- உலக நாடுகளுக்கிடையே போட்டிகளைத் தவிர்க்க இயலாது. தங்கள் நாட்டின் வியாபாரம் அதிகரிக்க வேண்டும், கூடுதலாக பணம் கிடைக்க வேண்டும் என்று எல்லா நாடுகளும் விரும்புகின்றன. அதற்காக பல்வேறு பொருளாதார, வியாபார முடிவுகளை எடுக்கின்றன.
- சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் மீது அமெரிக்கா, வர்த்தகம், பொருளாதார தடைகள் விதிப்பதற்கு, அரசியல் தவிர பொருளாதாரம் மற்றும் வியாபார காரணங்களும் உண்டு. அரசாங்கங்கள் தவிர, பல்வேறு தனியார் அமைப்புகளும் நிறுவனங்களும் இதுபோன்ற நோக்கங்களுடன் செயல்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு.
- எஸ் & பி, மூடீஸ், ஃபிட்ச் போன்ற அமெரிக்காவில் இருந்து செயல்படும் ரேட்டிங் ஏஜென்சிகளும் அடிக்கடி உலகப் பொருளாதாரம், சில நாடுகளின் பொருளாதார நிலை, பல்வேறு தொழில்களின் நிலைமை மற்றும் குறிப்பிட்ட நிறுவனங்கள் குறித்தும் ஆய்வறிக்கைகள் வெளியிடும். வெளிவரும் தகவல்களைப் பொறுத்து, தொடர்புடைய துறை நிறுவனப் பங்குகளின் விலைகள் மாறும். இப்படி வெளியிடப்படும் அறிக்கைகளுக்கு உள்நோக்கம் இல்லை என்று சொல்ல முடியாது.
- உலகெங்கும் பங்குச் சந்தையில் ஈடுபடுத்தப்படும் பணத்தின் அளவு மிக அதிகம். இந்தியாவின் மார்கெட் கேப் எனப்படும் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 5.27 லட்சம் கோடி டாலர்கள். எல்லாம் எலெக்ட்ரானிக் முறையில் உடனடியாக செய்யக்கூடிய வர்த்தகங்கள்.
- நல்லதோ கெட்டதோ எந்த செய்தி வந்தாலும், அதை தெரிந்துகொள்ளும் லட்சக்கணக்கானவர்கள் உடனடியாக பெரும் எண்ணிக்கைகளில் பங்குகளை வாங்கவோ விற்கவோ செய்கிறார்கள். அதனால் பங்கு விலைகளில் பெரும் மாற்றங்கள் உடனடியாக நடக்கின்றன.
- பியூச்சர்ஸ் சந்தை காரணமாக அனுமதிக்கப்பட்ட பங்குகளை முழுப்பணம் கொடுக்காமல் பெரும் அளவுகளில் வாங்க முடிகிறது. அது தவிர, முக்கியமாக, தங்கள் வசமில்லாத பங்குகளை முன்கூட்டியே நடப்பு விலையில் விற்க முடிகிறது. இவையெல்லாம் தற்போதைய எலெக்டிரானிக் மற்றும் பியூச்சர்ஸ் டிரேடிங் தரும் வாய்ப்புகள். அது மட்டுமல்ல, அதன் மறுபக்கமாக, அவை உருவாக்கியிருக்கும் ஆபத்துகளும் கூட.
- அப்படிப்பட்ட ஒரு ஆபத்து, 2023, ஜனவரி 24-ம் தேதி இந்திய பங்குச் சந்தைகளைத் தாக்கியது. அதன் பாதிப்புகள் ஒரு மாத காலம் நீடித்தது. அதனால் இந்திய பங்குச் சந்தைகளின் ‘மார்கெட் கேப்’ சுமார் 150 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்தது. அந்த திடீர் வீழ்ச்சிக்குக் காரணம், அமெரிக்காவைச் சேர்ந்த நாதன் ஆண்டர்சன் என்பவரின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற நிறுவனம், அதன் வலைதளத்தில், வெளியிட்ட ஒரு அறிக்கை.
