகரம்’ என்கிற நூலில் ஹூகுக்கா, டாக்கா எனப் பல பெயர்களால் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழில் இடக்காவை, ஆவந்தி என்னும் பெயரால் குறிப்பிடுகின்றனர். சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையில் வரும் குயிலுவ மக்கள் (வரி 130) என்னும் சொல்லுக்கு அடியார்க்குநல்லார், அவர்கள் இடக்கா முதலிய இசைக்கருவிகளை இசைப்பவர் என்கிறார். இதே காதையில் ஆமந்திரிகை என்னும் இசைக்கருவியின் பெயருக்கு (வரி 143) இடக்கை எனப் பொருள் கொள்கிறார் அடியார்க்குநல்லார். அத்தோடு இது நின்று அடிக்கும் கருவி என்றும் குறிப்பிடுகிறார்.
திமிலை
- அதுபோல் திமிலை தமிழரின் பழமையான இசைக்கருவி. இப்போது இது கேரளத்திற்குரிய வாத்தியம் ஆகிவிட்டது. பஞ்ச வாத்தியங்களில் ஒன்றான இந்தக் கருவியின் ஓசையை ஓங்கார சப்தத்திற்குச் சமமாகக் கூறுகின்றனர். திமிலைக்குப் பாணி என்ற பெயர் உண்டு. என்றாலும் பாணி, திமிலியைவிடச் சற்று நீண்டது. இந்த இரண்டு கருவிகளும் கன்னியாகுமரி மாவட்டக் கோயில்கள் சிலவற்றில் இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் தாழ்குரல் தண்ணுமை என்பதற்கு உரைகூறும்போது அடியார்க்குநல்லார், பேரிகை முதலாக 31 இசைக் கருவிகளின் பெயர்களைச் சொல்கிறார். இவற்றில் திமிலையும் ஒன்று.
- பெரியபுராணத்தில் எறிபத்த நாயனார் புராணத்தில் ‘வியன் குடி திமிலை’ என வருகிறது (பாடல் 31). திமிலை நான்மறைசேர் திருப்பெருந்துறை எனத் திருவாசகம் கூறுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழில் திமிலை பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. தஞ்சை தில்லைத்தானம் கோயில் கல்வெட்டில் திமிலையின் பெயர் வருகிறது. முதல் ஆதித்த சோழன் காலம், பிற்காலச் சோழர் காலத்தில் திமிலை பக்க வாத்தியமாக இருந்திருக்கிறது. இதற்குக் சிற்பங்களில் சான்று உண்டு.
- திருப்புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் தூண் ஒன்றில் பெண் ஒருத்தி திமிலை அடிக்கும் சிற்பம் உள்ளது. தாராசுரம் கோயிலில் பஞ்ச வாத்தியமான பாணி (திமிலை) அடிக்கும் ஆண் சிற்பம் உள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தெற்கு மதில் சுவர் பாணி சிற்பம், திருவிடைமருதூர் மருதப்பெருமாள் கோயிலில் திமிலை அடிக்கும் பெண் சிற்பம் ஆகியவை குறிப்பிடத்தகுந்த சிற்பங்கள். தமிழகத்தின் இசைக்கருவி திமிலை என்பதற்கு இவை சான்றுகள். இது பற்றிய விரிவான ஆய்வு நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. கேரளத்தின் தமிழ் அடையாளம் குறித்த ஐயங்களுக்கு இம்மாதிரி ஆய்வுகள் விடையளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி: தி இந்து (14 – 05 – 2023)