- சென்னையைப் பொறுத்தவரை கடல் என்பது கொண்டாட்டத்தின் குறியீடு. வார இறுதிகளில் திருவிழாக்கோலம் பூண்டுவிடும் கடற்கரையில் காலார உலவும் பெரும்பாலானவர்களின் முகங்களில் குதூகலத்தின் ரேகைகள்தான்; மனக்காயத்தோடு வருபவர்களுக்கும் அங்கே இடம் உண்டு.
- பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை கடற்கரைகளைப் பார்த்தபடி அமைந்திருக்கும் வீடுகளெல்லாம் சாமானியர்களுக்கோ பெருங்கனவு.
- நொச்சிக்குப்பம், காசி மேடு போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான சாமானியர்களின் வசிப்பிடமாகவும் கடற்கரையோரங்கள் இருக்கின்றன.
- கடற்கரையைப் பிரித்துவிட்டு கற்பனைசெய்யவே முடியாத சென்னை நகரம் பருவநிலை மாறுபாட்டால் கடல்மட்டம் உயர்ந்து மிகப் பெரும் அபாயத்தை எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.
- கிழக்குக் கடற்கரை சாலைகளில் நிறைந்திருக்கும் உல்லாசப் புகலிடங்கள், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், சென்னை உயர்நீதி மன்றம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், கடற்கரையோரக் குடியிருப்புகள், துறைமுகம், அனல்மின் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகள் அடுத்த முப்பது ஆண்டுகளில் கடுமையான இடர்பாட்டுக்கு உள்ளாகவிருப்பதாக எச்சரிக்கின்றன அமெரிக்காவைச் சேர்ந்த பருவநிலை மையத்தின் ஆய்வுகள்.
- உயர்ந்துவரும் கடல்மட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் முயலவில்லை என்றால் மிகப் பெரும் பேரிடரை சென்னை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
- துரதிர்ஷ்டம் என்னவென்றால், நம் நாட்டிலுள்ள நூறு கோடி பேரின் கூட்டுமனதிலும் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தொழில் நிறுவனங்களை நெறிப்படுத்தவும், மாற்று ஏற்பாடுகளுக்குத் திட்டமிடவும் வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் உரையாடலுக்குள் இன்னும் பருவநிலை மாற்றம் விவாதம் ஆகவில்லை என்பதுதான்.
தொடரும் அபாய மணி
- 1988-லிருந்தே இது தொடர்பான எச்சரிக்கைகள் எழத் தொடங்கிவிட்டன என்றாலும், சமீப காலங்களில் இந்த உரையாடல்கள் சர்வதேச அளவில் தீவிரம் பெற்றிருக்கின்றன. அதிலும், பருவநிலை மையத்தின் சமீபத்திய ஆய்வு முடிவுகள் பல நாடுகளையும் கிலியூட்டியிருக்கின்றன.
- உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கடற்கரையோரங்கள் ஆபத்தில் இருப்பதாகச் சொல்லும் இதுபோன்ற ஆய்வுகள், ஆசியாவில் அதிக உயிர்ச்சேதம் விளைவிக்கக்கூடியதாக ஆறு (சீனா, வங்கதேசம், இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து) நாடுகளைப் பட்டியலிடுகின்றன.
- ஆம்! ஆசியாவில் அதிக சேதங்களை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்.
- கடல்மட்ட உயர்வு இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால், நம் நாட்டில் அடுத்த முப்பது ஆண்டுகளுக்குள் 3.5 கோடி பேர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
- இதற்கு முன்பான கணிப்பில் இது 50 லட்சமாக இருந்தது என்பதிலிருந்து எவ்வளவு வேகமாக மோசமான எதிர்காலத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
- கடல்மட்ட உயர்வால் 2030-லிருந்து 2050-க்குள் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
- இந்தக் காலகட்டத்தில் தெற்கு ஆசியாவில் மட்டும் சுமார் 4 கோடி பேர் உள்நாட்டுக்குள்ளாக இடம்பெயர நேரிடும் என்கிறது உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள 2019-க்கான உலகளாவிய பேரிடர் அறிக்கை.
- இந்தியாவைப் பொறுத்தவரை நெருக்கடியான இடத்தில் இருக்கும் நகரங்களின் பட்டியலில் மும்பையும் சென்னையும் முன்வரிசையில் நிற்கின்றன. சென்னையின் இந்தெந்த பகுதிகள் எல்லாம் பாதிப்படையும் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும், நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளத் தயாராக வேண்டும் என்பதற்காக விடப்பட்ட அபாய மணி இது.
- உயர்ந்துவரும் புவி வெப்பநிலையைக் குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதும், பல நாடுகளும் இதை இன்னும் பொருட்படுத்தத் தொடங்கவில்லை என்பதும்தான் அறிக்கைகள் வெளிப்படுத்தும் பதற்றத்துக்குக் காரணம்.
- 2050-க்குள் உலக நாடுகள் அனைத்தும் பசுமையில்ல வாயு வெளியேற்றத்தை முழுவதுமாகக் குறைத்தால்தான் 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்காவது குறைக்க முடியும் எனும் நிலை இருக்க, மேலும் 3.5 டிகிரி வெப்ப அதிகரிப்பை நோக்கி புவி சென்று கொண்டிருப்பதாகச் சொல்கின்றன ஆய்வுகள்.
- கடல்மட்ட உயர்வுக்கு மிக முக்கியப் பங்களிப்பாளர் பசுமையில்ல வாயுக்கள்தான். சதுப்புநிலங்களைப் பாதுகாப்பது, நிறைய செடிகளையும் மரங்களையும் நடுவது, உணவுகள் வீணாவதைக் கட்டுப்படுத்துவது, மின்சாரத்தைச் சேமிப்பது, கார் உபயோகத்தைத் தவிர்த்துவிட்டு நடந்தோ பொதுப்போக்குவரத்திலோ பயணிப்பது போன்ற யோசனைகளை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.
- அடிப்படையில் இவற்றின் சாராம்சம் ஒன்றுதான்: பின்னோக்கிப் பயணித்தல். பின்னோக்கிப்போவதன் அவசியம் உணர்ந்த பல்வேறு நாடுகள் சில அபாரமான முன்னெடுப்புகளின் வழி இதை சாத்தியப்படுத்தியிருக்கின்றன.
உதாரணம்
- உதாரணமாக, சிங்கப்பூரில் இப்போது வெறும் 6 லட்சம் தனியார் வாகனங்களே இருக்கின்றன. இந்த எண்ணிக்கை, கடந்த நான்கு ஆண்டுகளில் டெல்லியில் பதிவான வாகனங்களைவிடக் குறைவு.
- காப்பீட்டுத் தொகை, சாலை வரி தொடங்கி வீட்டில், அலுவலகத்தில் வாகனம் நிறுத்துவது வரை எல்லாவற்றுக்கும் மிக அதிகமான தொகை வசூலிப்பதன் மூலமாக சிங்கப்பூர் அரசால் இதைச் சாதிக்க முடிந்தது.
- அதேவேளையில், சிங்கப்பூர் அரசு வழங்கும் பொதுப் போக்குவரத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. இதுபோல, ஏசி பயன்பாட்டிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகப் புதிய கட்டுமான உத்திகளை அறிமுகப்படுத்தியது ஜெர்மனி. இப்போது வெறும் 3% வீடுகளில் மட்டும்தான் அங்கே வீடுகளில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது.
தீவிரம் பெறும் பருவநிலை மாற்றம்
- கடல்மட்ட உயர்வு கொண்டுவரும் அபாயத்தை நாம் இன்னும் உணரவில்லை என்பதால்தான் அது நம் உரையாடலுக்குள்ளாகவே இன்னும் வரவில்லை. பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள இரண்டு சமீபத்திய உதாரணங்கள் - நிர்வாகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் இந்தோனேசியாவின் இதயமாகச் செயல்பட்டுவரும் ஜகார்டா தன் தலைநகர் அந்தஸ்தை இழக்கவிருக்கிறது. இந்தோனேசியாவின் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான ஆயத்தங்கள் அங்கே தொடங்கப்பட்டுவிட்டன.
- ஐஸ்லாந்தில் முழுவதுமாக உருகிவழிந்த பனிப்பாறைக்கு அங்கே இறுதிச்சடங்கு நடத்தியிருக்கிறார்கள். சில நிமிட மௌன அஞ்சலிக்குப் பிறகு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமென உரைகள் நிகழ்த்தப்பட்டன. மும்பையிலும்கூடக் குடிமைச் சமூக அமைப்புகள் இது தொடர்பாகப் பேசத் தொடங்கிவிட்டன.
- சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல்ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை சென்னை கடற்கரைகள். சமூக சமநிலையோடு தொடர்புகொண்ட பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக நமது அரசு இன்னும் உரையாடலைத் தொடங்கவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
- நாளெல்லாம் விவாதிப்பதில் நாம் மன்னர்கள்தான். ஆனால், எதை விவாதிக்கிறோம்?
நன்றி: இந்து தமிழ் திசை (06-11-2019)