TNPSC Thervupettagam

சென்னைப் பெருநகரத் தொழிற்சங்க வரலாறு

May 6 , 2023 617 days 449 0
  • இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் 1918இல் தோன்றிய சென்னைத் தொழிலாளர் சங்கம். இச்செய்தி இடம்பெறாத வரலாற்று நூல்கள் இருக்காது. ஆனால், இதற்குமேல் சென்னைத் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கம், அதன் போராட்டங்கள் பற்றிய நம்பகமான வரலாறு பல காலம் இல்லாமலிருந்தது. அக்குறையைப் போக்கியது தே.வீரராகவனின் ‘சென்னைப் பெருநகரத் தொழிற்சங்க வரலாறு’ (அலைகள் வெளியீட்டகம், 2003). இந்நூல் வீரராகவனின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் தமிழ் வடிவம்.
  • அக்காலத்து அரசாங்க ஆவணங்கள், அறிக்கைகள், காவல்துறைக் குறிப்புகள் மட்டுமல்லாமல் ‘தேசபக்தன்’, ‘நவசக்தி’, ‘ஜனசக்தி’, ‘நியூ இந்தியா’, ‘தி இந்து’ முதலான இதழ்களும் இந்த ஆய்வுக்கு ஆதாரமாக அமைந்திருந்தன. தொழிலாளர் இயக்கத்துக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட, ஈ.எல்.ஐயரை ஆசிரியராகக்கொண்ட, ‘சுதர்மா’ என்கிற ஆங்கில இதழை இந்த ஆராய்ச்சியின்போது வீரராகவன் கண்டெடுத்தார்.
  • இவற்றோடு நில்லாமல் சென்னைத் தொழிலாளர் இயக்கத்தின் மூலவர் எனத்தக்க கோ.செல்வபதி செட்டியார் முதல் ஸி.எஸ்.சுப்பிரமணியம், பி.ராமமூர்த்தி, கே.முருகேசன், ஏ.எஸ்.கே.ஐயங்கார், கஜபதி முதலான இயக்கத் தலைவர்களையும் நேரில் கண்டு தகவல்கள் திரட்டினார். பி.ஆர்.கே.சர்மா, ஈ.எல்.ஐயர் போன்ற தலைவர்களின் குடும்பங்களைச் சந்தித்துப் பல ஆவணங்களைப் பெற்றார்.
  • இந்த ஆராய்ச்சிக்காகச் சென்னையிலுள்ள நூலகங்கள் மட்டுமல்லாமல் புது டெல்லியில் இருக்கும் நேரு நினைவு நூலகம், தேசிய ஆவணக்காப்பகம், பி.சி.ஜோஷி ஆவணக்காப்பகம் போன்றவற்றையும் வீரராகவன் பயன்படுத்திக்கொண்டார்.
  • ஆதாரங்களை அரைகுறையாகவோ, முழுமையாகவோ திரட்டுவதே ஆராய்ச்சி என்னும் பாமரத்தனமான கருத்து தமிழுலகில் நிலவுகிறது. தரவுகளைத் திரட்டுவது மட்டுமல்ல, அவற்றை விரிவான பின்புலத்தில் வரலாற்றியல் கோட்பாடுகளின் புரிதலோடு ஒரு வாதமாக முன்வைப்பதே வரலாறு. மார்க்சிய வரலாற்றுநெறியில் நன்கு பயிற்சி பெற்றிருந்த வீரராகவன், அதுவரை உலக அளவில் நடந்தேறியிருந்த தொழிலாளர் வரலாற்று ஆய்வுப் (labour history) பின்புலத்தில் தன் ஆய்வை அமைத்திருந்தார்.
  • சென்னை நகரத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியோடு தொழிலாளர் வர்க்கம் உருவானதையும், தொழிற்சங்கங்கள் தோன்றும் முன்னர் நடந்த போராட்டங்களையும் விரிவாக முன்வைத்த வீரராகவனின் ஆய்வு, முதல் உலகப் போர் முடிந்த காலத்தில் தொழிற்சங்கங்கள் தோன்றியதையும் காட்டுகிறது. இக்காலகட்டத்தில் தேசிய இயக்கத்தோடு தொழிற்சங்கங்கள் கொண்ட ஊடாட்டத்தையும் வீரராகவன் பகுத்தாய்ந்தார்.
