சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025: தமிழுக்கான உலக வாசல்
- தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா கடந்த 2023 முதல் ‘உலகைத் தமிழுக்கும் தமிழை உலகுக்கும் கொண்டுசெல்லுதல்’ என்கிற உயரிய நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறது. பன்னாட்டுப் புத்தகக் காட்சிக்கு இது வெற்றிகரமான மூன்றாம் ஆண்டு. 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் 24 நாடுகள் பங்கேற்றன. 2024இல் 40 நாடுகள் பங்கேற்றன. இந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வெளிநாட்டுப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய முகவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டு இலக்கிய முகவர்கள் திட்டத்தை உருவாக்கியது. இந்த இலக்கிய முகவர்கள் திட்டத்தின் கீழ் வாசிப்பில் நாட்டமும் தகவல் தொடர்புத் திறனும் கொண்ட இளைஞர்களைத் தேர்வுசெய்து, தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துகளைப் பிற மொழிக்கு எடுத்துச்செல்லப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது நாட்டில் வேறெந்த மாநிலமும் செய்யாத முன்னெடுப்பு. இதனால், தமிழின் இலக்கியச் செழுமை பிற மொழிகளுக்குக் கடத்தப்படுவது எளிதாகியிருக்கிறது. இளைய தலைமுறைக்கு மொழி சார்ந்த பணி வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. தமிழ் எழுத்துலகுக்கும் பதிப்புலகுக்கும் இது புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது.
- சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025இல் பங்கேற்பதற்காக 85 நாடுகளைச் சேர்ந்த 225 பதிப்பாளர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இதில் தேர்வு செய்யப்பட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இந்தப் புத்தகத் திருவிழாவில் 78 அரங்கங்களும், முதன்முறையாகக் குழந்தைகளுக்கெனத் தனியாக 3 அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உலகிலேயே மிகப் பெரிய குழந்தைகள் புத்தகத் திருவிழாவை 62 ஆண்டுகளாக இத்தாலியில் நடத்திவரும் பொலோனியா குழந்தைகள் புத்தகத் திருவிழா நமது மதிப்புறு விருந்தினராகப் பங்கேற்பது இந்தப் புத்தகத் திருவிழா அடைந்துள்ள உயரத்துக்கு அடையாளம். அத்துடன், ஆப்ரிக்க பதிப்பாளர்கள் கூட்டமைப்பு (APNET), ஆசியான் (ASEAN) பதிப்பாளர்கள் சங்கம், ஃபிராங்கோபோன் (Francophone) பதிப்பாளர்கள் அமைப்பு முதலிய பன்னாட்டுப் பதிப்பு அமைப்புகள் பங்கேற்பது ‘உலகைத் தமிழுக்கும் தமிழை உலகுக்கும் கொண்டுசெல்வது’ என்கிற இலக்கை அடைவதில் புதிய வரலாற்றைப் படைக்கும்.
- திருக்குறளின் மானுடப் பொதுமை, பெரியார் சிந்தனைகளின் உலகளாவிய பொருத்தப்பாடு, தற்காலத் தமிழ் இலக்கியம், பெண் எழுத்து, மொழியாக்க இலக்கியம், ஆய்வு இலக்கியம் என்று பலவகைப் பொருண்மைகளில் இலக்கிய உரையாடல்களும் நடைபெற உள்ளன. முதுபெரும் எழுத்தாளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள் வரை பங்கேற்கவிருக்கிறார்கள். பழம்பெரும் பதிப்பாளர்கள் முதல் புத்தம் புது பதிப்பாளர்கள்வரை வணிகம் செய்யவிருக்கிறார்கள். இது தமிழுக்கான உலக மேடையாகியிருக்கிறது. 2023இல் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தொடங்கிய பின்னர், 160க்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்புகள் இந்திய, உலக மொழிகளுக்குச் சென்றடைய நிதிநல்கை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, 150க்கும் மேற்பட்ட நூல்கள் உலக மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கு வரவுள்ளன.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 01 – 2025)