சென்னை மருத்துவக் கல்லூரி இன்னும் சிறக்க வேண்டாமா?
- நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ‘சிஈஓ வேர்ல்டு’ இதழில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள் தர வரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
- மருத்துவக் கல்வியின் தரம், மாணவர் சேர்க்கைத் தகுதிகள், சிறப்புத் துறைகள், உலகளாவிய நன்மதிப்பு, மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகள், மாணவர்களின் மனத் திருப்தி, ஓராண்டுக்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்து, மருத்துவக் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 99.06 மதிப்பெண்கள் பெற்று அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவக் கல்வி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
- 22ஆவது இடத்தில் டெல்லி எய்ம்ஸ் கல்வி நிறுவனமும், 46ஆவது இடத்தில் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியும், 55ஆவது இடத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. 60ஆவது இடத்தில் 78.77 மதிப்பெண்களுடன் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.) உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கல்லூரியை முன்னணி வரிசைக்குக் கொண்டுவர அரசு செய்ய வேண்டியது என்ன?
பற்றாக்குறையும் குறைபாடுகளும்:
- சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிஎம், எம்சிஎச் உள்ளிட்ட படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3,072. ஆனால், எய்ம்ஸில் 2,559, வேலூர் சிஎம்சியில் 1,139, ஜிப்மரில் 1982 ஆகவும் மாணவர்கள் எண்ணிக்கை உள்ளது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவுக்குப் போதிய மருத்துவ ஆசிரியர்கள் இல்லாதது, மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
- சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி புறநோயாளிகள் எண்ணிக்கை 21,512. எய்ம்ஸ், சிஎம்சி வேலூர், ஜிப்மரில் முறையே 14,335, 9,198, 4,814. எம்.எம்.சி. மருத்துவமனையில் உள்நோயாளிகள் எண்ணிக்கை 8,869ஆக உள்ளது. எய்ம்ஸ், வேலூர் சிஎம்சி மற்றும் ஜிப்மரில் முறையே 3,325, 2,037, 2,231. எய்ம்ஸ் உள்ளிட்ட மற்ற கல்லூரிகளுடன் ஒப்பிடும்போது, எம்.எம்.சி-யில் மருத்துவ ஆசிரியர்கள் - மாணவர்கள் விகிதமும், மருத்துவர்கள் - நோயாளிகள் விகிதமும் மிகக் குறைவு. இங்குள்ள மருத்துவர்களுக்குப் பிற மருத்துவமனைகளில் அயல் பணி (Deputation) தரப்பட்டுள்ளது. இதனால் இங்கு பணிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி:
- பொதுவாக, ஆராய்ச்சிப் பணிகளுக்கு என்றே தனியாக மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், எம்.எம்.சி-யிலோ அவ்வாறு நியமிக்காமல், இருக்கின்ற மருத்துவர்களே அதையும் செய்ய வேண்டி உள்ளதால், ஆராய்ச்சிகளைப் பெரிய அளவில் முனைப்புடன் செய்ய முடிவதில்லை. நான்காவது பணியாக, மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பணியும் மருத்துவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) போன்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் டெல்லி எய்ம்ஸில் கிடையாது.
- ஆனால், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இந்தக் காப்பீட்டுத் திட்டம் மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இதற்கான ஆய்வுக் கூட்டம் டீன் அல்லது மருத்துவ இயக்குநர் தலைமையில் நடத்தப்படுவதுடன், ஆண்டு முழுவதும் இலக்கு வைத்து நோயாளிகளைச் சேர்ப்பதற்கு மருத்துவர்கள் அதீத முயற்சி எடுக்க வேண்டும்.
- ஒருபுறம் நோயாளிகள் காப்பீடு அட்டை வாங்குவதற்காக அலைய வேண்டி உள்ளது. இதனால், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதையும், மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதையும் செய்ய வேண்டிய மருத்துவர்களுக்கு வீணாகக் காலவிரயம் ஏற்படுகிறது. அது மட்டுமன்றி மருத்துவர்கள், நோயாளிகள் இடையே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
மிகக் குறைவான நிதி ஒதுக்கீடு:
- 2022 - 23ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையுடன் ஒப்பிடுகையில், எம்.எம்.சி-க்கு மிகக் குறைவான நிதி தரப்பட்டுள்ளது. ஊதியத்துக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2,237 கோடி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், எம்.எம்.சி-க்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1,069 கோடிதான். கல்விக் கட்டமைப்பு, இதர பராமரிப்புச் செலவுகளுக்காக எய்ம்ஸுக்கு ரூ.1,311 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. எம்.எம்.சி-க்கு ரூ.431 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
- சென்னை மருத்துவக் கல்லூரியைப் பொறுத்தவரை, அதனுடன் இணைந்த எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை (IOG), எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை (ICH), எழும்பூர் கண் மருத்துவமனை (RIO), அயனாவரம் மன நல ஆராய்ச்சி மையம் (IMH) என ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் இயங்கிவருகின்றன. இதைத் தவிர, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம், அறுவைசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகள் வலுவான கட்டமைப்புடன் இயங்கிவருகின்றன.
- தமிழகத்தில் மருத்துவர்களுக்கு நீண்ட காலமாக உரிய ஊதியம் மறுக்கப்படுகிறது. அதுவும் எய்ம்ஸுக்கு இணையான ஊதியம் தரப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அறிவுறுத்திய பிறகும் தமிழக அரசு அதைச் செயல்படுத்தவில்லை.
அரசு செய்ய வேண்டியவை:
- போதிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் (Human Resource) இன்றி எதையுமே சாதிக்க முடியாது. அனைத்துச் சிறப்பு - உயர் சிறப்புத் துறைகளில் போதிய எண்ணிக்கையில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். போதிய செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் தேவையான அளவு நோயாளிகள் படுக்கை வசதிகள், கருவிகள், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
- மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் - பயிற்சி மருத்துவர்களுக்குப் போதிய உறைவிட வசதி (Quarters) ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படும் நிலையிலும் மருத்துவர்கள் இங்கு சாதனைகள் புரிந்துவருகின்றனர். இந்த நிலையில், மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை - அதுவும் இருக்கிற அரசாணையை நடைமுறைப்படுத்த அரசு முன்வந்தால் மருத்துவர்களின் பங்களிப்பும் ஆர்வமும் மேலும் கணிசமாக அதிகரிக்கும்.
- விளையாட்டுத் துறையில் சர்வதேச அளவில் வெற்றி பெறுபவர்களுக்குப் பெரும் பரிசுத் தொகையும் அங்கீகாரமும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுவதைப் போலச் சிறப்பாகப் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். தமிழக முதல்வர் ஏற்கெனவேவாக்குறுதி அளித்தவாறு, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறப்பித்த அரசாணை 354இன்படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்க வேண்டும்.
- இதற்கு அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக ரூ.300 கோடி மட்டுமே தேவைப்படுகிறது. ஆரோக்கியமான பணிச்சூழல், உரிய அங்கீகாரம், தகுதிக்கேற்ற ஊதியம் போன்றவை இருந்தால், சென்னை மருத்துவக் கல்லூரியை மட்டுமல்ல, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளையும் முன்வரிசைக்குக் கொண்டுவர முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 03 – 2025)