- கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன கைக்குழந்தை கடத்தப்பட்டு, ஒரே நாளில் மீட்கப்பட்டது.
- மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் பதிவுகளிலிருந்து குழந்தையைக் கடத்தியவரை உடனடியாக அடையாளம் காண முடிந்தது.
- அதே மாவட்டத்தில், மருந்தகம் ஒன்றில் மருத்துவரின் பரிந்துரையின்றி தூக்க மாத்திரைகள் கேட்டு அரிவாளைக் காட்டிக் கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்களும் சிசிடிவி காட்சிப் பதிவுகளின் துணையோடு உடனடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
- உயிருக்கும் உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்கும் குற்றங்களையும் அக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களையும் கண்டறிவதில் சிசிடிவி காட்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன.
- குற்றவாளிகளைக் கண்டறிய உதவுவதோடு குற்றம் நடந்ததற்கான சாட்சியமாகவும் விளங்குகின்றன. இந்நிலையில், சென்னை பெருநகரக் காவல் துறையால் ஓர் இயக்கமாகவே முன்னெடுக்கப்பட்ட ‘மூன்றாவது கண்’ தமிழ்நாடு முழுவதும் விரிவுபெற வேண்டியது அவசியம்.
- சென்னை மாநகரத்தின் ஆணையராக நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன், அனைத்து பொதுக் கட்டிடங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதைக் கட்டாயமாக்கினார்.
- தன்னுடைய பணிக்காலத்தில் மாநகராட்சி எல்லைக்குள் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். இதன் உடனடி விளைவாக சங்கிலிப் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற வழிப்பறித் திருட்டுகள் கட்டுப்படுத்தப்பட்டன.
- சிசிடிவி கேமரா கண்காணிப்பு, குற்றங்களைக் கண்டறிய உதவுகிறது என்பதோடு குற்றங்கள் நடக்காமல் இருக்கவும் உதவுகிறது.
- சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு உள்ள பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
- சென்னையில் சிசிடிவி பொருத்துவதற்குக் காவல் துறை காட்டிவந்த தீவிர முனைப்பு கரோனா முன்தடுப்புப் பணிகளால் சற்றே குறைந்திருக்கிறது. மீண்டும் அது தீவிரம் பெற வேண்டும்.
- சிசிடிவி கண்காணிப்பு வலைப் பின்னலைப் பொறுத்தவரையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி அதனை முழுமையாகச் செயல்படுத்த முடியாது. அதற்கான செலவுகளைப் பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரையில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள வணிகர் சங்க அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஆகியவையும் சிசிடிவி பொருத்துவதற்கான செலவுகளை ஏற்றுள்ளன.
- சென்னைக்கு வெளியே மற்ற நகரங்களிலும் இத்தகைய அமைப்புகளின் உதவியோடு ‘மூன்றாவது கண்’ இயக்கத்தை விரிவுபடுத்த முடியும். உள்ளாட்சி அமைப்புகளும் இதில் பங்கெடுக்கலாம்.
- குற்றம் நடந்த பிறகு, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆராய்வது விசாரணையின் ஒரு பகுதியாகவே இன்று மாறிவிட்டது.
- அதே நேரத்தில், ஒவ்வொரு பகுதியிலும் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளைத் தொடர்ந்து கண்காணித்துவருவது குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கவும் உதவும்.
- சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதில் காட்டப்படும் வேகம், பழுதடைந்தவுடன் சரி செய்வதிலும் காட்டப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 - 10 - 2021)