- சென்னையில் பழமையான நூலகங்கள் இன்றும் மக்கள் பயன்பாட்டில் மகத்தான சேவையை ஆற்றி வருகின்றன. அந்த நூலகங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
கன்னிமாரா நூலகம்
- எழும்பூரில் அமைந்துள்ள நூற்றாண்டுப் பழமையான கன்னிமாரா நூலகம் அரிய புத்தகங்களுக் காக மட்டுமின்றி, அதன் கட்டிடக் கலைக்காகவும் பேசப்பட்டு வருகிறது. 127 ஆண்டுகளாகத் தொடர்ந்து அறிவுசார் கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துவருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 8,50,000 நூல்கள் உள்ளன. தமிழ், ஆங்கில நூல்கள் அதிகம் இருந்தாலும், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, வங்க மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் நிறைந்துள்ளன.
- நூறாண்டுக் கால பாரம்பரிய நூல்களும் இந்நூலகத்தில் உள்ளன. வரலாறு, கலாச்சாரம், மருத்துவம், கலை, அறிவியல், கணிதம், அரசியல், ஆராய்ச்சி நூல்களும் குவிந்துள்ளன. போட்டித் தேர்வுக்குத் தயராகும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஏராளமான புத்கங்களும் தடையில்லா இணைய வசதியும் இங்கு உண்டு. பார்வையற்றவர்களுக்கு நூல்கள் பிரெய்லி முறையிலும் ஒலி வடிவிலும் இங்கு உள்ளன. காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை கன்னிமாரா நூலகம் செயல்படுகிறது.
- நூலகம் பற்றி அறிய: https://shorturl.at/zY456
உ.வே. சாமிநாதையர் நூலகம் / உ.வே.சா. நூலகம்
- தமிழ் மொழிக்கு அரும்பெரும் தொண் டாற்றியவரும் ‘தமிழ் தாத்தா’ என்று போற்றப்படும் தமிழறிஞருமான உ.வே. சாமிநாதரின் நினைவாக உ.வே.சாமிநாதர் நூலகம் சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ளது.
- இந்நூலகத்தில் நான்காயிரத்துக்கும் அதிகமான நூல்கள், அரியவவகை தமிழ்ச் சுவடிகள், பிற தமிழறிஞர்களுக்கு உ.வே.சா. எழுதிய கடிதங்கள், நாள்குறிப்புகள் உள்ளன. பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த மாத இதழ்களும் நூலகத்தில் கிடைக்கின்றன. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிவரை இந்நூலகம் செயல்படுகிறது.
- நூலகம் பற்றி அறிய: https://uvesalibrary.org/
முஹம்மதன் பொது நூலகம்
- சென்னை திருவல்லிக்கேணியில் அமைந் துள்ள முஹம்மதன் நூலகம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. கர்நாடக நவாபின் கடைசி நவாபாக இருந்த குலாம் முகமது கவுஸ் கான் பகதூரால் இந்நூலகம் நிறுவப்பட்டது. 18, 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 15,000 அரியவகை நூல்கள் இங்கு உள்ளன.
- அறிவியல், வரலாறு, பாரசீகம், உருது, அரபி, ஆங்கிலம் , தமிழ் எனப் பல்துறை சார்ந்த புத்தகங்களும் வாசிக்கக் கிடைக்கின்றன. காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை இந்நூலகம் செயல்படுகிறது.
- நூலகம் பற்றி அறிய: https://shorturl.at/grwRW
மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி
- இந்தியாவில் மிகப் பழமையான நூலகங்களுள் மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டியும் ஒன்று. இது சென்னை கல்லூரி சாலை டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இந்நூலகம் 1817இல் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. இந்நூலகத்தில் 80,000க்கும் அதிகமான நூல்களும், 10,000க்கும் அதிகமான பத்திரிகைகளும் உள்ளன.
- வரலாற்றுச் சிறப்புமிக்கப் பல அரிய ஒளிப்படங்களும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், ஆராய்ச்சி நூல்கள், தத்துவ நூல்களும் இங்கு நிறைந்து காணப்படுகின்றன. ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் ஏற்ற நூலகம் இது. நூலகத்தின் சிறப்பு அம்சமாக குழந்தைகள் படிப்பதற்கெனத் தனிப் பகுதிகள் உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இந்நூலகம் செயல்படுகிறது.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
- ரோஜா முத்தையா எனும் தனிமனிதரின் சேகரிப்பிலிருந்து ஒரு பிரம்மாண்ட நூலகம் உருவான வரலாறே சிறப்பு வாய்ந்தது. 5 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள், ஆவணங்களைக் கொண்ட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சென்னைத் தரமணியில் அமைந்துள்ளது.
- ‘சுதேசமித்திரன்’, ‘உதயதாரகை’, ‘சக்தி’ போன்ற பழமையான இதழ்களை இந்நூலகத்தில் காணலாம். உலக அளவில் 30 ஆயிரம் வாசகர்களைக் கொண்ட நூலகம் இது. புத்தகங்களைப் பட்டியலிடும் முறைக்கு ரோஜா முத்தையா நூலகம்தான் தெற்காசியாவுக்கே முன்னோடி என்று கருதப்படுகிறது.
- தற்போது நூல்களை டிஜிட்டல் நகல் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் கலை, கலாச்சார, வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் எண்ணற்ற தகவல்களை இந்நூலகம் வழங்கிவருகிறது. ஆராய்ச்சி மாணவர்களின் தேடல்களுக்கு அறிவுச் சுரங்கமாகவும் ரோஜா முத்தையா நூலகம் உள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிவரை இந்நூலகம் செயல்படுகிறது.
- நூலகம் பற்றி அறிய: https://rmrl.in/
அடையாறு நூலகம் - ஆராய்ச்சி மையம்
- நூறாண்டுக்கும் மேல் பழமையானது அடையாறு நூலகம் - ஆராய்ச்சி மையம். பிரம்மஞான சபையின் மரங்களுக்கு நடுவே வீற்றிருக்கும் இந்நூலகத்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன. இந்தியா, இலங்கை, சீனாவில் கிடைக்கப்பெற்ற 20,000க்கும் அதிகமான ஓலைச்சுவடிகள் இங்கு உள்ளன.
- கீழைத்தேய நாகரிகம், தத்துவம், மதம் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கான தகவல் களஞ்சியம் இது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நூலகம் செயல்படுகிறது. ஞாயிறு விடுமுறை நாள். நூலகத்தில் பதிவுசெய்தவர்கள் மட்டும் புத்தகங்களை அலசிப் பார்த்து, குறிப்புகள் எடுக்கலாம்.
- நூலகம் பற்றி அறிய: https://shorturl.at/EOQV3
தமிழ்நாடு மாநில ஆவணக் காப்பகம்
- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு எதிரே அமைந்திருக் கிறது மாநில ஆவணக் காப்பகம். இந்தக் காப்பகத்துக்கு இப்போது வயது 114. முதலில் இது ‘மெட்ராஸ் ரெக்கார்டு ஆபீஸ்’ என்றழைக்கப்பட்டது. 1973இல் ‘தமிழ்நாடு மாநில ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரகம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. இங்கிருக்கும் நூலகத்தில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய நூல்கள் முதல் கிட்டத்தட்ட 2.3 லட்சம் நூல்கள் உள்ளன.
- சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், தென்னிந்திய வரலாறு போன்ற தலைப்புகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ளும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு அறிவுப் பெட்டகமாக இது விளங்குகிறது. இங்கிருக்கும் புத்தங்கள், ஆவணங்களைத் தகவல் திரட்டப் புரட்டிப் பார்க்கலாமே தவிர வெளியே எடுத்துச் செல்ல அனுமதியில்லை. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இது செயல்படுகிறது.
- ஆவணக் காப்பகம் பற்றி அறிய https://shorturl.at/bxOR5
பெரியார் திடல்
- சென்னை வேப்பேரியில் அமைந்துள்ளது பெரியார் திடல். இங்குள்ள பெரியார் பகுத்தறிவு நூலகம் - ஆய்வகத்தில் பகுத்தறிவுச் சிந்தனை, பெண் விடுதலை, தமிழக அரசியல் எனப் பல்வேறு வகையிலான புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன. அரசியலில் ஈடுபாடு கொண்டவர்களுக்குப் பெரியார் பகுத்தறிவு நூலகம் - ஆய்வகம் ஒரு பொக்கிஷம். மாணவர்கள், புத்தகப் பிரியர்களுக்குரிய புத்தகங்களும் இங்கு உள்ளன. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை இது செயல்படுகிறது.
நன்றி : இந்து தமிழ் திசை (22– 08 – 2023)