  • வீறார்ந்த போராட்டங்கள் நடந்த பின் ஒரு பத்தாண்டுக் கால இடைவெளியும் விழுகிறது. 1930இல் தொடங்கிய உலகப் பொருளாதாரப் பெருமந்தத்தைத் தொடர்ந்து தொழிலாளர் போராட்டங்கள் மீண்டும் தலையெடுக்கின்றன. இடதுசாரி சக்திகளும் தொழிற்சங்கங்களில் தலைமையேற்கத் தொடங்குகின்றன. பெருநம்பிக்கையைத் தொடக்கத்தில் கொடுத்த முதல் காங்கிரஸ் அமைச்சரவையின் (1937-1939) தொழிலாளர் விரோத நிலைப்பாடுகள் ஏமாற்றம் தந்து, இரண்டாம் உலகப் போர் வெடிக்கும் தருணத்தில் வீரராகவனின் நூல் முடிகிறது.
  • தமிழ்நாட்டில் பிஎச்.டி. பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் மாணவர் வீரராகவன்; இது வெறும் தகவல் மட்டுமே. உடற்குறையை முன்னிட்ட சலுகைகளை அவர் கடுமையாக மறுத்தார் (உரிமைகளுக்கான போராட்டங்களில் முன்நின்றது வேறு). வீரராகவனின் செயல்பாடுகளை மதிப்பிடும்போது எந்தச் சலுகையும் காட்ட வேண்டியதே இல்லை. எந்த அளவுகோலாலும் அவரைக் குறைத்து மதிப்பிட முடியாது.
  • வீரராகவன் என்றதும் ச.சீ.கண்ணன் நினைவுக்கு வருவார். அவரோடு கொண்ட தொடர்பு வீரராகவனின் வளர்ச்சிக்குத் தூணாக இருந்தது. கார்ல் மார்க்ஸ் நூலகத்தின் கணிசமான பகுதி வீரராகவன் படிப்பதற்கென்றே வாங்கிச் சேர்க்கப்பட்டது. இத்தொகுப்பால் பயன்பெற்றவன் என்கிற முறையில் அதன் வளத்துக்கு நான் சாட்சி. வீரராகவனுக்கு எல்லா வகையிலும் துணை நின்றவர் ச.சீ.கண்ணன்.
  • வீரராகவனின் ஆய்வேடுகளில் அவருடைய பங்கு ஆணிவேர் போன்றது. தமிழகத் தொழிலாளர் இயக்க வரலாறு வீரராகவன் மூலம் முழுமையாக எழுதப்பெறும் என்னும் பெருங்கனவை அவர் கொண்டிருந்தார். வீரராகவனின் ஆய்வேட்டை 1989ஆம் ஆண்டளவிலேயே தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அவர் முயன்று முதல் மூன்று இயல்களை மொழிபெயர்த்தும்விட்டார்.
  • அப்போது முதல் இயலை நான் மேற்பார்த்துக் கொடுத்தேன். ச.சீ.கண்ணனின் மூப்பு காரணமாகப் பணி தடைபட்டது. பின்னர் புதுவை ஞானம் எஞ்சிய பகுதியை மொழிபெயர்த்து, 2003இல் நூல் வெளிவந்தது. தமிழாக்கத்தில் ஆதாரக் குறிப்புகள், சான்றுப் பட்டியல் முதலானவை இல்லை. ஆங்கில மூலத்தின் நடைச்சிறப்பும் தமிழாக்கத்தில் காணப்படவில்லை. மூல ஆங்கில நூலை சி.பி.எம். கட்சி சார்ந்த ‘லெஃப்ட்வர்ட் புக்ஸ்’ 2013இல் வெளியிட்டது.
  • அடர்த்தியான செய்திகளோடு செறிவாக எழுதப்பட்ட இந்த ஆய்வை ஓர் ஆளுமைச் சித்திரத்தில் சுருக்குதல் இயலாது. தமிழுலகத்தின் அளவுகோல்களின்படி ‘சென்னைப் பெருநகரத் தொழிற்சங்க வரலாறு’ ஒரு பெரிய சாதனை என அடித்துச் சொல்லலாம். தே.வீரராகவன் எழுதியிருக்கக்கூடிய ஆய்வுகளைக் கருதும்போது அப்படிச் சொல்ல முடியாது.
  • வீரராகவனின் ஆய்வேடு 1939இல் நிற்கிறது. 1940கள் தொடர்பான எல்லா ஆவணங்களையும் வீரராகவன் திரட்டிவைத்திருந்தார். அவற்றின் அடிப்படையில் அடுத்த பகுதி வரலாறு எழுதப்படவில்லையே என்பது ஆறாத குறையாக நீடிக்கிறது.

நன்றி: தி இந்து (06 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories