சென்னையில் உ.வே.சா.
- உ.வே.சாமிநாதையர் 140 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட ஒரு சென்னைப் பயணம் தமிழுக்கு மறுமலர்ச்சிப் பயணமாக அமைந்தது. உத்தமதானபுரத்து சாமிநாதையர் சென்னையில் வாழ்ந்த காலம் 1903 முதல் 1942 வரை 39 ஆண்டுகள். ‘மாநிலக் கல்லூரி’யில் 1903 நவம்பர் மாதம் ஆசிரியர் பணியை ஏற்ற காலம் முதல் சாமிநாதையர் சென்னையிலேயே வாழ்ந்து இறுதிக் காலத்தைக் கழித்தார். சென்னையில் வாழ்ந்திருந்த காலப்பகுதிதான் அவர் வாழ்க்கையின் செழிப்புமிக்க, சிறப்புமிக்க காலப்பகுதி.
- சாமிநாதையரின் முதல் சென்னைப் பயணம் நூற்பதிப்பு சம்பந்தமானது. ‘ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம்’ என்னும் நூலை எழுதிப் பதிப்பித்து வெளியிடும் சூழல், 1885ஆம் ஆண்டு சாமிநாதையருக்கு வாய்த்தது. அந்தக் காலத்தில் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
- அப்போது திருவிடைமருதூர் தலப் பெருமையைச் சுருக்கமாக வசன நடையில் எழுதித் தர வேண்டும் என்று சாமிநாதையரிடம் திருவாவடுதுறை ஆதீனக்காறுபாறும், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி ஆலய விசாரணைக் கருத்தருமாகிய சுப்பிரமணியத் தம்பிரான் கேட்டுக்கொண்டார். மத்தியார்ச்சுன மான்மியம் என்ற நூலைச் சாமிநாதையர் வசனநடையில் எழுதி அளித்தார். வசனநடையில் அவர் எழுதிய முதல் நூல் இது.
- அந்தக் காலத்தில் விரைவாக நூலை அச்சிடும் வசதி திருவாவடுதுறையிலோ கும்பகோணத்திலோ இல்லை. அதனால், சாமிநாதையரையே சென்னைக்கு அனுப்பிவைத்து நூல் அச்சுப் பணியை முடித்துவர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. சாமிநாதையர் மேற்கொண்ட முதல் சென்னைப் பயணம் இது. சாமிநாதையர் சென்னைக்கு வந்த பின்னர் ‘ஜீவரக் ஷாமிர்தம்’ அச்சுக் கூடத்தில் ‘ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம்’ நூலை அச்சிடக் கொடுத்தார்.
- ‘மத்தியார்ச்சுன மான்மியம் பதிப்பிப்பதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தாலும், என்னுடைய நோக்கம் அந்நகரத்தையும் அங்குள்ள அறிஞர்களையும் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே. இராமசுவாமி முதலியாருடைய பேருதவியால் அந்நோக்கம் மிக எளிதில் கைகூடியது. ஒவ்வொரு நாளும் முதலியார் பிற்பகலில் தம் கோச்சு வண்டியில் என்னை அழைத்துக்கொண்டு புறப்படுவார்.
- பிரஸிடென்ஸி காலேஜ், காஸ்மொபாலிடன் கிளப் முதலிய இடங்களுக்குப் போய் அங்கு உள்ளவர்களும் வருபவர்களுமாகிய கனவான்களில் ஒவ்வொருவரையும் எனக்குப் பழக்கம் பண்ணி வைப்பார். அவர்கள் கௌரவத்தை எனக்கு எடுத்துரைப்பதோடு என்னைப் பற்றியும் அவர்களிடம் சொல்வார். அவருடைய உதவியினால் நான் ஜட்ஜ் முத்துசாமி ஐயர், ஸர் வி. பாஷ்யம் அய்யங்கார், ஸ்ரீநிவாச ராகவையங்கார், பம்மல் விஜயரங்க முதலியார், ரகுநாதராயர் முதலிய பல கனவான்களுடைய பழக்கத்தைப் பெற்றேன்’ என இந்த சென்னைப் பயணம் குறித்து சாமிநாதையர் எழுதியுள்ளார்.
- சென்னை நகரத்தில் பார்க்க வேண்டிய பொருட்காட்சிச் சாலை, கடற்கரை, கோயில்கள், புத்தகசாலைகள், சர்வகலாசாலை முதலியவற்றையும் முதல் பயணத்திலேயே சென்று பார்த்தார். முதல் சென்னைப் பயணம் சாமிநாதையருக்குப் பல வகையிலும் பயனுள்ளதாக இருந்தது.
- 1885ஆம் ஆண்டுக்குப் பின்னர் பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல்வேறு நூல்களின் பதிப்புப் பணிக்காகப் பலமுறை சென்னைக்கு வந்துசென்றிருக்கிறார் சாமிநாதையர். 1903இல் மாநிலக் கல்லூரிப் பணிக்காக சென்னை வந்தார். திருவல்லிக்கேணி திருவேட்டீசுவரன் பேட்டையில் குடியேறினார். அந்த வாய்ப்பு, பல சங்க இலக்கிய நூல்கள் சுவடியிலிருந்து அச்சு நூலாக வடிவம் பெற்று அழியா நிலைப்பேற்றை அடையும் வாய்ப்பைத் தந்தது.
- பிப்ரவரி 19: உ.வே.சாமிநாதையரின் 170ஆவது பிறந்த நாள்
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 02 – 2025)