- இந்தியாவின் அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் மிக அதிகமாக (85%) இருக்கின்றன என்றும், அவை செயற்கையாக விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது. அப்படிப்பட்ட உயர் விலைகளைக் காட்டி, அதானி குழும நிறுவனங்கள் அதிக அளவில் கடன் பெற்றிருக்கின்றன என்றும், இந்நிறுவனங்களின் பங்கு விலைகள் மிக அதிகமென்றும் முதலீட்டாளர்களுக்கு அச்சமூட்டும் பல்வேறு தகவல்களையும் வெளியிட்டிருந்தது.
அதானி பங்குகள் சரிவு:
- தகவல் வெளியானவுடன் பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தின் 7 நிறுவனப் பங்குகளின் விலைகளும் தலைக்குப்புற விழுந்தன. உதாரணத்துக்கு, அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.3,600 லிருந்து ஒரு மாதத்துக்குள் ரூ.1,100 வரை கீழே போனது. அதானி கிரீன் பங்குகள் ரூ.1,860-ல் இருந்து ரூ.440 வரை இறங்கின. இப்படியாக பல்வேறு பங்குகளும் கடுமையாக விலை இறங்கின.
- தவிர மற்ற பங்குகளின் விலைகளும், குறியீட்டு எண்களும் இறக்கம் கண்டன. என்ன ஏது என்று அறியாமல் சிறு பெரு முதலீட்டாளர்கள் பலரும் அவர்கள் பல விலைகளில் வாங்கிய அதானி நிறுவனப்பங்குகளை கிடைத்த விலைக்கு விற்றார்கள். நஷ்டப்பட்டார்கள்.
- சிறு முதலீட்டாளர்களின் பணத்தைப் பெற்று முதலீடு செய்திருந்த பரஸ்பர நிதி நிறுவனங்களும் நஷ்டமடைந்தன. இதுதவிர உலக அரங்கில், இந்தியப் பொருளாதாரம், பங்குச் சந்தைகள், நிறுவனங்கள் ஆகியவை குறித்த நம்பகத் தன்மையும் மதிப்பீடுகளும் சேதமடைந்தன. அதானி குழுமம் அவற்றை மறுத்து தெரிவித்த தகவல்கள் எடுபடவில்லை.
- அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும், செபி அமைப்பே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அடுத்த ஓராண்டில் அதானி குழும பங்குகள் சரிவிலிருந்து மீண்டுவிட்டன.
ஷார்ட் செல்லர்:
- ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பங்குகள், பாண்டுகள் மற்றும் டிரைவேட்டிவ்ஸ் குறித்து ஆய்வு செய்வதும், அதை வைத்து சந்தைகளில் பணம் செய்வதும் இந்நிறுவனத்தின் வழக்கம். அதன் நிறுவனர் நாதன் ஆண்டர்சனை ‘ஷார்ட் செல்லர்’ என்றே குறிப்பிடுகிறார்கள். ‘ஷார்ட் செல்லர்’ என்பவர், முன்கூட்டியே தன்னிடம் இல்லாத பங்குகளை விற்பார்.
- பின்னர் அதே பங்குகள் விலை இறங்கியதும் வாங்குவார். விற்ற வாங்கிய விலைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டால் லாபம் பார்ப்பார். இப்படிச் செய்வது அனுமதிக்கப்பட்டதுதான். இந்தியாவிலும் இப்படி செய்ய முடியும். செய்கிறார்கள். அதற்கு ‘பியூச்சர்ஸ் மார்கெட்’ வழி செய்கிறது. ஆனால், இவருடைய செயல்பாட்டுக்கும் மற்ற ‘ஷார்ட் செல்லர்களுக்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு.
- ஏதாவது ஒரு நிறுவனம் குறித்து ஆராய்வது, அதன்பின் அந்த நிறுவனப் பங்குகளை பெரிய அளவில் தன்வசம் இல்லாமலேயே, ‘ஷார்ட் செல்லிங்’ செய்து விடுவது. அதன்பின் அந்நிறுவனம் சரியில்லை என்கிற தகவலை ஆராய்ச்சி என்ற பெயரில் வெளியிட்டு, அதனால் முதலீட்டாளர்கள் பலரும் பயந்து தங்கள் வசமிருப்பதை விற்க, அந்நிறுவனப் பங்குகள் கடுமையாக விழும். அப்போது ஏற்கெனவே விற்றதை குறைந்த விலையில் வாங்கி அதன்மூலம் லாபம் பார்ப்பதுதான் இவர் வேலை.
- இதையேதான் அவர் அதானி எண்டர்பிரஸ் நிறுவனப் பங்குகளிலும் செய்திருக்கிறார் என்பது இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் (செபி) குற்றச்சாட்டு.
லாபம் பார்த்த ஹிண்டன்பர்க்:
- கோட்டக் மகேந்திரா வங்கியின், அமெரிக்காவில் இயங்கும் கோட்டக் மகேந்திரா இன்டர்நேஷனல் நிறுவனம், கே-இண்டியா ஆப்பர் சூனிட்டீஸ் பண்ட் (KIOP) என்ற நிதியத்தை உருவாக்குகிறது. அதில் ஒரு வாடிக்கையாளர் கிண்டன் என்பவர். அவர் மூலம்தான் ஹிண்டன்பர்க் ரிசர்ச், ‘ஷார்ட் செல்லிங்’கை சாத்தியமாக்கி லாபம் அடைந்திருக்கிறது. இது செபி விதிகளுக்குப் புறம்பானது என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு செபி, 486 பக்க ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- வேறு ஒரு நாட்டில் இயங்கும் ஒரு நிறுவனம் குறித்து, அதன் முதலீட்டாளர்களுக்கு அச்சமூட்டும் வகையிலான தங்கள் அபிப்பிராயத்தை பொதுவெளியில் வெளியிட்டு, அதன் பங்கு விலைகளை கடுமையாக இறங்கச் செய்வது; பொதுவெளியில் வெளியிடுவதற்கு முன்னரே அந்தத் தகவல்களை வேறு ஒரு தரகு நிறுவனத்திடம் கொடுத்து, அந்த நிறுவனப் பங்குகளை பியூச்சர்ஸ் மார்கெட்டில் நடப்பு உயர் விலைகளுக்கு விற்றுவிடுவது ஆகியவை நிச்சயமாக சுயலாப நோக்கத்துடன் செய்யப்படுபவைதான்.
- இப்படிப்பட்ட சுயலாபத்துக்காக ஒரு அயல்நாட்டு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதனால் இந்தியாவில் லட்சக்கணக்கான சிறு, பெரு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். தவிர, இந்தியாவின் ஒட்டுமொத்தப் பங்குச் சந்தை, மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவையும் பாதிப்புகளை சந்தித்தன.
- உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் செபி, ஹிண்டன்பர்க் ரிசர்ச்சின் இந்த நடவடிக்கைகள் குறித்து நோட்டீஸ் அனுப்பினால் அதை, இந்த நோட்டீஸ் ‘நான்சென்ஸ்’ என்று குறிப்பிட்டதுடன், ‘அந்த நிறுவனத்தை பாதுகாப்பதற்காகவும் அந்த நிறுவனத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களின் வாய்களை அடைக்கவும் நீங்கள் செய்யும் முயற்சி இது’ என்று பொதுவெளியில் தெரிவிக்கிறது.
- ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமெரிக்காவில் இயங்கும் நிறுவனம். அதன் நிறுவனர் ஆண்டர்சன் அமெரிக்காவில் வாழ்பவர். அதனால், செபி நேரடியாக நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. அமெரிக்க அரசு மற்றும் அமெரிக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையங்களிடம் முறையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இது போல லாப நோக்குடன் இந்திய சந்தைகளின் மீது செய்யப்படும் தாக்குதல்களைத் தவிர்க்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 07 – 2024)